புதுதில்லி:
உச்சநீதிமன்றத் தலையீட்டின் காரணமாகவே 127ஆவது திருத்தச் சட்ட முன்வடிவுகொண்டு வரப்பட்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம் கூறினார்.
முன்னதாக நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் புதன்கிழமையுடன் முடி வடைந்தது. மாநிலங்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 127ஆவது திருத்தச் சட்ட முன்வடி வின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று எளமரம் கரீம் பேசியதாவது:
அரசமைப்புச்சட்டத்தின் 127ஆவது திருத்தச்சட்டமுன்வடிவினை எங்கள் கட்சியின் சார்பில் ஆதரிக்கிறோம். இந்த அரசாங்கம்தான் செய்த தவறுகளைத் திருத்துவதற் காகவே, ஒரு கட்டாயத்தின் அடிப்படை யிலேயே இந்தச்சட்டமுன்வடிவைக் கொண்டு வந்திருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். எனினும் இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையே. நாம் அனைவரும் இதனை வரவேற்கிறோம். இதனை நிறைவேற்றுவதன் மூலமாக இந்த அரசாங்கமானது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று அது பீற்றிக்கொண்டால், அதனால் இத்தனை ஆண்டுகால மாக வடுப்பட்ட மக்கள் சிரிப்பார்கள். இந்த விஷயத்தில் இதன் கடந்த காலம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டதன் காரணமாகவே இந்த அரசாங்கம் இவ்வாறு இந்தச்சட்டமுன்வடிவைக் கொண்டுவருவதற்குத் தள்ளப்பட்டது.
ஒருதலைப் பட்சமான அணுகுமுறை
சமூகத்தில் நலிவடைந்த மற்றும் விளிம்புநிலை மக்கள் பிரிவினர் மீதான அணுகுமுறை யானது பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடம் எந்தக்காலத்திலுமே மாறாது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். நாட்டிலுள்ள மதச் சிறுபான்மையினர், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்குத் தங்கள் கடந்தகால அனுபவங்களிலிருந்து இந்த அரசாங்க மானது தங்களுக்கு எதிரானது என்பது நன்கு தெரியும். உண்மையில் அவர்கள் இந்த ஆட்சியின் கீழ் வாழ்வதற்குப் பயந்துகொண்டிருக் கிறார்கள்.
2018இல் நாடாளுமன்றத்தில் தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அந்தஸ்து அளிப்பதற்காக ஒருதிருத்தச்சட்டம் கொண்டுவந்தபோதே, இந்த அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையிலிருந்தே இது, இதர பிற்படுத்தப்பட்ட வர்கள் நலன்மீது எந்த அளவிற்கு அக்கறை (?) உள்ளது என்பது நன்கு தெரிந்தது. அப்போது அதில் ஒரு பிரிவினை இந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒரு வகுப்பார், சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர் என அறிவிக்கும் அதிகாரம், குடியரசுத் தலைவருக்கு மட்டுமே, அதாவது, ஒன்றிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு என்று கொண்டுவந்தது. அப்போது நாடாளுமன்றத்திலிருந்த எதிர்க்கட்சிஉறுப்பினர்கள், இந்தத் திருத்தமானது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காட்டுவது தொடர்பாக, மாநில அரசாங்கங்களுக்கு இருக்கின்ற உரிமைகளைப்பறித்திடும் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். ஆனாலும், இந்த அரசாங்கம் அவர்களின் ஆட்சேபணை களை யெல்லாம் துடைத்தெறிந்துவிட்டது.அதுவரையிலும், ஒன்றிய அரசாங்கம், தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலமாக, மத்தியப் பட்டியலுக்குத் தேவைப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காட்டியது. அதே சமயத்தில் மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள மாநிலபிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலின் கீழ் அடையாளம் காட்டி வந்தன. இந்தத் திருத்தம் சம்பந்தமாக இந்த ஆண்டு மே மாதத்தில் உச்சநீதிமன்றம் ஒரு வழக்கை விசாரித்து, குடியரசுத் தலைவரிடம், அதாவது ஒன்றிய அரசாங்கத்திடம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்று அறிவிக்கும் 102ஆவது திருத்தம் தொடர்பான அதிகாரம் குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டது.
மாநில அதிகாரம் பறிப்பை சுட்டிக் காட்டிய தீர்ப்பு
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மேற்படி திருத்தத்தின்மூலம் மாநில அரசாங்கங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டியது. ஒன்றிய அரசாங்கம், தாங்கள் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை என்று வாதம் புரிந்தபோதிலும், இதுநாள்வரையிலும் மாநில அரசாங்கங்களின் உரிமைகளைப் பறித்துள்ளது தொடர்பாக அதனைச் சரிசெய்திட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. ஒன்றிய அரசாங்கம் முன்பு செய்த தவறானநடவடிக்கையைச் சரிசெய்திட ஒரு திருத்தச்சட்டம் தேவைப்பட்டது. அதனைச் செய்வ தற்குப் பதிலாக, ஒன்றிய அரசாங்கம் மறுஆய்வு மனு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்தது. அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை அடையாளம் காட்டுவது தொடர்பாக மாநிலங்களின் உரிமைகளை மீண்டும் அளித்திடும் விதத்தில் ஒன்றிய அரசாங்கம் நேரடியாகவே ஒரு அரசமைப்புத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என்றும் அதனை இந்த மழைக்காலக்கூட்டத்தொடரிலேயே கொண்டுவர வேண்டும் என்றும் பணித்தது. எப்படியோ, காலத்தை மிகவும் வீணடித்தபின், இப்போதாவது இந்த அரசாங்கம் இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்திருக்கிறது.இது தொடர்பாக வேறுசில பிரச்சனைகளும் இருக்கின்றன. பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு கேரளாவிற்குப் பொருந்தாது. ஏனெனில் இது தொடர்பாக நீங்கள் நிர்ணயித்திருக்கும் அளவுகோல் கேரளாவுக்குப் பொருந்தாது. கேரளாவில் உள்ள குடும்பங்கள் பல அம்மாநிலத்தின் சமூக-பொருளாதார நிலைமைகளின் காரணமாக பொருளாதார ரீதியாக நலிவடைந்தவருக்கான இடஒதுக்கீட்டைப் பெற முடியாது. எனவே, இதுதொடர் பான நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்திடவேண்டும் என்று அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டாட்சி அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்
அடுத்த பிரச்சனை கிறித்தவ சமுதாயம் சம்பந்தமானதாகும். குறிப்பாக நாட்டிலுள்ள தலித் கிறித்தவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இப்போது கேரள மாநிலத்தில் நாடார் கிறித்தவசமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் அதனை அடித்துவிட்டது.ஏனெனில் அது 50 சதவீத வரையறைக்குள் வரவில்லை என்று கூறி அவ்வாறு அடித்து விட்டது. மேலும், எவருமே தலித் கிறிஸ்தவர்கள் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. அவர்களும் இட ஒதுக்கீட்டுக்கு உரியவர்களாவார்கள்.நாட்டின் கூட்டாட்சி அமைப்புமுறை நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். ஓர் அரசின் கடப்பாடுஎன்பது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் விடுதலைக்காகப் பாடுபடுவது என்பதும், சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை ஒழித்துக்கட்டுவது என்பதுமேயாகும்.இந்தச் சட்டத்திருத்தம் குறித்து இந்தக் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலேயே விவாதித்திருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை காரணமாக சுமார் 20 நாட்கள் வீணாகிவிட்டன. பெகாசஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டிலுள்ள குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் உளவு பார்க்கப்படக்கூடாது. இதுஅரசமைப்புச்சட்டத்திற்கு எதிரான அணுகுமுறையாகும்.இவ்வாறு எளமரம் கரீம் பேசினார். (ந.நி.)