india

img

பொருளாதாரத்தை மீட்க 8 புதிய திட்டங்கள்.... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு....

புதுதில்லி:
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க 8 புதிய திட்டங்களை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று அறிவித்துள்ளார். சுகாதாரம்,சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு 1.1 லட்சம் கோடிரூபாய் கடன் உத்தரவாதத் திட்டத்தையும் அவர்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

8 பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் செயல்படுத்தப் படும். அதில் 4 திட்டங்கள் புதியவை. சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டத்தின்படி சுற்றுலா துறையைச் சார்ந்தவர்கள் தங்கள் கடனை செலுத்தவும் தொழிலை மீண்டும் தொடங்கவும் கடனுதவி வழங்கப்படும்.சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்க ஒன்றிய அரசுமுடிவு செய்துள்ளது. அதன்படி, 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குஇலவச விசா அளிக்கப்படும்.

மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி களை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும்.அவசர கால கடன் வசதியாக தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலமும் தொழில்துறைக்கு கடனுதவி வழங்கப்படும்.7.95 சதவீத வட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமலில் இருக்கும். பிற துறைகளுக்கான கடனுக்கு வட்டி 8.25 சதவீதமாக இருக்கும். மற்ற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரும் உடன் இருந்தார்.