புதுதில்லி:
மத்திய அரசு வழங்கிய 21.80 கோடி கோவிட் தடுப்பூசிகளில், மாநிலங்களிடம் 1.90 கோடி கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் ஐந்து அம்ச உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை ஆகியவற்றுடன் தடுப்பூசி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது.அந்த வகையில், இதுவரை, சுமார் 21.80 கோடி (21,80,51,890) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. மொத்தம் 19,90,31,577 டோஸ் தடுப்பூசிகள் (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 1.90 கோடி (1,90,20,313) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஏறத்தாழ 40,650 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக வழங்கவுள்ளது.ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த, மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.