india

img

செய்தி சேகரிக்க தடை பத்திரிகையாளர்களை கண்டு அஞ்சும் மோடி அரசு

புதுதில்லி கொரோனா காலகட்டமான 2020இல், நோய் தொற்று அபாய வழிகாட்டு  நெறிமுறை என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப் பட்டது. கொரோனா தொற்று காலம் முடிந்து 4  ஆண்டுகள் நிறைவடைந்த பொழுதிலும், நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை முழுமையாக தளர்த்தாமல் மோடி அரசு அராஜகத்தில் ஈடுபட்டு  வருகிறது. ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அதா வது பாஜகவிற்கு நெருக்கமான “கோடி மீடியா”  ஊடகங்களின் பத்திரிகையாளர்களை மட்டுமே  நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்க  அனுமதி வழங்கி வருகிறது மோடி அரசு.

கூட்டணிக் கட்சிகளின் தயவால் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.,  மாணிக்கம் தாகூர் ஜூன் 27 அன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, “நாடாளு மன்றத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகை யாளர்களுக்கு கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கி, மீண்டும் பத்திரிகையாளர்களை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினார். இந்த கடிதத்திற்கு மோடி அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்தில் “மகர் துவார்” நுழைவு வாயிலில், நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் பேட்டி எடுப்பது நீண்ட காலமாக நடந்து வருவது தான்.  ஆனால், திடீரென மோடி அரசு திங்களன்று காலை “மகர் துவார்” நுழைவு வாயிலில் பத்திரிகை யாளர்கள் பேட்டி எடுக்கக் கூடாது என்றும், இது  தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிப்பு வெளி யிட்டு, பத்திரிகையாளர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றியது. இந்த அறிவிப்புக்கு எதிராகவும், நாடாளுமன்ற வளாகத்தில் முன்பிருந்த பல்வேறு அனுமதிகளுக்கு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், பிரஸ் கிளப் ஆப் இந்தியா சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்களும் போராட்டம் நடத்தி னர். பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள தடைகளை உடனடியாக நீக்கக் கோரிக்கை பதாகைகளுடன், கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டம்நடத்தினர்.

மூடி மறைக்கப்பட்ட செய்தி

நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் நாட்டில் மூடி மறைக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய “பிரஸ் கிளப் ஆப் இந்தியா” தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வீடியோ உடன் செய்தி தொகுப்பை வெளியிட்டது. அதன்பிறகு “கோடி மீடியா” பிரிவில் இல்லாத ஊடகங்கள் மட்டுமே நாடாளுமன்ற பத்திரிகையாளர்கள் போராட்டத்தை செய்தியாக வெளியிட்டன. பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள் வழக்கம் போல அம்பானி தனது மனைவியுடன் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றதையும், பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததையும் தலைப்புச் செய்தியாக இன்னமும் ஒளிபரப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.