india

img

பழங்குடி தொழில் முனைவோர் பற்றிய தகவலே அரசிடம் இல்லை - சு.வெங்கடேசன் எம்பி., கேள்விக்கு அமைச்சரின் அதிர்ச்சி பதில்!

நாடாளுமன்றத்தில் பழங்குடி நல அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பி இருந்த கேள்விக்கு அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிப்பதாகும்.

எவ்வளவு தொழில் முனைவோர்?

இந்தியாவில் உள்ள பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பழங்குடி தொழில் முனைவோரால் எத்தனை நிறுவனங்கள் நடத்தப்படுகிறது? குறு சிறு நடுத்தர தொழில்கள் தவிர்த்து பெரு நிறுவனங்களில் பழங்குடி தொழில் முனைவோர் எத்தனை பேர்? குறு சிறு நடுத்தர தொழில்களில் எத்தனை பழங்குடி தொழில் முனைவோர் கைகளில் உள்ளது? என்று சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பி இருந்தார்.

அமைச்சர் பதில்

இதற்கு பதில் அளித்துள்ள பழங்குடி நல இணை அமைச்சர் துர்கா தாஸ் உகே, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பழங்குடி தொழில் முனைவோரால் நடத்தப்படும் நிறுவனங்கள் குறித்த தரவுகள் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் இல்லை, உதயம் போர்டல் மற்றும் உதயம் அசிஸ்ட் ப்ரோக்ராம் ஆகியவற்றில் 01.07.2020 முதல் 22.07.2024 வரை பதிவு செய்யப்பட்டுள்ள குறு சிறு நடுத்தர தொழில்கள் 4,75,04,845 அவற்றில் பழங்குடி தொழில் முனைவோரால் நடத்தப்படுபவை 15,43,418 என்று கூறியுள்ளார். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் விவரங்கள் அரசிடம் இல்லாததால் பெரும் தொழில்கள் பற்றிய கேள்விக்கும் அமைச்சர் பதிலளிக்கவில்லை.

சு.வெங்கடேசன் எம்.பி கருத்து

பழங்குடி மக்களுக்கு பொதுச் சமூகத்துடனான பொருளாதார இடைவெளிகளை சரி செய்வது அரசின் கடமை. அதற்கான தரவுகளே அரசிடம் இல்லை. இந்திய நாட்டின் பெரும் தொழில்களில் இன்னும் "உயர் சாதியினர்" ஆதிக்கமே இருக்கிறது என்பது வெளிப்படை. அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்ற அரசியல் உறுதியிருந்தால் அதற்கு தரவுகள் முக்கியம். ஆனால் பழங்குடி நல அமைச்சகமோ அத்தகைய தரவுகள் தன்னிடமும் இல்லை, கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடமும் இல்லை என்கிறது. இந்தியாவில் சாதி வாரிக் கணக்கெடுப்பு தேவை என்பதை நிரூபிக்கிற சாட்சியம் இந்த பதிலாகும். தரவுகள் உள்ள குறு, சிறு நடுத்தர தொழில்களிலும் மக்கள் தொகையில் 8.06 சதவீதம் உள்ள பழங்குடியினர் மத்தியில் இருந்து வந்துள்ள தொழில் முனைவோர் எண்ணிக்கை 3.24 சதவீதம் தான் என்பதை அமைச்சரின் பதில் வெளிப்படுத்துகிறது.

பழங்குடி மக்களில் இருந்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்ததாய் பெருமைப்பட்டுக்கொள்ளும் அரசு, சுமார் 1.25 கோடி பழங்குடி மக்களின் வாழ்க்கை குறித்து காட்டும் அக்கறை இதுதானா?