india

img

விவசாயிகள் போராட்டம் பற்றி அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவதா? பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுதில்லி:
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் “திரும்பத்திரும்ப பொய் கூறுவதாகவும்”, “அவர்கள்தங்கள் சொந்த அரசியலுக்காக விவசாயிகளைப் பயன்படுத்திக் கொள்வ தாகவும்”  குற்றஞ்சாட்டுவதை பிரதமர்மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்திருக்கிறார்கள். பிரதமரின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு நேர்விரோத மானவைகளாகும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக,  சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ராகுல் காந்தி (காங்கிரஸ்), சரத்பவார் (தேசியவாதக் காங்கிரஸ்), டி.ஆர். பாலு (திமுக), பரூக் அப்துல்லா (ஜம்மு-காஷ்மீர் குப்கார் கூட்டணி), தேஜஷ்வி யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), து.ராஜா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி),திபங்கர் பட்டார்சார்யா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்), தேவ பிரத பிஸ்வாஸ் (அகில இந்திய பார்வர்ட் பிளாக்), மனோஜ் பட்டாச்சார்யா (புரட்சி சோசலிஸ்ட் கட்சி) ஆகியவர்கள் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்அவர்கள் கூறியிருப்பதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க  விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுதும் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் பதாகையின்கீழ்  அறைகூவல்விடுத்தன. இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் எவ்விதமான விவாதமும் இன்றி, முறையான பரிசீலனை இன்றிநிறைவேற்றப்பட்ட சமயத்தில், எங்களில் பலர் இதனை எதிர்த்தோம். இவற்றின்மீது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

எத்தகைய சீர்திருத்தங்கள்?
மோடி கூறியுள்ள குற்றச்சாட்டு களில் ஒன்று, முந்தைய காலத்தில் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் விவசாய சீர்திருத்தங்கள் தேவை என்று பேசியவர்கள் எல்லாம் இப்போது இந்தப் புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்பதாகும். ஆம்,நாங்கள் சீர்திருத்தங்களை வரவேற்கிறோம். ஆனால், எவ்விதமான சீர்திருத்தங்கள்? இந்தியவேளாண்மையை வலுப்படுத்து வதற்கு எதிர்க்கட்சிகள் சீர்திருத்தங் களைக் கோரின. விவசாயிகளின் வாழ்வில் செழுமையை உருவாக்க சீர்திருத்தங்கள் கோரின. நம் நாட்டுமக்களுக்கு உணவுப் பாதுகாப்புத்தொடர்வதை உத்தரவாதப்படுத்தக் கூடிய விதத்தில் சீர்திருத்தங்கள் கோரின. ஆனால் இப்போது வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் இந்தக் குறிக்கோள்கள் அனைத்தையும் அடித்து வீழ்த்துகின்றன.

பொய் கூறுவது யார்?
இவர் கூறுவதில் “மாபெரும் பொய்” என்பது எதிர்க்கட்சியினர் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து பொய் சொல்வதாகக் கூறுவதாகும். இதுதொடர்பாக சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கைஅமல்படுத்தப்பட்டுக் கொண்டிருப்ப தாக, பிரதமர் கூறுகிறார்.  இந்த அறிக்கையானது, குறைந்தபட்ச ஆதார விலை என்பது, விவசாய விளைபொருளின் உற்பத்திச் செலவினத்துடன் ஐம்பது சதவீதம்கூடுதலாகச் சேர்த்து விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதாகும். உண்மையில் இந்த அரசாங்கம் இவ்வாறு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில்  கூறியிருக்கிறது. யார், உண்மையல்லாதவற் றைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்?

உண்மை நிலவரம் என்னவெனில், விவசாயிகள் கடன்வலைக்குள் சிக்கி வெளிவரமுடியாமல் திண்டாடுவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதும், அவர்களில் பலர் வேறுவழிதெரியாமல் தற்கொலைகள் செய்துகொள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதுமேயாகும்.தில்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, அண்டை மாநிலங்களிலிருந்து தில்லியை நோக்கிவந்து குவிந்துள்ள, மற்றும் நாடுமுழுதுமிருந்து வந்துகொண்டிருக்கிற பல லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒற்றுமையும் உறுதியும் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே 32 விவசாயிகள் இப்போராட்டத்தில் தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.   

நாடாளுமன்றத்தைக் கூட்டுக!
எனவே தற்போதைய வேளாண் சட்டங்களையும், 2020 மின்சார திருத்தச் சட்டமுன்வடிவையும் ரத்துசெய்ய வேண்டும். விவசாயிகளுடனும் மற்றும் அனைத்துத்தரப்பின ருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்திடவேண்டும். இவ்வாறான கலந்தாலோ சனைகளின் அடிப்படையில் புதியசட்டங்களை உருவாக்கி நாடாளு மன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டி விவாதிக்க வேண்டும். (ந.நி.)

முகப்பு படம் : கோப்பு 

;