india

img

சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை : ஹன்னன் முல்லா...

புதுதில்லி:
வேளாண் சட்டங்களையும் மின்சாரச் சட்டத்தையும் திரும்பப் பெற முடியாது; வேண்டுமானால் அச்சட்டங்களில் சில திருத்தங்களை மட்டும் செய்துகொள்ள தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா கூறியதை முற்றாக நிராகரித்து,வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் ஓயாது என்று சம்யுக்தகிஷான் மோர்ச்சா (ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விவசாயி கள் எழுச்சி மேலும் தீவிரமடைந்துள்ளது. 

டிசம்பர் 8 பாரத் பந்த் போராட்டம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தை ஏதேனும் ஒரு வகையில் மட்டுப்படுத்த முடியுமா என இழி முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. விவசாயிகளின் குரலுக்கும் அவர்களுக்கு
ஆதரவாக நாடுமுழுவதும் போராடி வரும் மக்களின் குரலுக்கும் செவிசாய்க்காத மோடி அரசு, பாரத் பந்த் நடைபெற்ற செவ்வாயன்று மாலையில், சில குறிப்பிட்ட விவசாயிகள் சங்கங்களின் சில குறிப்பிட்ட நபர்களைமட்டுமே பிரதிநிதிகள் என்று பெயர் சூட்டிபேச்சுவார்த்தை என்று கூறி அழைத்துப் பேசியது. அரசு ஏதோ முடிவினை அறிவிக்கப் போகிறது என்று எண்ணி அக்கூட்டத்திற்குச் சென்ற மேற்கண்ட பிரதிநிதிகளிடையே வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் வாபஸ் பெற முடியாது; மாறாக அவற்றில் சில திருத்தங்களை செய்துகொள்வதற்கு அரசு ஒப்புக் கொள்கிறது, அதைஎழுத்துப்பூர்வமாகவே அளிக்கத் தயாராகஇருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். குறிப்பாக விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை முழுமையாக அளிப்பதற்கு அரசு பொறுப்பேற்கும் என ஒப்புக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக அளிக்கிறோம் என்று அமித்ஷாவின் உத்தரவின்பேரில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சக இணைச் செயலாளர் விவேக் அகர்வால் அறிக்கை வெளியிட்டார். உடனடியாக இந்த அறிக்கையையும் அமித்ஷாவின் ஆலோசனையையும் ஒன்றுபட்ட விவசாயி கள் முன்னணி நிராகரித்தது. 

இதைத்தொடர்ந்து புதனன்று ஆறாவது கட்டப் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்த நிலையில், அரசு மீண்டும் அதே கருத்தைஊடகங்களில் வெளியிட்டதால், பேச்சு வார்த்தையை நிராகரித்த விவசாயிகள் முன்னணி, வேளாண் சட்டங்களை முற்றாக ரத்து செய்வதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்று எச்சரிக்கை விடுத்தது.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி யின் தலைவர்களில் ஒருவரும் அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளருமான ஹன்னன்முல்லா, “மத்திய உள்துறை அமைச்சர், வேளாண் சட்டங்களை ரத்து செய்வது இல்லை என்று தெளிவாகவே கூறியிருக்கிறார். 

அதற்குப் பதிலாக சில திருத்தங்களை வேண்டுமானால் செய்துகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். நாங்கள் அதைப்பற்றி விவாதித்தோம். மத்திய அரசு முன்மொழியும் திருத்தங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டங்களை முற்றாக ரத்து செய்ய வேண்டும். இதில் இடையில் ஒரு பாதையில் செல்வது என்ற சிந்தனைக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாக கூறினார்.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, பாரதிய கிஷான் யூனியன் தலைவர்களில் ஒருவரான ஜோகிந்தர் உக்ரஹான், சில குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து அமித்ஷா பேச்சு நடத்தியதே அராஜகமானது; கண்டிக்கத்தக்கது. இவர்கள் என்னதான் விவசாயிகளுடைய ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சித்தாலும், புரிந்துணர்வை குலைக்க முயற்சித்தாலும் அதில் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.

அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் அசோக் தாவ்லே கூறுகையில், வரலாறு படைத்துள்ள இந்திய விவசாயிகளை, அவர்களது  அடிப்படையான கோரிக்கையை ஏற்க மறுத்து, மத்திய பாஜக அரசுசிறுமைப்படுத்தி வருகிறது; கார்ப்பரேட்டு களுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை எந்தவிதத்திலும் கைவிட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறது; ஆனால் இந்தப் போராட்டத்தில் பாஜக அரசு விவசாயி களிடம் வீழ்வது உறுதி; அடுத்தடுத்தப் போராட்டங்கள் மோடி அரசுக்கு மிகக் கடுமை யான நிர்ப்பந்தங்களை உருவாக்கும் என்று எச்சரித்தார்.இதைத்தொடர்ந்து டிசம்பர் 12 அன்று ராஜஸ்தானிலிருந்து தில்லி வரும் பிரதான சாலையான ஜெய்ப்பூர் - தில்லி நெடுஞ்சாலையை முற்றாக ஸ்தம்பிக்கச் செய்யுமாறும், சுங்கச்சாவடிகள் அனைத்திலும் பெரும் எண்ணிக்கையில் அதிரடியாக நுழைந்து தில்லிக்கு அணிதிரளுமாறும் சம்யுக்த கிஷான் மோர்ச்சா (ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) அழைப்பு விடுத்தது.

மேலும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து இன்னும் அதிக எண்ணிக்கையில் தில்லி நோக்கி வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது.மேலும் நாடு முழுவதும் டிசம்பர் 14 துவங்கி மாநிலத் தலைநகரங்கள், மாவட்டத் தலைநகரங்களில் தொடர் தர்ணாக்களை நடத்துவது எனவும் அழைப்பு விடுத்தது.அதுமட்டுமின்றி, யாருக்கு ஆதரவாக மோடி அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளதோ அந்த அதானி, அம்பானி ஆகிய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும் அதானி, அம்பானி நிறுவனப் பொருட்களை புறக்கணிப்பது என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானி, அம்பானி கூட்டுக்களவாணிகளை மோடி அரசே பாதுகாக்காதே” என்ற முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.இந்த அறைகூவல்களைத் தொடர்ந்து மோடி அரசை நிர்ப்பந்திக்கும் விதமாக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் வியாழனன்று, போராட்டங்களின் அடுத்தக்கட்டமாக தில்லியில் எல்லையில் உள்ள விவசாயிகள் தலைநகருக்குள் நுழைந்து உச்சக்கட்ட போராட்டத்தை நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுப்போம் என தலைவர்கள் அறிவித்துள்ளனர். 

====நியூஸ் க்ளிக், ஐஎன்என்====

;