திங்கள், ஜனவரி 25, 2021

india

img

தோழர் சரோஜ் முகர்ஜி பிறந்த நாள்...

தோழர் சரோஜ் முகர்ஜி 1911 ஆம் ஆண்டு ஜனவரி 14ல் பிறந்தார்.இவர் மாணவப் பருவத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1924 முதல் 1931 வரை இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்றினார். 1930ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு கைதானார். பின்பு பி.ஏ. படித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்தே தேர்வெழுதி வெற்றி பெற்றார். 1938ல் விடுதலையான சரோஜ் முகர்ஜி பின்னர் எம்.ஏ மற்றும் சட்டம் பயின்றார்.

1931ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சரோஜ் முகர்ஜி 1938ல் கட்சியின் முழுநேர ஊழியராகிப் பணியாற்றினார். 1941ல் கம்யூனிஸ்ட் தோழர் கனக் தாஸ் குப்தாவை மணந்தார். கல்கத்தா மாவட்டச் செயலாளர், மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றினார். 1964ல் கட்சி பிளவுபட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். கணசக்தி நாளிதழின் ஆசிரியர் பணியைத் திறம்படச் செய்தார். 1964 முதல் இறக்கும் வரை மத்தியக்குழு உறுப்பினராகவும் 1972 முதல் மேற்கு வங்க மாநிலச்செயலாளராகவும் 1986 முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியின் அமைப்பாளராக அவரது இறுதிக் காலம் வரை சிறப்பாகப் பணியாற்றினார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.1990ஆம் ஆண்டு பிப்ரவரி 10ல் காலமானார்.

===பெரணமல்லூர் சேகரன்===

;