headlines

img

உண்மையான  காரணம் என்ன? 

கொரோனா நோய்த் தொற்றை நாடு சிறப்பாகஎதிர்கொண்டது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.தம்மைத்தாமே பாராட்டிக் கொள்வது மத்தியஅமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் வாடிக்கையாகப் போய்விட்டது. 
கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை தலைநகர் தில்லியை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கைவிடப்படுகிறது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை உண்மைதான் என்பதை உணர்த்துவதாக நாட்டின் நடப்புகள் அமைந்துள்ளன. 

தற்போது ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் தினமும் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற சூழலில் கூட்டத்தொடரை நடத்துவது ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதாகிவிடுமோ என்ற அச்சம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றுதினமலர் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் தில்லியில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. அதை கட்டுப்படுத்துவதற்கு தில்லி மாநில முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திங்களன்று நடைபெற்றது. அதில் 12 அம்சதிட்டம் உருவாக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகள் கொரோனா கட்டுப்படுத்துதலை அலட்சியம் செய்வதாகவே அமைந்திருக்கிறது. மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தராமல்பாரபட்சம் காட்டுவதே அதற்கு காரணமாகும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு பட்ஜெட் கூட்டத்தொடருடன் இணைத்து நடத்தப்படலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆறு மாத இடைவெளியில் கூட்டத் தொடர் நடத்தப்பட வேண்டுமென்றுதான் விதிகள் உள்ளன. ஆனால்நவம்பர் மற்றும் டிசம்பரில் குளிர்கால கூட்டத் தொடர் நடத்தியே ஆக வேண்டும் என்று விதிஏதுமில்லை என்று நாடாளுமன்ற உயரதிகாரிகள் சில பரிந்துரைகள் தயார் செய்துள்ளதாக மேலும் அந்த தகவல் கூறுகின்றது. தற்போது உள்ள பல்வேறு அவசர சட்டங்களுக்கும் கூட்டத்தொடரை கூட்டி ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் அரசுக்கு இல்லை. அதனாலேயே கூட்டத் தொடரை தள்ளி வைக்கிறபரிந்துரையை அதிகாரிகள் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. உண்மையில் இத்தகைய தள்ளிவைப்புக்கான காரணம் மத்திய ஆட்சியாளர்களின் விருப்பமான புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அடுத்த கூட்டத் தொடரை நடத்தலாம் என்பதே காரணமாக தெரிகிறது.

ஆயினும் நாட்டின் தலைநகரிலேயேகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது எளிதாக இல்லை என்பதையே இத்தகைய நிலைமைஉணர்த்துகின்றது. மத்திய அரசின் அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக மாநில அரசின்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்காதது அந்தமாநில மக்களுக்கு செய்யும் துரோகமாகும். அதைவிடுத்து  கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தியிருக்கிறோம் என்று  கூறிக்கொள்வது மக்களை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல; காவு கொடுக்கும் கயமையாகும்.
 

;