headlines

img

மோடி அரசே, எச்சரிக்கை!

 நமது தாய்த் திருநாட்டின் 71-ஆவது குடியரசு தினம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் எழுச்சியை தோற்றுவித்திருக்கிறது. மதச்சார்பற்ற விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒட்டுமொத்த தேசமும் கையில் ஏந்தி, அதன் முகவுரையை வீதிகளில் கூடிக் கூடிப் படித்து, மக்கள் மனங்களில் அதையே ஒரு ஆயுதமாக்கிய மகத்தான போராட்டப் பேரலையை குடியரசு தினம் கண்டது. 2002ஆம் ஆண்டு வரை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே ஏற்றுக் கொள்ளாத, இப்போது வரை இந்தியா எனும் மகத்தான மதச்சார்பற்ற தேசத்தை ஏற்றுக் கொள்ளாத ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல், ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து கொண்டு, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அழகான இந்திய தேசத்தை மதவெறியும் கொடூரங்களும் கோலோச்சுகிற பாசிச இந்து ராஷ்ட்டிரமாக மாற்றும் நோக்கத்தோடு குடியுரிமை திருத்தச் சட்டம் - தேசிய குடியுரிமை பதிவேடு - தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அம லாக்க முயற்சித்து வருகிறது. அதை எதிர்த்து குடி யரசுத் தினத்தையே மாபெரும் போராட்ட தின மாக மாற்றியிருக்கிறார்கள் இந்திய மக்கள். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அரசியல் சாசன உறுதியேற்பு போராட்ட நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று, மோடி அரசுக்கு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக கேரளத்தில் இடது ஜன நாயக முன்னணியின் அழைப்பை ஏற்று வட முனையில் காசர்கோடு துவங்கி தென்முனையில் களியக்காவிளை வரை 70 லட்சம் மக்கள் கரம்கோர்த்து மாபெரும் மனிதச் சங்கிலியை நடத்தி காட்டியிருக்கிறார்கள். கொல்கத்தா நகரில் மட்டும் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு பல்லா யிரக்கணக்கான மக்கள் மனிதச் சங்கிலியாக கரம்கோர்த்த நிகழ்வு பதிவாகியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்குவதற்கான மத்திய அரசின் நகர்வுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் மிகத்தெளிவான குரலில், மிகவும் ஆர்ப்பரிப்பான குரலில் முழங்கியிருக்கிறது; தில்லியில் பல்வேறு இடங்களில் இந்த உணர்வை நான் நேரில் அனுபவித்தேன்; இதுதான் இந்தியாவின் ஆன்மா; மதம், மொழி,  உணவுப் பழக்கவழக்கங்கள், சாதி, பாலினம், பிராந்தியம், நிறம் அல்லது முற்கால பெருமிதங்கள், அனைத்திற்கும் மேலாக பிரதமர்  குறிப்பிட்ட ‘உடைகள்’ - ஆகிய அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி, தூர எறிந்துவிட்டு, நான்  இந்தியக் குடிமகன்/குடிமகள் என்ற ஒற்றை  உணர்வோடு மொத்த தேசமும் கைகோர்த்திருக் கிறது; இதுவே இந்தியாவின் இதயம்” என்று பொருத்தமான முறையில் குறிப்பிட்டிருக்கிறார்.  இதைவிட இன்னும் வலுவான குரல் ஜனவரி 30 மகாத்மா காந்தி தியாக தினத்தில் எழ இருக்கிறது... மோடி அரசே எச்சரிக்கை!

;