headlines

img

பெண் தலைவர்கள்! - கொரோனா போரில் 7 நாடுகளின் பொதுத் தன்மை

அவீவா விட்டன்பெர்க் கோக்ஸ்

உலக அளவில் செயல்படும் ‘20-முதலாவது’ (20-first) என்ற பாலினப் பிரச்சனைகள் கலந்தாய்வு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் தொழில்-வணிகத் துறையில்  பாலின சமத்துவம் குறித்து எழுதிவருகிறவர்.

ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் மெய்யான தலைமைக்கான முன்னுதாரணங்களைத் தேடுகிறீர்களா? ஐஸ்லாந்து முதல் தைவான் வரை, ஜெர்மனி முதல் நியூசிலாந்து வரை பெண்கள், மனிதக் குடும்பத்திற்காக, ஒரு சீர்குலைவான நிலைமையைக் கையாள்வது எப்படி என்று உலகத்திற்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஃபின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளும் இணைந்துகொள்ள, அதிபர் மாளிகைகளெல்லாம் தகித்துக்கொண்டிருக்கும் வேளையில், பெண்களால் என்ன சாதிக்க முடியும் என்று இந்தப் பெருந்தொற்றுப் பேரிடர் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் சிறிய நாடுகள்தான் என்றோ, தீவுகள்தான் என்றோ, வேறு காரணங்களையோ பலர் சொல்வார்கள். ஆனால் ஜெர்மனி ஒரு பெரிய நாடு, இதில் முன்னணியில் இருக்கிறது. யுகே (பிரிட்டன்) ஒரு சிறிய தீவு, இதில் எதிர்மறை விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஈர்ப்புள்ள, மாற்று வழிமுறைகளை நமக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நமக்குக் கற்பிப்பது என்ன?

வாய்மை

ஏஞ்ஜெலா மெர்க்கெல், ஜெர்மனி அரசுத் தலைவர், முன்கூட்டியே எழுந்தார், தன் நாட்டு மக்களிடம் இதுவொரு மோசமான கிருமி, மக்களில் 70 சதவீதத்தினர் வரையில் இது தொற்றக்கூடும் என்று கூறினார். “சீரியஸ் பிரச்சனை இது, சீரியஸாக இதை எடுத்துக்கொள்ளுங்கள்,” என்றார் அவர். அவர் இதை அப்படித்தான் எடுத்துக்கொண்டார், மக்களும் அப்படியே எடுத்துக்கொண்டார்கள். தொடங்கட்டும் என்று அறிவித்த நொடியிலிருந்தே பரிசோதனைகள் தொடங்கின. உலகின் வேறு பல பகுதிகளில் நாம் கண்ட மறுப்பு, ஆத்திரம், பொறுப்பின்மை ஆகிய கட்டங்களையெல்லாம் ஜெர்மனி தாவிக் கடந்தது. ஐரோப்பாக் கண்டத்தில் அண்டை நாடுகளை விடவும் ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகக் குறைவு. கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்தத் தொடங்குவார்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 

தீர்மானகரம்

முதலாவதாகவும் விரைவாகவும் நடவடிக்கைகள் மேற்கொண்டவர்களில் ஒருவர் தைவான் குடியரசுத் தலைவர் த்சாய் இங்-வென். இந்தப் புதிய நோயின் முதல் அறிகுறி தெரிந்தவுடனேயே அவர், மற்ற நாடுகளிலெல்லாம் நடைமுறையில் உள்ள ஊடரங்குகளை நாடாமல், தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக 124 நடைமுறைகளைக் கொண்டுவந்தார். இப்போது அவர் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு கோடி முகக்கவசங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார். சிஎன்என் செய்தி நிறுவனம் “உலகின் மிகச் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்று” என்று குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டு, தொற்றுப் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறார். தைவானில் கொரோனாவுக்குப் பலியானவர்கள் 6 பேர் மட்டுமே.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டென் ஊரடங்கை முன்கூட்டியே செயல்படுத்தியவர். நாட்டை உச்ச அளவில் விழிப்போடு வைத்திருப்பதிலும், அது எதற்காக என்பதிலும் அவர் மிகுந்த தெளிவோடு இருந்தார். நாடு மொத்தமுமே 6 பேருக்குத்தான் தொற்று ஏற்பட்டிருந்தது என்ற நிலையிலும் அவர், வியக்கத்தக்க வகையில், நியூசிலாந்துக்குள் நுழைகிறவர்களுக்கான சுய-தனிமையை முன்னதாகவே செயல்படுத்தினார். பின்னர் விரைவிலேயே ஒட்டுமொத்தமாக வெளிநாட்டவர்கள் வரத் தடை விதித்தார். தெளிவான, தீர்மானகரமான செயல்முறைதான் நியூசிலாந்தைக் கொரோனா புயலிலிருந்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாத நடுக்கட்டம் வரையில் அங்கே 4 உயிரிழப்புகள்தான் நேர்ந்துள்ளன. மற்ற பல நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியுமா என்று பேசிக்கொண்டிருக்கிறபோது ஆர்டென் கூடுதல் கட்டுப்பாடுகளைச் சேர்த்துள்ளார். நாடு திரும்பும் நியூசிலாந்தியர்கள் அனைவரும் 14 நாட்கள் குறிப்பிட்ட இடங்களில் தனிமையில் இருக்கச் செய்துள்ளார்.

தொழில்நுட்பம்

ஐஸ்லாந்து நாடு, பிரதமர் கேட்ரின் ஜேகோப்ஸ்டோட்டிர் தலைமையில், தனது குடிமக்கள் அனைவருக்கும் கொரோனாக்கிருமி பரிசோதனைகளை இலவசமாகச் செய்கிறது. அதன் மூலம், கோவிட்-19 பரவுதல், உயிரிழப்பு விகிதங்கள் தொடர்பான உண்மை நிலவரம் குறித்த ஆய்வுக்கான முக்கியமானதொரு களச்சான்று நாடாக ஐஸ்லாந்து மாறவிருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் தொற்றுள்ள மக்களுக்கு வரம்புக்கு உட்பட்ட பரிசோதனைகளே செய்யப்படுகின்றன. இந்த நாட்டிலோ ஒருவர் விடாமல் அனைவருக்கும் பரிசோதனை. மக்கள்தொகை விகிதத்தோடு ஒப்பிடுகையில் தென் கொரியாவை விட ஐஸ்லாந்து ஐந்து மடங்கு மக்களுக்குப் பரிசோதனைகளை ஏற்கெனவே செய்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான முழுமையானதொரு செயல்முறையும் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது ஊரடங்கு இல்லாமலே, பள்ளிகள் மூடப்படாமலே.

ஃபின்லாந்து பிரதமராகக் கடந்த டிசம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டு  உலகத்தின் மிக இளவயது அரசுத் தலைவரானவர் சன்னா மாரின். கொரோனோக்கிருமி நெருக்கடியை எதிர்கொள்ளும் போரில் முன்வரிசை வீரர்களாக சமூக ஊடகங்களில் ஆளுமையோடு இருப்பவர்களை பயன்படுத்துகிற வழி ஆயிரத்தில் ஒரு தலைவருக்குத்தான் தோன்றும். எல்லோரும் செய்தி ஏடுகளைப் படிப்பதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, சமூக ஊடகங்களில் செல்வாக்கோடு செயல்படுகிறவர்களுக்கு, அவர்கள் எந்த வயதினரானாலும், இந்தப் பெருந்தொற்றுப் பேரிடரைக் கையாள்வது தொடர்பான,  உண்மைகளின் அடிப்படையிலான தகவல்களைப் பரப்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்பு

நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், தனது நாட்டுக் குழந்தைகளோடு நேரடியாகப் பேசத் தொலைக்காட்சியைப் பயன்படுத்துகிற ஒரு புதுமையான வழியை யோசித்தார். டென்மார்க் பிரதமர் மெட்டீ ஃபிரெடெரிக்சன் இரண்டு நாட்களுக்கு முன் குறுகிய, 3 நிமிட செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை ஒன்றை நடத்தியிருந்தார். அதை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு விரிவுபடுத்திய சோல்பெர்க், முழுக்க முழுக்கக் குழந்தைகளுக்காகவே அந்தச் சந்திப்பு நிகழ்வை நடத்தினார். அச்ச உணர்வு சரியானதே என்று விளக்குகிற அளவுக்கு நேரம் எடுத்துக்கொண்டு, நாடு முழுவதுமிருந்து குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்த யோசனையின் சுயமான மூலத்தன்மையும் வெளிப்படையான தெளிவும் எவரையும் ஈர்க்கும்.

இது போல் இன்னும் எத்தனையோ விதங்களில் எளிமையான, மனிதத்தோடு இணைந்த புத்தாக்கச் செயல்பாடுகளைப் பெண் தலைமையால் வழங்க முடியும்!

பொதுவாக, இந்தப் பெண் தலைவர்கள் எல்லோரும் வெளிப்படுத்தியுள்ள பரிவும் அக்கறையும் நமக்குப் பழகிப்போன இந்தப் பேரண்டத்திலிருந்து அல்லாமல், வேறு ஏதோவொரு மாற்றுப் பேரண்டத்திலிருந்து வந்தவை போலத் தோன்றுகின்றன. அவர்களுடைய வீடியோக்களிலிருந்து தங்களுடைய கைகளை வெளியே நீட்டி உங்களை நெருக்கமாகப் பற்றிக்கொண்டு இதயப்பூர்வ உணர்வோடும் அன்போடும் அணைத்துக்கொள்வது போல் இருக்கிறது. தலைவர்களால் இத்தகைய உணர்வை ஏற்படுத்த முடியும் என்று யாருக்குத் தெரியும்? இப்போது நாம் உணர்கிறோம்.

இப்போது, “மற்றவர்கள்” மீது பழிபோடுவது, நீதித்துறையைக் கைப்பற்றுவது, ஊடகவியலாளர்களைக் கலவரப்படுத்துவது, ‘நான் ஒருபோதும் ஓயமாட்டேன்’ என்பதான இருட்டுப் போர்வையில் தள்ளுவது என பீதியில் ஆழ்த்தும் அதிகாரத்துவச் சூதாட்டத்தை முடுக்கிவிடுதற்குத் தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தும் வலியவர்களோடு (டிரம்ப், போல்சொனாரோ, ஓப்ராடர், மோடி, டூட்டெரேட், ஓர்பான், புடின், நேதன்யாஹூ…) இந்தத் தலைவர்களையும் செய்திகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

பெண்களின் தலைமை வழிமுறைகள் மாறுபட்டவையாக, பயனுள்ளவையாக இருக்கும் என்பதைப் பல்லாண்டுக் கால ஆய்வுகள் தயங்கித் தயங்கி எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும், பல அரசியல் அமைப்புகளும் தொழில் நிறுவனங்களும் பெண்கள் தலைமைப் பாத்திரம் ஏற்கவோ, வெற்றிபெறவோ வேண்டுமென்றால் பெருமளவுக்கு ஆண்களைப் போலவே நடந்துகொள்ள வேண்டுமென ஏற்க வைப்பதற்குத்தான் முயல்கின்றன. ஆனால் பெண்களிடமிருந்து ஆண்கள் கற்றுக்கொள்ள விரும்பக்கூடிய ஏழு தலைமைப் பண்புகளுக்கான அனுபவச் சான்றுகளாக இந்த நாடுகளின் தலைவர்கள் திகழ்கிறார்கள்.

இதை நாம் அங்கீகரிக்க வேண்டிய, இப்படிப்பட்டவர்களை அதிகமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதை உணர வேண்டிய தருணம் இது.

தமிழில்:  அ.குமரேசன்



 

;