headlines

img

அரசு மருத்துவர்களுக்கு மட்டும் எதிரான தீர்ப்பல்ல இது...

சூப்பர் ஸ்பெஷாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஐம்பது சதவீத இடஒதுக்கீடு இந்தாண்டு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில்நீதித்துறை எதிர்மறையான கண்ணோட்டத்தையேகொண்டுள்ளது என்பது பல்வேறு வழக்குகளில்வெளிப்படுகிறது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஐம்பது சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கிலும் இந்தாண்டு இல்லை என்றே உச்சநீதிமன்றம் கூறியது கவனிக்கத்தக்கது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூரப் பகுதிகளிலும், கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் ஐம்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. 2000 ஆம்ஆண்டில் மருத்துவ மேற்படிப்பு விதிகளை காட்டிமத்திய அரசு இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ உயர் படிப்புகளில் ஐம்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டது. தனியார் மருத்துவர்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களும் இதற்கு கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தனியார்மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த அதிர்ச்சியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்புகளில் பாதியளவு இடங்களை அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் போது,உயர் தகுதி பெற்ற மருத்துவர்கள் அரசு மருத்துவர்களாக அவர்களது பணிக்காலம் வரைபணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. ஏழை, எளியமக்களுக்கு உயர் தரத்திலான மருத்துவம் கிடைக்கவும், தமிழகத்தின் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தவும் இது உதவியாக இருந்தது. 

ஆனால் மத்திய அரசு அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே மருத்துவ உயர்படிப்பு சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறுகிறது. இதில் மாநில அளவிலான இட ஒதுக்கீடோ,சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடோஇல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தனியார் மருத்துவமனைகளிலும், வெளி மாநிலங்களை சேர்ந்த தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்களுக்கே சாதகமாக இருக்கும். இவர்கள் அரசு செலவில் படித்துவிட்டுபெரும் ஊதியத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்றுவிடுவர். அவர்களது திறமை அரசு மருத்துவமனைகளுக்கு கிடைக்காது. இதை கருத்தில் கொண்டுதான் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மருத்துவத்தை முழுக்கமுழுக்க தனியார்மயமாக்கும் போக்கு கோடிக்கணக்கான ஏழை,  எளிய மக்களுக்கு மருத்துவத்தை மறுக்கும் நிலைக்கே இட்டுச் செல்லும். இந்த தீர்ப்பும் அதற்கே அனுசரணையாக உள்ளது.
 

;