headlines

img

மாநில உரிமைகளை  எள்ளி நகையாடுவதா?

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்கள்மாநாட்டை மத்திய அரசு நடத்தியுள்ளது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றியுள்ளனர். கல்வி என்பது தற்போது பொதுப் பட்டியலில் உள்ளது. ஆனால் இந்தப் புதிய கல்விக் கொள்கை முற்றாக கல்வியை  மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தை உடையது என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே இந்த கூட்டம் அமைந்துள்ளது.

மாநில அரசுகளுடன் இந்தக் கொள்கை குறித்து இதுவரை மத்திய அரசு எந்தவொரு ஆலோசனையும் நடத்தவில்லை. மாநிலங்களின் கருத்துக்களை முறையாக கேட்டறியவும் இல்லை. வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள விசயங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், நேரடியாக ஆளுநர்கள்மற்றும் துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துகிறது மத்திய அரசு. இப்போதுதான் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ஒரு பொருத்தமற்ற குழுவை அமைத்துள்ளது. பல மாநில அரசுகள் புதிய கல்விக் கொள்கைகுறித்து விவாதிக்கவில்லை. சட்டமன்றங்களில் விவாதிக்கப்படவும் இல்லை. ஆனால் நேரடியாக கல்விக்கொள்கை குறித்து கருத்தரங்கம்நடத்துகிறது மத்திய அரசு. மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தி இந்தக் கொள்கையின் சாதக-பாதகங்கள் குறித்து கேட்கும் குறைந்தபட்ச ஜனநாயகப் பண்பு கூட மத்திய அரசுக்கு இல்லை. 

ஆளுநர்கள் மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவர் தேசிய கல்விக் கொள்கை 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்குக்கேற்ப இந்தியாவை வழிநடத்திச் செல்லும் என்று கூறியுள்ளார். இந்திய மொழிகள் மற்றும் கலை -கலாச்சாரத்திற்கு இந்தக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள அவர், இந்திய ஒற்றுமையை இந்தக்கொள்கை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும், கலாச்சாரம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தையும் வம்படியாகத் திணிக்கும்போது இந்திய ஒருமைப்பாடு சிதைக்கப்படுமே யன்றி, எப்படி வலுப்படும்?

ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறி வந்த கல்வி முறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பத்தைத் தான் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் திணிக்கிறது மோடி அரசு. அந்நியப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது உள்பட இந்தக் கொள்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் சுயசார்பு எங்கிருந்து வரும்?

இந்த கூட்டத்துடன் மத்திய அரசு நிற்கவில்லை. அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள்கூட்டத்தை நடத்தி புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை அனுப்ப வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். ஆளுநர்களே அனைத்தையும் நடத்துவார்கள் என்றால் மாநில அரசுகள் எதற்காக என்ற கேள்வி எழாதா? இந்தக் கொள்கை உருவாக்கப்பட்ட விதம் மற்றும் திணிக்கப்படும் முறையிலிருந்தே இது முற்றிலும் தவறான ஒன்று என்பதை புரிந்து கொள்ளமுடியும்.