headlines

img

வாய்ப்பந்தல் நிழல் தராது

இராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுள்ளது. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழகம் பெற்றுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி பேசியுள்ளார். தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்படுவது வரவேற்கத்தக்க  ஒன்று. வெறும் அடிக்கல் நாட்டு விழாவோடு நின்றுவிடாமல் உடனடியாக புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கப்படு வதும் போதுமான கட்டமைப்பு வசதிகளுடன்  இந்தக் கல்லூரிகள் செம்மையாக செயல்படு வதும் அவசியம். இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளால் மருத்து வப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கும். ஆனால் இதன்பலன் தமிழக மாணவர்களுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே  உள்ளது. சட்டப்பேரவையில்  தீர்மானம் நிறை வேற்றிய பிறகும் நீட் தேர்விலிருந்து தமிழக த்திற்கு விலக்கு அளிக்க  மத்திய மோடி அரசு மறுத்து வருகிறது. நீட்தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமான நிலையில் இந்தத்தேர்வினால் மருத்துவப் படிப்பின் தரம்உயரும் என்றவாதம் முற்றிலும் பொய்யானது என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குப் பெறவும் இந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை மூலம் தமிழக மாணவர்கள் பலன் பெறுவதையும் உத்தரவாதப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. இராமநாதபுரம் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு அரணாக செயல் படுவதாக கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி அனைத்துப் பகுதி மக்களும் போராடி வருகின்றனர். இந்த  திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்ற மாநிலங் களவையில் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு அளித்திருக்காவிட்டால் இந்தச் சட்டமே நிறைவேறியிருக்காது என்ற ஆதங்கம் தமிழக மக்களுக்கு உள்ளது.  இந்தசட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவருக்கும் அதிமுக அரசு துரோகம் இழைத்துள்ளது. இதை  வெறும் வாய்ப்பந்தலால் மறைத்துவிடமுடியாது. மேலும் இந்த சட்டத்தை நாடாளுமன்றத் தில் ஆதரித்து வாக்களித்த ஐக்கிய ஜனதாதளம் பீகார் சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கேரளம், பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்கள் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.  ஆனால் இத்தகைய ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற மறுப்பதும், இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் நடைமுறைப் படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசுவதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தநிலையில் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறிக்கொண்டே இந்தச்சட்டத்தை நிறைவேற்ற துணை நிற்பதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்பது உண்மையானால் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை ஏற்கமாட்டோம் என முதல்வர் அறிவிக்கவேண்டும். செய்வாரா?

;