headlines

img

வரவேற்கத்தக்க தீர்ப்பும் ஏற்க முடியாத கருத்தும்

மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை உள்ளடக்கி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்ட அரசு மருத்துவர்களின் இடமாறுதல் உத்த ரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் ஊதிய உயர்வை அரசு ஒப்புக் கொண்டபடி வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக் கேற்ப போதுமான அளவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மருத்துவ உயர்கல்வி படிப்புகளில் அரசுப்பணி யில் உள்ள மருத்துவர்களுக்கு ஐம்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராடுபவர்களை அழைத்துப் பேசி அவர்க ளது கோரிக்கைகளை பரிசீலிக்க மாநிலஅரசு மறுத்தநிலையில், வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்தது. போராடும் மருத்துவர்களை பணி நீக்கம் செய்து விட்டு புதிய நியமனங்கள் செய்யப் படும் என அரசு மிரட்டியது.  இந்நிலையில், நோயாளிகளின் நலன் கருதி வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக அரசு மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால் மாநில அரசு போராட்டம் நடத்திய மருத்துவர்க ளை பழிவாங்கும் நோக்கத்துடன் மெமோ கொடுத்து இடமாறுதல் செய்தது. 

உயர் பொறுப்புகளில் இருந்த மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப் பட்டதோடு, தொலை தூர மாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். இந்த நிலையில், இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டு மென நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இடமாறுதலுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம், தற்போது பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இடமாறுதலையும் ரத்து செய்து உத்தரவிட்டுள் ளது. இது வரவேற்கத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் அரசு மருத்துவர்கள் போராட  உரிமையில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. கருத்து ரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை போன்று போரா டும் உரிமையையும் அரசியல் சாசனம் உத்தரவா தப்படுத்தியுள்ளது. யாரும் பொழுதுபோக்கிற்காக போராடுவதில்லை. நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் வேறு வழியின்றிதான் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத் திற்கு அரசுதான் காரணம் என்று சரியாக குறிப் பிட்டுள்ள நீதிமன்றம், அவர்களை அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளது. அவ்வாறு பிரச்சனை தீர்க்கப்ப டாத நிலையில் வேலைநிறுத்தம் செய்வது தவிர வேறு என்ன வழி என்று நீதிமன்றம் விளக்கு மா? பல்வேறு தருணங்களில் போராட்டங்களுக்கு எதிராக நீதிமன்றம் கருத்துக்கூறுவது ஜனநாய கத்திற்கு நல்லது அல்ல.

;