headlines

img

இனியேனும் ஆளுநர் அடாவடி செய்யாதிருக்கட்டும்

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு  விலக்கு அளிக்கக் கோரும் சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. மாநில அரசுகள் ஒன்றிய அரசின் கொத்தடிமைகள் அல்ல என்பது தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு  அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறை வேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத் தது. இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் இழுத்தடித்தார். தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்ற போது அவரும் இழுத்தடித்து பின்னர் சந்தித்தார். எனினும் ஒன்றிய அரசு இந்த மசோதாவை ஆளுநரிடமிருந்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப எந்த முயற்சியும் எடுக்க வில்லை.

இந்தப் பின்னணியில் 142 நாட்களுக்குப் பிறகு  இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி னார். சட்டப்பேரவை தலைவருக்கு எழுதிய கடி தத்தை பொது வெளியில் வெளியிடவும்செய்தார். இந்நிலையில் முதல்வர் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவு அடிப்படை யில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு இந்த மசோதா மீண்டும் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் தரப்பில் எழுப்பப் பட்ட கேள்விகள் அனைத்திற்கும் சட்டப்பேரவை தலைவரும், முதல்வரும், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் தெளிவான பதிலை பேரவை யில் எடுத்து வைத்துள்ளனர். 

குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது நீட் என்பது தேர்வு அல்ல, பலிபீடம் என்றும், நீட் தேர்வு முறை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்க ளுக்கு எதிரானது என்றும் ஆணித்தரமாக குறிப் பிட்டுள்ளார். விவாதத்தில் பேசிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தெளிவான வாதங்களை முன்வைத்துள்ளனர். ஆனால் தமிழக பாஜக நீட் தேர்வுக்கு தொடர்ந்து முட்டுக் கொடுத்து வருகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளி நடப்பு செய்ததோடு சட்டப் பேரவை கூட்டத்திலி ருந்தும் விலகி நின்று தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதால்தான் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரி யில் குறைந்த அளவிலேனும் சேர முடிந்துள்ளது. இதை நீட் தேர்வின் சாதனையாக ஆளுநரும் பாஜகவினரும் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. 

உண்மையில் நீட் தேர்வினால் கொள்ளை யடிப்பது தனியார் பயிற்சி நிறுவனங்களே ஆகும். சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ள மசோதாவை காலதாமதமின்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவது ஒன்றே ஆளுநரின் முன்னுள்ள வழி. மாறாக மீண்டும் காலதாமதம் செய்வது தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் எதிரானதாகவே இருக்கும். குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு தாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும்.