headlines

img

நாடாளுமன்றம் நடக்கட்டும்!

18ஆவது மக்களவையில் முதல் கூட்டம் இம்மாதம் ஜூன் 24ஆம் தேதி துவங்கி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் பதவி யேற்கவுள்ளதோடு மக்களவை சபாநாயகர் தேர்வும் நடைபெறவுள்ளது.இதே போல மாநிலங்க ளவை கூட்டமும் ஜூன் 27 துவங்கி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூன் 27ஆம் தேதி அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத் தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதங் கள் நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்து ழைக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகா ரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையில் அந்த வேண்டுகோளை இவர் அரசுத் தரப்புக்கும், ஆளும் கூட்டணிக்கும் தான் விட வேண்டும். ஏனென்றால் கடந்த நாடாளுமன்ற கூட்டங்களின் போது அவையின் மரபுகளையும், மாண்புகளையும் பெருமளவு கீழிறக்கம் செய்தது பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள்தான். 

அதிலும் பிரதமராக இருந்த நரேந்திர மோடி நாடாளுமன்றக் கூட்டங்களையே துச்சமாகக் கரு தினார். அவையில் முக்கியமான விவாதங்கள் நடைபெறும் போது கூட அவர் வருவதில்லை. முறையாகப் பதிலளிப்பதில்லை. அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது வந்தாலும் சவடால் அடிப்பதிலும், சவால் விடுவதிலுமே அவர் கவனம் செலுத்தினார்.

பல முக்கியமான சட்டமுன்வரைவுகள் எவ்வித விவாதமுமின்றி அராஜகமான முறை யில் நிறைவேற்றப்பட்டன. பாஜகவின் கூட்டாளி யான அதானி தொடர்புடைய ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்திய ஊழலை அவை விவாதிக்கக் கூடாது என்பதால் ஆளும் கட்சியே ரகளையில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தையே முடக்கிய நிகழ்வுகள் நடந்தன. உலகத்தையே உலுக்கிய மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதைக் கூட பாஜக விரும்பவில்லை. 

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின்போது நாடாளுமன்றத்தின் தலைவ ரான குடியரசுத் தலைவரையே அழைக்காமல் அவமதித்த நிகழ்வும் நடந்தது. ஜனநாயகம் என்பதை புறந்தள்ளி மன்னராட்சிக் காலம் போல செங்கோலை நிறுவியது மோடி ஆட்சி.

18ஆவது மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலுவான வகையில் அமரப் போகின்றன. மறு புறத்தில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் அள வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் சிறு பான்மை அரசு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு டன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த முறை நாடாளுமன்றத்தில் தனது இஷ்டம் போல் நடத்திச் செல்வதை எதிர்க்கட்சிகள் அனுமதிக் காது. பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும். பாஜக திட்டமிட்டிருந்த பல சட்டங்க ளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வலுவான ஜனநாயக போராட்டக் களமாக நாடாளுமன்றமும் விளங்கிட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பம்.

;