headlines

img

சீர்குலைக்கும் திருத்தம்!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையையும் இணைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  இது தனிமனித உரிமையையும், ரகசிய வாக்கெ டுப்பு முறையையும்  சீர்குலைக்கும் சதியாகும்.

மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில்,  12 எம்.பிக் களை நயவஞ்சக மாக முன்கூட்டியே இடைநீக்கம் செய்து விட்டு, கொல்லைப்புறம் வழியாக மசோதா நிறை வேற்றப்பட்டிருக்கிறது. அடையாளத்திற்காக ஆதாரை பயன்படுத்தக் கூடாது என அதன் பிரிவு 57 ஐ ஏற்கனவே உச்சநீதிமன்றம் நீக்கியி ருக்கிறது. 

கேட்டால், போலி வாக்காளர்களை நீக்கவே இந்த திருத்தம் என்கிறது பாஜக. ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து இரண்டையும் ஒப்பிட்டு மென்பொருள் வழியாகப் போலிகளை நீக்கப் போகிறோம் என்கிறது. இது  போகாத ஊருக்கு வழிதேடும் கதையாகும். ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் போலி வாக்காளர்களை அடையாளம் காண மென் பொருள் இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி  2015இல் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 55 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 

அப்போதே உச்சநீதிமன்றம் வாக்காளர்க ளை நீக்குவதும், சேர்ப்பதும் மென்பொருட்க ளைக் கொண்டு செய்வதல்ல.   அதிகாரிகள் நேரில் விசாரித்து உறுதி செய்த பின்னர்தான் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறது. அதை யும் மோடி அரசு தற்போது மீறியிருக்கிறது.  வாக்கா ளர் அடையாள அட்டையில் 2 சதவிகிதம் மட்டுமே போலிகள் இருக்கிறது. ஆனால் ஆதாரில் 7 சதவிகிதம் போலி இருக்கிறது. இதில் எதைக்கொண்டு எதைச் சரி செய்ய முடியும்  ? மோடி வகையறாக்களின் உண்மையான நோக்கம், போலிகளை ஒழிப்பதல்ல.  எதிர்ப்பு  வாக்காளர்களை அடியோடு வாக்காளர்  பட்டிய லிலிருந்தே ஒழிப்பதுதான். இதனை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. 

உண்மையில்  தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டுமெனில், முதலில்  தேர்தல் நிதி பத்திரங்களைத் தடை செய்திட வேண்டும். நன்கொடையாளர்களின் பெயர்ப் பட்டியலைக் கூட தேர்தல் ஆணையமும், மோடி அரசும் வெளி யிட மறுக்கிறது. பட்டியல் வெளியானால்  பாஜக வின் கூட்டுக் களவாணித்தனம் சந்தி சிரிக்கும். ஆனால் இதனை உச்சநீதிமன்றமும் வேடிக்கை பார்க்கிறது. 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 370 தொகுதி களில் பதிவான வாக்கிற்கும் எண்ணப்பட்ட வாக்கிற்கும் வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், திரிபுரா உள்ளிட்ட மாநி லங்களில் 19000 வாக்குகள் வரை வித்தியாசம் இருக்கிறது. 

இப்பிரச்சனைக்கு இன்று வரை தேர்தல்  ஆணையம் தீர்வுகாணவில்லை. இந்நிலையி லேயே மோடி அரசு அழைத்த கூட்டத்தில் தேர்தல் ஆணையர்களும் பங்கேற்று வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க ஒப்புதல் தெரிவித்திருக்கின்றனர்.  தேர்தல் ஆணையமும் சங்பரிவாரின் கூடாரமாக மாறிவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது. இது  ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.