headlines

img

ஆல் இஸ் வெல் = நாம் எல்லோரும் கிணற்றுக்குள்! - ஜிஜி

தி.நகரில் முக்கிய சாலை சந்திப்பில் உள்ள அந்த திருமண மஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரங்கிற்குள் நுழைந்தவர்கள் கூட்ட அரங்கிற்கு அனுப்பாமல் நேரே சாப்பிடும் அறைக்கு அனுப்பப்பட்டனர். ‘நோயாளிகள் இல்லாத முதல் உலகம்’ என்ற வாசகம் அடங்கிய பெரிய பிளக்ஃஸ் போர்டு அரங்க மேடையின் பின்சுவரில் வைக்கப்பட்டிருக்க, ‘‘ஆரோமலே... ஆரோமலே.. ஆல் இஸ் வெல்... ஆல் இஸ் வெல்...’’ என்ற பின்னணி முழக்கத்துடன் மேடையில் தோன்றினார் மிஸ்டர். ஆரோமலே.  அனைவரையும் பார்த்து கைகளை உயர்த்தி ‘‘ஆல் இஸ் வெல்... ஆல் இஸ் வெல்,,,’’ என்று கூறிவிட்டு ‘‘எல்லோரும் பிரேக்பாஸ்ட் எடுத்துக்கிட்டீங்களா?’’ என்று மைக்கில் கேட்டார். ’’எடுத்துகிட்டோம்’’ என்று குரல் வந்தது.

‘‘டேபிளட்...?’’

‘‘எடுத்துகிட்டோம் சார்.’’ என்றது கோரஸ்.
‘‘ஆல் இஸ் வெல். இப்போ சாப்பிட்டீங்களே இதுதான் இனிமே நம்ம உணவு. நாம எடுத்துக்க வேண்டிய மாத்திரை’’
கூட்டத்திலிருந்து எழுந்தார் ஒருவர், ‘‘சார் ஆரோமலே... ஆரோமலேன்னு சொல்றீங்களே அதுக்கு என்ன சார் அர்த்தம்?’’

‘‘ஆல் இஸ் வெல். சார் பாருங்க எவ்வளவு அலர்ட்டா இருக்கார். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும், யாரும் எந்தவகையிலயும் நம்பளை ஏமாத்திடக்கூடாதுங்கறது சாரோட மனநிலை. சாரைப்போல நாம ஒவ்வொருத்தரும் அலெர்ட்டா இருந்தா யாரும் நம்பளை ஏமாத்திட முடியாதுங்க. இப்போ சார் கேட்ட கேள்விக்கு வர்றேன். உங்க எல்லாருக்கும் தெரியும் ’ஆரோமலே’ன்னு என்னை கூப்பிடறாங்கன்னு. ஆனா அதுக்கு என்ன அர்த்தம்ங்கறதுதான் சாருக்கு தெரிய வேண்டிய விளக்கம். சார் மட்டுமில்ல இந்த இயக்கத்துல சேர்ற ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்தான் இது. என்னோட இயற்பெயர் ஆரோக்கியசாமி என்னோட அப்பா பேர் ஏழுமலை. ஆராக்கியசாமி ஏழுமலைன்னு பேர் வச்சா ஈர்ப்பா இருக்காதுன்னு முன்னாடியும் பின்னாடியும் வெட்டி, கொஞ்சம் இழுத்து ‘ஆரோமலே’ன்னு வெச்சுக்கிட்டேன்.’’ 

‘‘சார் அதனால என்னசார் எபக்ட் வரும்.’’ ‘‘இதோ இப்போ நீங்க கேக்கறீங்களே இதோ இங்கே இவ்ளோபேர் வந்திருக்கீங்களே, இதுமாதிரி எபக்ட்தான் வரும்.’’ என்றார். அடுத்து ஒருவர் பின் வரிசையிருந்து எழுந்தார். ‘‘சார் அடிக்கடி நீங்க சொல்றீங்களே ‘நாம் எல்லோரும் கிணற்றுக்குள்... நாம் எல்லோரும் கிணற்றுக்குள்...’ன்னு அது எதுக்கு சார்?’’

‘‘அதை...நான்... எப்ப சொன்னேன்...?’’
‘‘இப்பக்கூட சொன்னீங்களே சார், ஆல் இஸ் வெல்-னு’’ என்றார். அப்படி அவர் சொன்னதும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
 

சிரிப்பலை அடங்கியதும் ஆரோமலே பேச ஆரம்பித்தார். ‘‘சார் சொன்னதுல சிரிக்கறதுக்கு ஒன்னும் இல்லே. அவர் ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழ்ல் நேரடியா அர்த்தப்படுத்தி சொன்னதுலகூட எவ்வளவு அர்த்தம் இருக்கு பாருங்க. ‘ஆல் இஸ் வெல் - எல்லோரும் நலமாக இருக்கணும்.’ ஆனா இன்னிக்கு நம்ம நாட்டுல அதைப்பத்தி விழிப்புணர்வு இல்லாம எல்லோரும் கிணற்றுத்தவளைகளாக இருக்கோம்ங்கறதுதான் அவர் சொன்னதோட அர்த்தம். வெல் என்கிற வார்த்தைக்கு கிணறுன்னு ஒரு அர்த்தம் இருக்கறத ஞாபகப்படுத்தனதுக்கு நன்றி சார் உட்காருங்க. இன்னிக்கி இந்த உலகமே நோய்வாய்ப்பட்டிருக்கு. நீங்க எல்லோருமே உங்களுக்குத் தெரியாம தம் அடிக்கிறீங்கன்னு சொன்னா நீங்க ஒத்துப்பீங்களா? ஒத்துக்கமாட்டீங்க, கிண்டியில இருந்து பிராட்வேக்கு பஸ்ஸூலயோ, ஆட்டோவுலயோ, பைக்குலயோ நீங்க போனீங்கன்னா 12 சிகரெட் பிடிச்சிருக்கீங்கன்னு நான் சொல்வேன்.  அதாவது 12 சிகரெட் பிடிச்சா நுரையீரலுக்கு என்ன பாதிப்பு வருமோ அதுக்கு சமமா இந்த பயணம் செய்யறப்போ நுரையீரலுக்கு பிரச்சனை வரும். நான் சொல்ற இதே சாலையிலதான் மாசு கட்டுப்பாடு வாரியம் இருக்கு. பார்த்தால் அதுவே ஒரு புகை மண்டலத்துக்குள் புதைஞ்சு கிடக்கற மாதிரி தெரியும். கவர்ண்மெண்ட்ல சப்ளை பண்ற பாலிலேயே விஷத்தன்மை இருக்கறதா பேப்பர்ல நியூஸ் வருது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கறதா வேணாமான்னு ஒரே குழப்பம். எண்ணெய்ங்கிற பேர்ல நாம குரூட் ஆயிலை குடிச்சிக்கிட்டிருக்கோம். இதுல காசுகொடுத்து வாங்க முடியாத அளவுக்கு மரச்செக்கு எண்ணெய் வேற. இந்தக் கருமம் வேணாம்னு பழங்களை வாங்கி சாப்பிடலாம்னு போனா அதை மருந்து வச்சு பழுக்க வைக்கறதா டிவியில காட்டறான். ஒரு லிட்டர் தண்ணி பாட்டில் 20 ரூபா. அதுல பாருங்க இருக்கற எதிர்ப்பு சக்தியெல்லாத்தையும் எடுத்துட்டுதான் தர்றான். நம்ம காசுலேயே நாமே சூனியம் வச்சுக்கறோம். இதெல்லாத்தையும் போக்கணும் மக்கள் ஆரோக்கிய வாழ்வு வாழணுங்கறதுக்காகத்தான் நாம எந்தவித கெமிக்கலும் கலக்காத பவுடர்களை அறிமுகப்படுத்தியிருக்கோம். பார்முலா 1,2,3ன்னு பிரேக்பாஸ்ட், லஞ்ச், டின்னர்னு. இதை 8 வயசு குழந்தையிலருந்து 80 வயசு முதியவர்வரை யார் வேணாலும் சாப்பிடலாம். சாப்பிட்டுட்டு கூடவே ஒரு மாத்திரை போட்டுக்கணும். இதை மட்டும் தொடர்ந்து 2 மாசம் சாப்பிட்டுட்டீங்கன்னா உங்க உடம்புல அப்புறம் எந்த நோயும் வராது. இருக்கிற நோயும் போயிடும் அதுக்கு நாங்க கேரண்டி. இப்படி சாப்பிட்டுட்டு உடல் ஆரோக்கியத்தை உணர்ந்தவங்க நாலுபேர் தங்களோட அனுபவத்தை நான் பேசி முடிச்சதும் சொல்லுவாங்க.’’ என்றார்.

மேலும் அவரே தொடர்ந்தார், ‘‘இதுக்கு எவ்வளவு செலவாகும்னு பார்த்தீங்கன்னா... உங்களோட ஒருநாள் செலவு. ஒரு நாளைக்கு நீங்க சாப்பிடற மூணு வேளை உணவு மற்றும் டீ, காபி, ஸ்நாக்ஸ்னு குறைந்த பட்சம் 200 ரூபாயாவது ஆகும். அந்தக்காசு மாசத்துக்கு ரூ.6000/-. அதை அப்படியே இந்த பேக்கேஜுக்கு கொடுத்து ரெண்டே ரெண்டு மாசம் மட்டும் சாப்பிடுங்க அதுக்கப்புறம் நீங்க எதுவேணாலும் சாப்பிடலாம். எந்த நோயும் உங்களை அண்டாது அவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி உடம்புல வருந்துடும். நீங்க செலவழிக்கிற இந்த 6000 ரூபாயை நீங்க திரும்ப எடுக்கிறதுக்காகவும் நாங்க ஒரு திட்டம் வைச்சிருக்கோம். நீங்க உங்க சார்புல உங்க நண்பர்கள் உறவினர்கள்னு யாராவது மூணுபேரை இந்த திட்டத்தில அறிமுகப்படுத்தினீங்கன்னா அவங்க செலுத்தற பணத்துல இருந்து உங்களுக்கு தலா ரூ.500/- அதாவது ரூ.1500/- கிடைக்கும். அதற்கு அடுத்த செட்டு நம்ம உணவுபொருட்களை வாங்கும்போது உங்களுக்கு தலா ரூ.250/-ம் அதுக்கு அப்புறம் தலா ரூ.125/-ம் கெடச்சுகிட்டே இருக்கும். எங்களுடைய நோக்கம் ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்கணும் அனைவரும் நூறுவருஷ காலம் அசால்டா வாழணும்கறதுதான். உங்க கையில கொடுக்கப்பட்டிருக்கற படிவத்துல இருக்கற வெப்சைட்ல உங்க பெயர்களை பதிஞ்சு ரூ.6000/- செலுத்திட்டு அதுக்கான ரசீதை கொண்டுபோய் காட்டி ஆல் இஸ் வெல் நிறுவனத்தோட டிப்போக்களில் உங்க உணவுப் பொருட்களை வாங்கிக்கலாம். எந்ததெந்த இடத்துல நம்ம டிப்போக்கள் இருக்குதுங்கற விபரமும் உங்ககையில் இருக்கற துண்டறிக்கையில் இருக்கு. உங்க சந்தேகங்களை கேக்கறதுக்கு ப்ரீ ஹெல்ப் லைன்களும் 24 மணிநேர சேவையில இருக்கு, உங்க ஆரோக்கியத்தை தள்ளிப்போடாதீங்க. உடனே ஆரம்பியுங்க. ஆல் இஸ் வெல்’’ என்று முடித்தார். எல்லோரும் கைதட்டினார்கள் ’’ஆல் இஸ் வெல்’’ என்று கோஷம் போட்டார்கள். முண்டியடித்து படிவங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் தங்கள் பெயர்களை பணம்கட்டி அங்கே பதிந்து கொண்டார்கள்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு... ஜெயில் வார்டர் சிறைச்சாலையின் சிறப்பு செல்லின் வாசலில் வந்து நின்று ‘‘ஆரோக்கியசாமி... ஆரோக்கியசாமி ... உங்களை பார்க்க விசிட்டர் வந்திருக்கார்.’’ என்றார். ‘‘அனுப்புங்க...’’ என்று சொல்லியவாறு கையில் வைத்திருந்த நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் ஆரோக்கியசாமி என்ற ஆரோமலே சீரியஸாக. உள்ளே வந்த நபர், ‘‘சார் வணக்கம். அண்ணன் அனுப்பினாரு. பணம் இன்னும் கணக்குல வந்து சேரல. எப்ப வரும்னு கேட்டுட்டு வரச்சொன்னாரு.’’ என்று காதோடு காதாக பேசினார் அரசியல் பிரமுகர் அனுப்பி வைத்த அந்த ஆள். ‘‘முதல்ல என்னை பெயில்ல எடுக்க ஏற்பாடு பண்ணச்சொல்லுங்க. நான் வெளியில வந்தாத்தான் அவருக்கு சேர வேண்டிய 500சி வரும். ஏற்கெனவே பேசினபடி, நான் மாட்டிக்கிட்டா 30 நாளுக்குள்ள அவர் பெயில்ல எடுக்கணும். இப்பவே 22 நாள் ஆயிடுச்சி.’’ ‘‘சார் 2000 கோடி ரூபா கேஸாச்சே சார். உங்க மேலே சிபிஐ விசாரணை வெக்கணும்னு கவர்ன்மெண்ட்ல ஒரே பிரஷர். அண்ணன்தான் அது வராம தடுத்திட்டார். ஒன்னு தெரியுமா உங்களுக்கு. நீங்க மக்களுக்கு கொடுத்த பார்முல 1.2.3 பவுடர்கள் முறையே கேழ்வரகு, அரிசி, கோதுமைமாவுன்னு கண்டுபுடிச்சிருக்காங்க. அது இல்லாம மாத்திரை வேற வெறும் வைட்டமின் மாத்திரைன்னு நிரூபணம் ஆகியிருக்கு. இதை மட்டுமே சாப்பிட்ட பல பேர்க்கு உடல்நிலையில கொஞ்சம் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கறதா செய்திகள் வேற’’ என்றார் வந்தவர். ‘‘என்னை எந்தவிதமான குற்றத்துலயும் சிக்க வைக்க முடியாது. பணத்தை ஏமாத்திட்டேன்ங்கற விஷயத்தைத் தவிர. அதை நான் பார்த்துக்கிறேன்னு உங்கண்ணன்கிட்டே சொல்லுங்க. என்னை உடனே பெயில்ல மட்டும் எடுக்கச்சொல்லுங்க. இன்னும் எட்டு நாளைக்குள்ள நான் வெளியே வரலைன்னா அவருக்கு சேர வேண்டிய பணத்துல இருந்து ஒரு நாளைக்கு ஒரு சி குறையும்.’’ ‘‘அதுக்கெல்லாம் அவசியம் இருக்காது. இன்னும் நாலு நாளைல நீங்க வெளியே வந்துடுவீங்க.’’

‘‘உங்க அண்ணன் கிட்டே சொல்லுங்க. அடுத்த புராஜக்ட் 50000 சி. ரெடி பண்ணிகிட்டிருக்கேன். இப்ப நான் சொன்னபடி என்னை வெளியில எடுத்தா அடுத்த புராஜக்ட்ல  50 பர்சன்ட் பார்ட்னரா உங்கண்ணன் இருப்பாரு. இல்லாட்டி சென்ட்ரல் மினிஸ்டர் தயாரா இருக்காருன்னு. சத்ய மேவ ஜெயதே.’’ ‘‘கண்டிப்பா சொல்றேங்க. அது என்ன சார் புதுசா இருக்கு, எப்பவுமே ஆல் இஸ் வெல்னுதானே சொல்லுவீங்க. திடீர்னு சத்யமேவ ஜெயதே’ன்னு சொல்றீங்க?’’

‘‘ஆல் இஸ் வெல் அந்த புராஜக்டோட முடிஞ்சுப்போச்சு. இது புது புராஜக்ட். சத்யமேவ ஜெயதே.’’ ‘‘ஓ அப்படியா சரிங்க வர்றேன். சத்யமேவ ஜெயதே.’’ என்றார் கட்சிப்பிரமுகரின் உதவியாளர். ‘‘தம்பி, உங்க அண்ணன்கிட்டே சொல்லி இந்த செல்லுல இருக்கற பழைய ஏசி, டிவியெல்லாம் மாத்திட்டு பிளாஸ்மா டிவியும்,  ஸ்பிளிட் ஏசியும் போடச்சொல்லுங்க. ஏசியில ஒரே சத்தம். நம்ம புராஜக்ட் பத்தி யோசிக்க தடையா இருக்கு. சத்யமேவ ஜெயதே’’ என்ற ஆரோக்கியசாமியிடமிருந்து, ‘‘கண்டிப்பா நாளைக்கே பண்ணச்சொல்லிடறேங்க’’ என்று தலையாட்டிக்கொண்டே சிறைச்சாலையிலிருந்து விடைபெற்றார் ஆளும்கட்சி பிரமுகரின் உதவியாளர். அவரின் மனதில் ‘‘இந்த புது ஸ்கீம்ல எவன் எவனெல்லாம் பணத்தை விடப்போறானோ?’’ என்ற பச்சாதாபமும் கொஞ்சம் வந்துபோனது.

;