headlines

img

பொய்களின் நாயகன் நரேந்திர மோடி

பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில் உலகப் புகழ்பெற்ற பிரதமர் நரேந்திரமோடி எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளை கேள்விக்குள்ளாக்குவது கேலிக்கூத்தாகவுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் பேசிய அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்களால் நிரம்பி வழிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். பொய்களைக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும், பின்னர் இது வெறும் ‘ஜூம்லா’ என்று கூறுவதிலும் வல்லவர் மோடி.கடந்த மக்களவைத் தேர்தலின் போது மோடியும், பாஜகவும் அளித்த வாக்குறுதிகள் இப்போது அவர்களை நோக்கி சிரித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ஏழை மக்களுக்கு மாதந்தோறும் ரூ. 6ஆயிரம் வழங்கும் திட்டம் நடைமுறை சாத்தியமற்றது என்று மோடி கூறுகிறார். கடந்த தேர்தலின் போது வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று அளித்த வாக்குறுதி என்னாயிற்று? ஒரு ரூபாய் கறுப்புப்பணமாவது கைப்பற்றப்பட்டதா? யாருடைய வங்கிக்கணக்கிலாவது செலுத்தப்பட்டதா? அந்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்? மோடி பதிலளிப்பாரா? 


ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை, விவசாய விளைபொருளுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் விலை என்று மக்களுக்கு அளித்த எந்தஒரு வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. மாறாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என அனைத்துப் பகுதி மக்களையும் கசக்கிப் பிழிந்த மோடிக்கு அடுத்த கட்சியைப் பற்றி பேசும் அருகதை உண்டா? காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, விரும்பாத மாநிலங்கள் நீட் தேர்வை நடத்தத்தேவையில்லை என்பன போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையிலும் இந்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஐந்தாண்டு காலம் தமிழகத்திலும், நாட்டின் பிறபகுதிகளிலும் நடந்த போராட்டங்களின் விளைவாகவே இந்த கோரிக்கைகள் வாக்குறுதிகளாக மாறியுள்ளன. மக்கள் இந்த வாக்குறுதிகளுக்கு அளிக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் மோடி புலம்புகிறார். 


கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததால், புதிய வாக்குறுதிகளை பாஜக அளித்தாலும் மக்கள் நம்பப் போவதில்லை. முடிந்தவரை அனைத்து பொய்களையும் கடந்த தேர்தலிலேயே அவிழ்த்துவிட்டதால் புதிய பொய்கள் கிடைக்காமல் மோடி கட்சி திணறுகிறது.‘வளர்ச்சியின் நாயகன்’ என்று கடந்த தேர்தலில் முன்னிறுத்தப்பட்டவர் ஐந்து ஆண்டிலேயே தளர்ச்சி நாயகனாக தளர்ந்துவிட்டார். எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பேசி வருகிறார். அடுத்தவர்களின் வாக்குறுதியை கேள்வி கேட்பதற்கு முன்பு தன்னுடைய வாக்குறுதிகளுக்கு பதில் சொல்லட்டும் பிரதமர் மோடி.

;