headlines

img

மூச்சுத் திணறும் ஜனநாயகம்!

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா.  அந்த ஜனநாயகத்தின் நான்காவது தூணாகத் திகழ்வது ஊடகங்கள். ஆனால் இன்று ஊடகங்க ளின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் இயங்கும் 90 சதவிகித ஊடகங்க ளை ஆர்எஸ்எஸ் சார்பு கார்ப்பரேட் கூட்டாளிகள் கையகப்படுத்தியுள்ளனர். இதில் ஒரு சில ஊடகங் கள் விதிவிலக்காக இயக்கி வருகின்றன. அதற்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.  

இந்தியாவின் முன்னணி ஆங்கில செய்தி ஊடகமான என்டிடிவி ஆட்சி அதிகாரத்தின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் செய்திகளை வெளியிடும் நிறுவனம் ஆகும். இந்து மதத்தின் பெயரால் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் செய்யும் அட்டூழியங்களையும், ஒன்றிய அரசிற்கெதிரான விமர்சனங்களையும் சமரசமின்றி முன்வைத்தது. இதனால் ஆத்திர மடைந்த ஒன்றிய அரசு என்டிடிவிக்கு ஒரு நாள் தடை ஏற்கனவே விதித்தது. அதன் பின்னர் குறுக்குவழியில் சிபிஐ யை ஏவிவிட்டு மடக்கப் பார்த்தது. ஆனாலும் அடிபணியவில்லை.  தற்போது தனது காவிகார்ப்பரேட் கூட்டாளி அதானியை கொண்டு நயவஞ்சகமாக அந்நிறு வனத்தையே கைப்பற்ற வைத்திருக்கிறது.

“பத்திரிகை சுதந்திரம்தான்  ஜனநாயகத்தை வலிமையாக்கும்” “சுதந்திரமாக இயங்கும் பத்திரிகைதான் ஜனநாயகத்தின் மூலகல்லாகும்’’ என்று பேசியவர் வேறுயாருமல்ல நமது பிரதமர் மோடிதான். ஆனால் இவரது ஆட்சியில்தான் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா  180 நாடுகளில் 150 ஆவது இடத்திற்குத் தள்ளப் பட்டிருக்கிறது. அப்படியென்றால்  ஜனநாய கத்தின் மூச்சு எந்த நேரத்திலும் நின்று விடும்  அபாயத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.  

இன்றைய இந்தியாவில் ஊடகங்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் ஒன்றிய அரசை ஆதரிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் அமலில் இருக்கிறது. மன் கீ பாத் நிகழ்ச்சி திட்டமிட்ட நாடகம் என்பதை  அம்பலப்படுத்திய ஏபிபி நிறுவனத்தின்  பத்திரிகையாளர் புன்ய பிரசூன் பாஜ்பாய் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். 

ஆதார் தகவல்கள் ரூ. 500க்கு வேண்டிய அளவு கிடைக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிய ’தி ட்ரிபியூன் இந்தியா’ ஆசிரியர் ஹரீஷ் கரே அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதே போல்  உண்மையைப் பேசிய பத்திரிகையாளர் கள் இந்திய டுடே ஷியாம் மீரா சிங், ஹிந்துஸ் தான் டைம்ஸ் பாபி கோஷ் , நியூஸ் 18 கார்டூனிஸ்ட் மன்சுல் உள்ளிட்ட ஏராளமான பத்திரி கையாளர்கள் ஒன்றிய அரசின் அழுத்தத்தால் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். 

அதே போல் உண்மையை எழுதிய நியூஸ் கிளிக்,  தைனிக் பாஸ்கர், பரத் சமாச்சார், நியுஸ் லாண்டரி  உள்ளிட்ட இணைய ஊடகங்களின் மீது வருமான வரித்துறையை ஏவி முடக்கும் முயற்சி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. மோடி அரசின் ஊடகங்கள் மீதான இத்தகைய அடக்குமுறை  ஜனநாயகத்தைச் சவக்குழியில் தள்ளி, சர்வாதி காரத்திற்கு வழிகோலும். 

 

;