headlines

img

தேர்தல் ஆணையம் மோடியின் ஊதுகுழலா?

மோடி அரசினால் நடத்தப்பட்ட மிகப்பெரும் ஊழலான ரபேல் ஊழல் குறித்து பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தகங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பதும், வெளியீட்டு விழாவிற்கு தடை விதித்திருப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். கருத்துச் சுதந்திரத்தின் மீதான இந்தத் தாக்குதல் சகித்துக்கொள்ள முடியாதது ஆகும். மோடி அரசினால் நிகழ்த்தப்பட்ட ரபேல் விமான பேர ஊழல் இந்திய நாட்டையே உலுக்கியது. இது குறித்து புலனாய்வு செய்து கட்டுரைவெளியிட்ட இந்து என்.ராம் ஆட்சியாளர்களால் அவதூறு செய்யப்பட்டார், மிரட்டப்பட்டார். ஆனால் அவர் அதற்கு அஞ்சாமல் உண்மையின் பக்கம் நின்றார். இந்தநிலையில், ‘‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன்எழுதியுள்ள நூல் வெளியீட்டு நிகழ்விற்கு காவல்துறையின் தூண்டுதலால் இடம் தர மறுத்துள்ளனர். இந்நிலையில், பாரதி புத்தகாலய அலுவலகத்திலேயே வெளியீட்டு நிகழ்வு நடைபெற இருந்தது. 


இந்நிலையில், பாரதி புத்தகாலயத்திற்குள் நுழைந்து அச்சிடப்பட்ட புத்தகங்களை பறிமுதல்செய்துள்ளனர். இது அப்பட்டமான கருத்துரிமை பறிப்பாகும். ஆளும் கட்சியின் ஏவல் படையாக காவல்துறையும், தேர்தல் அலுவலர்களும் மாற்றப்பட்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சனைக்கு கடும் கண்டனகனைகள் எழுந்தநிலையில், செவ்வாயன்று மாலை தேர்தல் ஆணையம், மேற்படி புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என்று வேறு வழியில்லாமல் கூறியிருக்கிறது. எப்படியிருப்பினும் தேர்தல் ஆணையம்முற்றிலும் பாரபட்சமாக செயல்பட்டு தேர்தல்நடைமுறைகளை சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. தேர்தல் சமயத்தில் அரசியல்தொடர்புடைய நூல்களை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளதா? ஒரு பதிப்பகத்திற்குள் நுழைந்துபுத்தகங்களை பறிமுதல் செய்யும் அளவிற்கு வானளாவிய அதிகாரம் படைத்தவர்களா இவர்கள்?


விஞ்ஞானிகளின் சாதனைகளை தன்னுடைய சாதனை போல அரசு வானொலி மற்றும்தொலைக்காட்சிகளில் தம்பட்டமடித்தார் பிரதமர்மோடி. இது தேர்தல் விதி மீறல் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி முறையிட்ட போதும் தேர்தல்ஆணையம் மோடிக்கு முட்டுக்கொடுத்தது. தேர்தல் விதிகள் நடைமுறையில் இருக்கும் நேரத்தில் மோடியை புகழ்ந்து திரைப்படம் வெளியிடப்பட்டது. இதுவும் விதிமீறல் என்று சுட்டிக்காட்டப்பட்டதையும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இது தவறில்லை என்றே கூறியது. ஆளும் கட்சி எது செய்தாலும் கண்டு கொள்வதில்லை. மறுபுறத்தில் எதிர்க்கட்சிகளை பிரச்சாரம்செய்யவிடாமலும், மக்கள் மத்தியில் உண்மையைகொண்டு செல்ல விடாமலும் தடுப்பது என்ன நியாயம்? பாரதி புத்தகாலயத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் விடப்பட்டுள்ள சவாலாகும். இதனைகண்டிக்க ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் முன்வர வேண்டும்.



;