headlines

img

எடுபடா புதுவிளக்கம்

வரைவு தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமைப்பட்டுள்ளார். பெங்களூரில் ஞாயிறன்று நடந்த ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி மையத்தின் பொன்விழாவை துவக்கி வைத்து பேசும் போது, உலக அரங்கில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கான வேட்கையை நிறைவு செய்வதற்கான தேவை யையும் கல்விக்கொள்கை எடுத்துக் கூறுகின்றது என்றும் கூறியுள்ளார்.  உலகளவில் சிறந்து விளங்குவதற்கு இந்தியும் சமஸ்கிருதமும் எந்தளவு உதவி செய்யும் என்பது அவருக்கே வெளிச்சம். உலகளவில் இந்திய மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் இந்தியும் சமஸ் கிருதமும்தான் பயன்படும் என்று எவ்வாறு பாஜக ஆட்சியாளர்கள் அமைத்த குழு முடிவு செய்தது? 

மத்திய பாஜக அரசுக்கு குழு என்பதெல் லாம் ஒரு கருவிதானே தவிர அவர்களின் எஜமா னர்களான ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம் தான் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கும் இடமாகும். இந்தியாவின் அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளெல்லாம் அவர்க ளுக்கு அவசியமற்றவை. அதனால்தான் அரசி யல் சட்டத்தை மாற்றுவதற்கான வேலைகளில் வாஜ்பாய் தலைமையிலான அரசு முதல் மோடி அரசு வரை ஈடுபட்டு வருகின்றன. குடியரசு துணைத்தலைவர் கூறுவதுபோல, தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால், தேசிய கல்விக்கொள்கையில் இரு மொழி திட்டமே முன்னிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் தாய்மொழிக் கல்விக்கு முன்னு ரிமை வழங்க முடியும். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியிலேயே படித்தால் தான் தங்களது கருத்துக்களையும் சிந்தனைக ளையும் தெளிவான முறையில் எடுத்துரைக்க முடியும். 

தாய்மொழி கல்விக்கு மகாத்மா காந்தி, கவி யரசர் ரவீந்திரநாத்தாகூர் முதல் அப்துல் கலாம் வரை பல்வேறு தலைவர்களும் உதாரணமாக திகழ்ந்தவர்கள். அவர்களால் பல்வேறு மொழி களிலும் தங்களது சிந்தனைகளை வெளிப் படுத்த முடிந்ததற்கு காரணம் மும்மொழியில் பயின்றதல்ல. தாய்மொழி வழிக் கல்வியில் பயின்றதன் மூலமே தங்களின் தேவைக்கேற்ப பிற மொழிகளை கற்றுக் கொண்டனர். தேசிய தேவைகள் மற்றும் பண்பாட்டு கூறு களையும் சமன்படுத்தும் முயற்சியை கல்விக் கொள்கை கையாண்டு உள்ளது என்று இந்தி திணிப்பு முயற்சியை லாவகமாக நியாயப்படுத்த முனைந்துள்ளார். பன்மொழியால் நிறைந்துள்ள உலகில் முன்னேறத் தேவையான பிற மொழிக ளில் ஆளுமையை வளர்த்துக் கொள்ளவும் முன் னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனவும் இட்டுக் கட்டி கூறியுள்ளார். எவ்வாறாயினும் மத்திய அரசின் இந்தி திணிப்பு வெற்றியடையாது என்பதை வருங்காலம் அவர்களுக்கு உணர்த்தும். அதில் தமிழகம் முன்னிற்கும். அவர்களது முயற்சி வெற்றி பெறாது.

;