headlines

img

இளைஞர்களின் எச்சரிக்கை.... (அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது)

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி அறிவித்திருக்கிறார். இந்த வயது உயர்வு அனைத்து பொதுத்துறைகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக  எரிகிற தீ யில் எண்ணெய் ஊற்றும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

புதனன்று எடிப்பாடியின் கூட்டாளி மோடிக்குஎதிராக இந்திய இளைஞர்கள்  ‘’மோடியே வேலை கொடு’’ என்று  தங்களின் கோபாவேசத்தை சமூக ஊடகங்களின் மூலம் முன் எடுத்தனர். இதுவரை இல்லாத வகையில் மோடி அரசிற்கெதிரான 60 லட்சம் ட்வீட்கள்  குவிந்தன. இது இளைஞர்கள் எந்தளவிற்கு வேலையின்றி வேதனையில் இருக்கின்றனர் என்பதன் வெளிப்பாடே ஆகும்.  இதுமோடி அரசிற்கு மட்டுமல்ல, மோடியை பின்பற்றி செல்லும் எடப்பாடி அரசிற்கும் இளைஞர்கள் விடுக்கும் எச்சரிக்கை.

கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் மட்டும்4.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மொத்தம் 7.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருக்கும் நிலையில் தற்போது ஓய்வு பெறும் வயது உயர்வு என்ற அறிவிப்பு மிகப்பெரிய மோசடி ஆகும். மத்திய-மாநில அரசுகள், அரசு பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் நேரடி வேலைவாய்ப்பை தருவதற்கு மாறாக அரசுப் பணிகளில் அவுட்சோர்சிங் முறையை ஊக்குவித்தும், ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் ஊழியர்களை பணியமர்த்தியும் வருகின்றன. இதுஇளைஞர்களின் வேலையின்மையை பயன்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டும் வெட்கக்கேடான செயல் ஆகும். 

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பணப்பயன்களைக் கூட கொடுக்க முடியாத வகையில் அரசுப் பணத்தை எடுத்து அதிமுகஅரசு சூறையாடியிருக்கிறது. ஆட்சியின் கடைசிக்காலத்தில் இருக்கும் பெரும் பகுதி பணம் கமிஷன் அடிக்கும் விதத்திலான திட்டங்களில் திசை திருப்பப்பட்டிருக்கிறது.  குறிப்பாக இந்தாண்டு பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் ரூ.18 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் இதற்கான அவசியம் என்ன வந்தது? தமிழகத்தில் படித்து பட்டம் பெற்று வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையில்துப்புரவுத் தொழிலாளர் பணிக்கு பி.எச்.டி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு  முடித்த இளைஞர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த அவலமும் அரங்கேறியது. அரசு வேலைக்காக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை தருவோம் என ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தற்போது இருந்த வேலை வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஓய்வு பெறும் வயது உயர்வு அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்.அரசின் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

;