headlines

img

வரவேற்கிறோம்...!

குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு என்பதை  எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி மீண்டும்  உச்சநீதி மன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. என்ன தான் சட்டம் இருந்தாலும் அதனை முழுமையாக  நிறைவேற்றாமல்  பார்த்துகொள்வதற்கான தடைகளும்தொடர்ந்தன.  ஆனால் அந்த  தடை களையும் உச்சநீதிமன்றத்தின்  தற்போதைய தீர்ப்பு தகர்த்தெறிந்திருக்கிறது. 

இந்து  வாரிசுரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு  ஒரு குடும்பத்தில்  பிறந்த பெண்கள் அந்த குடும்பத் தில் தங்குவதற்கு மட்டுமே உரிமை இருந்தது. அவர்களால் குடும்ப சொத்தில் உரிமை கொண் டாட முடியாது. 1956ல் இந்து வாரிசுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என உறுதி செய்யப்பட்டது. ஆனாலும்  ஆணாதிக்கப் பார்வையுடன் கூடிய சில நீதிமன்ற  தீர்ப்புகள்  சம உரிமை என்பதை அமலாக்கத் தடையாகவே இருந்து வந்தன. 

2005ம் ஆண்டில் மீண்டும் இந்து வாரிசுரிமை சட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்யப்பட் டது. ஆனாலும் சட்ட அமலாக்கம் முழுமை பெறவில்லை. அந்தளவிற்கு ஆணாதிக்க சிந்தனை அனைத்து மட்டங்களிலும் ஆழ வேரூன்றியிருக்கிறது. இந்நிலையிலேயே தற்போது உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு  முக்கியத்துவம் பெறுகிறது.

1925 ம் ஆண்டில் சிங்கார வேலர் தலைமை யில் நடைபெற்ற கம்யூனிஸ்ட்களின் முதல் மாநாட்டிலேயே பெண்களுக்கு சம உரிமை வலி யுறுத்தப்பட்டது.  பெரியார் பொதுவுடைமை கருத்துக்களை முன்னெடுத்த  1929ல் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டில்  பெண்களுக்குச் சம சொத்துரிமை கொடுக்கப்பட வேண்டும் எனத்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் பெண்கள் உரிமைக் கான மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்காக அம்பேத்கர் தனது பதவியை ராஜி னாமா செய்தார். பூர்வீக சொத்தில் பெண்களு க்குச் சமபங்கினை சட்டமாக்கிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதன்மைப் பாத்திரம் உண்டு. 1989ல் திமுக ஆட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகம், கேரளம்  உள்ளிட்ட சில மாநிலங் களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம்  இட ஒதுக்கீடு அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட  மசோதா பாஜகவின் சதியால் நிறைவேற்றப் படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

பெண்கள் முன்னேற்றம் என்பது மோடி ஆட்சியில் பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. ஆனால் கொள்கையளவில் அதனை ஏற்கத் தயா ராக இல்லை. தற்போது பாஜகவிற்கு இருக்கும் அறுதிப்பெருன்பான்மைக்கு  33 சதவிகித  இட ஒதுக்கீட்டினை இக்கனமே நிறைவேற்றிட முடியும். ஆனால் மோடி அரசு  ஆர்எஸ்எஸ் - சின்  சனாதனக் கோட்பாட்டின் படி பெண்களைக் கீழ்நிலையிலேயே வைக்க விரும்புகிறது. 33 சத விகித இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, நாட்டில் முக்கிய முடிவுகள், அதிகாரங் களில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். அதன் மூலமே உண்மையான சம உரிமை என்பது சாத்தியமாகும்.

;