headlines

img

நூற்றாண்டு விழா வெல்க....

தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாபெரும் உற்சாகத்துடன் இன்று (ஆக.2) நடைபெறுகிறது. தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் அளப்பரிய பங்கினை ஆற்றிய சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா என்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய கொண்டாட்டம் ஆகும். 

இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தென்மாநிலங்களில் - குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகியவற்றில் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் ஓரளவேனும்நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சொன்னால்அதற்கு இந்த மாநிலங்களின் சட்டமன்றங்களுக் கெல்லாம் தாயாகத் திகழ்ந்த சென்னை மாகாண (மெட்ராஸ் ராஜதானி) சட்டமன்றமும் அதில் நடந்த கூர்மையான, அறிவுப்பூர்வமான விவாதங்களுமே காரணம் என்றால் மிகையல்ல.

சென்னை மாகாண சட்டமன்றமாக இருந்த போதும் பிற்காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றமாக மாறிய போதும் இதில் உறுப்பினர்களாகத் திகழ்ந்தகம்யூனிஸ்ட் தலைவர்களின் பங்களிப்பு இந்த தருணத்தில் நினைவுகூரப்பட வேண்டிய - எண்ணிப் பார்க்கப்பட வேண்டிய மகத்தான சேவை ஆகும். பி.ராமமூர்த்தி, ஜீவா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஈடுஇணையற்ற தலைவர்கள் துவங்கி இன்று வரையிலும் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள இடதுசாரி இயக்கங்களின் தலை
வர்கள், ஆளும் அரசு எதுவாக இருந்தபோதிலும், தமிழகத்தின் பாட்டாளி வர்க்க மக்களின் பிரச்சனைகளை, உணர்வுகளை, தேவைகளை, குறைகளை அழுத்தமான முறையில் பதிவு செய்து வந்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் உள்ள இந்தியாவில் நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் மக்கள் நலன் காக்கும் தங்களதுமகத்தான பயணத்தில் ஒரு போராட்டக் களமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது. இந்தியாவில் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நிறுவும் மக்கள் ஜனநாயக ப் புரட்சியைநோக்கிய பயணத்தில், நாடாளுமன்ற ஜனநாயகக்கட்டமைப்பையும் பொருத்தமான முறையில் பயன்படுத்திக் கொள்வது என்ற அடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் தனக்கு கிடைக்கும் பிரதிநிதித்து வத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. 

அந்த அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களிலும் மக்கள் மன்றத்திலும் இடதுசாரிகள் எழுப்பிப் போராடுகிற எண்ணற்ற பிரச்சனைகள், பின்னாட்களில் மக்களின் ஆதரவைப் பெற்று, ஆளும் அரசுகளுக்கு நிர்ப்பந்தமாக மாறி, புதிய சட்டங்களாக, சட்டத்திருத்தங்களாக நிறைவேற்றப்பட்ட வரலாறு உண்டு. அத்தகைய தருணங்கள் தமிழக சட்டமன்றத்தில் ஏராளமாக உண்டு. தமிழகம் 1967க்குப் பிறகு மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிக்கிற - நிறைவேற்றுகிற ஒரு “நலஅரசாக” (Wellfare State) செயல்படத் துவங்கியது என்று சொன்னால் அதற்கு, அதுகாறும்  சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய சண்டமாருதமே காரணமாகும். அதற்குப் பின்னரும் தமிழகத்தில் - சில சறுக்கல்கள் இருப்பினும் - ஆளும் அரசுகள் மக்கள் நல அரசுகளாகவே தொடர்வது சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் அமைத்த அடித்தளத்தில்தான் என்பதை சட்டமன்றத்தின் நூற்றாண்டில் குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

;