headlines

img

இந்த கயமைக்கு யார் காரணம்?

கொரோனா கொடுந்தொற்றின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை முழுமையாகத் திறக்கமுடியாத நிலை உள்ளது. தனியார் பள்ளிகள் ஒருபுறத்தில் ஆன்-லைன் வகுப்புகளை நடத்திவருகின்றன. ஆனால், கிராமப்புறத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்காது என்பதால் அரசின் சார்பில் கல்வித்தொலைக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இது  வரவேற்கத்தக்க ஒன்றே.

ஆனால், கல்வித் தொலைக்காட்சியை காவித்தொலைக்காட்சி ஆக்கிக்கொண்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமநீதி பேசியவர் திருவள்ளுவர். ஆனால் பிறப்புக்கு ஒருநீதி பேசும் மனு நீதியை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரம் திருவள்ளுவரையும் தங்களுடைய மதவெறி வளையத்திற்குள் கொண்டுவர முயன்று தோற்றது. பாஜக-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தருண்விஜய் என்பவர் வள்ளுவரின் பெருமையை பேசி மாரீச வேடமிட்டார். கங்கைக்கரையில் வள்ளுவர் சிலையை நிறுவப்போவதாகக் கூறினார். ஆனால், வள்ளுவர் சிலை அங்கே பலமாதம் சாக்குப்பைக்குள் கட்டப்பட்டுக் கிடந்த கொடுமை நிகழ்ந்தது. 

தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவினர் திருவள்ளுவர் மீது திடீர் பாசம் காட்டி சமண முனிவரான வள்ளுவரை சனாதன மதத்தைச் சேர்ந்தவர் எனபிதற்றத் தொடங்கினர். வள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பது, காவிச்சாயம் பூசுவதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டனர்.குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவே காவித் துணி போர்த்திய வள்ளுவர் உருவத்தை தன்னுடைய சமூக ஊடகத்தில் பகிர்ந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நீக்கினார். எனினும்,
வள்ளுவரை கையகப்படுத்தும் முயற்சியில் ஆர்எஸ்எஸ்பரிவாரம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மக்களே போல்வர் கயவர் என்று கயமை அதிகாரத்தில் எழுதியவர் வள்ளுவர். ஆனால், வள்ளுவரை குறுகிய மதவெறி சிமிழிக்குள் அடைக்கும் கயமைத் தனத்திற்கு தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் கல்வித் தொலைக்காட்சியும் துணைபோவது அதிர்ச்சியளிக்கிறது. காவிவர்ணம் பூசப்பட்ட வள்ளுவரின் உருவப்படத்தை கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டியுள்ளனர். இது தெரியாமலோ, யதார்த்தமாகவோ நடந்தஒரு நிகழ்வல்ல. கல்வித்துறையிலும் காவிக்கும்பல்நுழைந்து தனது தில்லுமுல்லு திருகுதாள திரிப்பு வேலையை காட்டத் தொடங்கியிருப்பதன் வெளிப்பாடே ஆகும்.

இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு வேகமாக நடைபெறுகிறது. தமிழ், தமிழரின் தொன்மையை வெளிக்கொணரும் அகழாய்வுகள் தடுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் தமிழகத்திலுள்ள அதிமுக அரசு துணைபோகும் வெட்கக்கேடு நிகழ்கிறது. இந்த தைரியத்தில்தான் வள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயலும் கயமைக்கு கல்வித் தொலைக்காட்சியில் உள்ள சிலரும் துணை போயுள்ளனர்.இந்த ஆபத்தான போக்கு தடுத்துநிறுத்தப்பட வேண்டும். திருக்குறளுக்கும் திருவள்ளுவரின் கோட்பாடுகளுக்கும் மாசு கற்பிக்கும் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த அரசும் கல்வித்துறையும் முன்வரவேண்டும்
 

;