headlines

img

வறுமையை அல்ல, திட்டத்தை ஒழிக்கிறார்கள்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரி கட்சிகளின் தொடர் நிர்ப்பந்தம் மற்றும் போராட்டம் காரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் கொண்டு வரப் பட்டது. கிராமப்புற பொருளாதாரம் நொறுங்கி விடாமல் இருக்க இந்தத்திட்டம் பெருமளவு உதவி யாக உள்ளது.  மோடி அரசு பொறுப்புக்கு வந்ததிலிருந்து இந்தத் திட்டத்தை முடக்கிப்போட முயன்று வந்துள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு நிரந்தர மூடு விழா நடத்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நரேந்திர சிங் தோமர், நூறு நாள் வேலைத்திட்டம் நிறுத்தப்படும் என்று வெளிப்படையாகவே  கூறியுள்ளார். 

இதற்கு அவர் கூறியுள்ள காரணம், எள்ளி நகையாடத்தக்கது. ஏழ்மையை ஒழிப்ப தற்காகவே நூறுநாள் வேலைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. மோடிஅரசின் பல்வேறு திட்டங்க ளால் ஏழ்மை ஒழியும் நிலையில் இருப்பதால் இந்தத் திட்டத்தை தொடர வேண்டிய அவசியம் இருக்காது என்று திருவாய் மலர்ந்துள்ளார்.  மோடி ஆட்சியில் வறுமையும், வேலை யின்மையும் அபாயகரமான அளவில் அதி கரித்து வருகின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை, கிராமங்களை விட்டு நகரங்களுக்கு பிழைப்பு தேடி புலம் பெயர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு என கிடைக்கும் விபரங்கள் நாட்டில் வறுமை அதிக ரிப்பதையே காட்டுகிறது. வறுமைக்கோடு அள வீட்டுக்கான வரையறையை மாற்றி மோசடி செய்வதன் மூலம்தான் வறுமை ஒழிந்துவருவதாக மாய்மாலம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வறுமை ஒழிந்துவிட்டதாக கூறி கிராமப்புற மக்க ளுக்கு உயிர்த் தண்ணீர் கொடுத்துக் கொண்டி ருக்கும் இந்தத் திட்டத்தை ஒட்டு மொத்தமாக ஒழிக்க நினைப்பது பெரும் அநீதியாகும்.

நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும். ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் மக்கள் மன்றத் திலும், நாடாளுமன்றத்திலும் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், இந்தத் திட்டத்தை ஊற்றி மூட நினைப்பது கடும் விளைவுகளை உருவாக்கும்.  இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த மோடி கார்ப்பரேட் கனவான்களுக்கு ஏராளமான சலுகை களை வாரி வழங்கியுள்ளார். பொதுத்துறை நிறுவ னங்களை அழிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்தியா வில் விளிம்பு நிலையில் இருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க நினைப்பது சகித்துக் கொள்ள முடியாதது. இதனால் கிராமப்புற பெண்கள் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள். மோடி அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து பெரும் கிளர்ச்சி நடந்தாக வேண்டும். 

;