headlines

img

கம்யூனிச பூதத்தின் வெற்றி...

“ஐரோப்பாவை ஒரு பூதம் துரத்திக் கொண்டிருக்கிறது, அந்தப் பூதம் கம்யூனிசம்”. 

-மனிதகுலத்தின் மகத்தான மாமேதைகள் காரல்மார்க்சும் ஏங்கெல்சும் இந்த உலகிற்கு அளித்த கம்யூனிஸ்ட் அறிக்கையின் மிகப்புகழ்பெற்ற முதல் வரிகள் இவை. கம்யூனிச ‘பூதம்’ டொனால்டு டிரம்ப்பையும் விட்டு வைக்கவில்லை. உலகத் தொழிலாளர் வர்க்கம் என்கிற கோடிக்கால் பூதமாக எழுந்து நிற்கும் கம்யூனிச பூதத்தைப் பார்த்து நடுநடுங்கி,வெடவெடத்துப் போயிருக்கிறார் உலக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தலைமைப்பீடத் தின் ஆட்சியாளராக அமர்ந்திருக்கிற டிரம்ப்.

வரலாறு நெடுகிலும் மகத்தான கம்யூனிஸ்ட்தலைவர்களை தனது உளவு அமைப்புகள் மூலமாக படுகொலை செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகின் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட்டு களுக்கு எதிராக, இடதுசாரி சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தவர்களுக்கு எதிராக, முற்போக்கு சிந்தனையை முழங்கியவர்களுக்கு எதிராக படுகொலைகளையும் வன்முறை வெறியாட்டங்களையும் கொடிய சித்ரவதைகளையும் ஏவிய இழிவரலாறு கொண்டது. அந்த இழி பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்திப்பிடித்திருக்கிறார் டிரம்ப்.

அக்டோபர் 2 அன்று அமெரிக்க குடிமக்கள்மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டுள்ள கொள்கை வழிகாட்டு அறிவிக்கை யில், எந்தவொரு நாட்டிலிருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடைவிதிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 1952 குடியேற்ற மற்றும் தேசிய இன சட்ட விதிகளின்படி, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவிற்குள் குடியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த விதி கடுமையாக பின்பற்றப்படவில்லை. இந்த நிலையில் தற்போதுடிரம்ப் நிர்வாகம் இந்த விதியை மீண்டும் கடுமையாக்கியுள்ளது. 

இதற்கு காரணம், கொரோனாவுக்குப் பிந்தைய உலகில் கம்யூனிசத்தின் தேவை இப்பூவுலகின் மக்களால் இன்னும் அதிகமாக உணரப்பட்டிருக்கிறது என்பதே. சோசலிச சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கும் சீன மக்கள் குடியரசும் கியூபக் குடியரசும் வீர வியட்நாமும் கொரிய மக்கள் ஜனநாயக குடியரசும்; இவற்றுடன் இந்தியாவில் இடது ஜனநாயக முன்னணிஆட்சி நடைபெறும் நவ கேரளமும் கொரோனாதொற்று பரவலையும் மரண விகிதத்தையும் கட்டுப்படுத்துவதிலும் விரட்டியடிப்பதிலும் உலகமே வியக்கும் விதத்தில் மகத்தான சாதனை படைத்துள்ளன. அதேவேளை எளியமக்களின் வாழ்வாதாரங்களை காத்து நிற்கின்றன. மறுபுறம் அமெரிக்காவும் வளர்ந்த நாடுகள்என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளும் சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் லட்சக்கணக்கான மக்களை பலிகொடுத்துள்ளன. இதுபோன்ற பல நிகழ்வுகளால் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் டிரம்ப் போன்றவர்கள் கம்யூனிச பூதத்தைப் பார்த்து அஞ்சுகிறார்கள். கம்யூனிச பூதத்தின் வெற்றி இது.
 

;