headlines

img

ஜனநாயக ரோஜா மீண்டும் மலரட்டும்!

ஜம்மு - காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 - ஐ நீக்கி ஓராண்டு  நிறைவடைந்தி ருக்கிறது. இந்த ஓராண்டிற்குள் அங்கு ஜன நாயகத்தின் குரல்வளை கொஞ்சம் கொஞ்சமாக நெரிக்கப்பட்டே வருகிறது நீதித்துறையும் தன் கண்ணைக் கட்டிக் கொண்டு, காதை பொத்திக் கொண்டு சிலையாக அசைய மறுக்கிறது.

கடந்தாண்டு மோடி அரசு ஜம்மு - காஷ்மீருக்கு இருந்து வந்த 370 வது சிறப்பு அந்தஸ்தை நீக்கும் போது; அந்த மாநில மக்களின் எந்த கருத்தையும் மோடி அரசு கேட்கவில்லை. மாறாக  அங்கிருந்த ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்தது. கடும் நெருக்கடியான நேரத்திலும் கூட இந்தியாவின் பக்கம் உறுதியாக நின்ற பருக் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் இன்றளவும் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிரான கோபம்  காஷ்மீர் மக்களி டம் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது என்பதை மோடி அரசு மறந்துவிடக் கூடாது.

ஒரு நாட்டின் ஊடக சுதந்திரம் வலுவான ஜனநாயகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படு கிறது.  ஆனால் மோடி அரசு ஜம்மு - காஷ்மீருக்கு என புதிய ஊடகக் கொள்கையை அறிவித்திருக்கி றது. அந்த கொள்கை  ஊடகங்களின் கண்களை யும், கால்களையும் இறுகக் கட்டிவிட்டு ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க சொல்கிறது. 

370 வது பிரிவை நீக்கியதன் மூலம் மோடி அரசு சாதித்திருப்பது என்ன ? இந்தியாவின் ஜி.டி.பி-யில் 8 சதவிகித பங்களிப்பு செய்த  காஷ்மீர் ஆப்பிளின் வணிகம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  வீழ்ச்சியைச் சந்தித்திருக்கி றது. 2019-ம் ஆண்டு இறுதியில்  178.9 பில்லியன் பொருளாதாரம் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரிலிருந்த ஜனநாயகத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் குற்றுயிரும் குலையுயிருமாக சிதைத்திருக்கிறது. அது படிப்படியாக இந்தியா முழுவதும் விஸ்தரிக்கப்படுகிறது என்பதையும் நாம் மறந்திடக் கூடாது. இந்திய ஜனநாயகத்தை, கூட்டாட்சித் தத்துவத்தை பாதுகாத்திட அனை வரும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கொள்கைக ளுக்கு எதிராக அணிதிரள வேண்டும்.

காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி மோடி அரசு 370 வது பிரிவை நீக்கி யது. ஆனால் ஓராண்டாகியும் தீவிரவாதம் முடி வுக்கு வரவில்லை. மாறாக அதிகரிக்கவே செய்திருக்கி றது என்பதையே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின் றன.  மத்திய அரசின் கொள்கைகளுக்கும், காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கும் இடையே நெடுங்காலமாக முரண்பாடுகள் இருந்தே வருகின்றன. அந்த முரண்பாடு 370 பிரிவு நீக்கத்தால் அதிகரிக்கவே செய்திருக்கிறது.  

எனவே முன்பு போலவே 370வது பிரிவு வழங்கும் சிறப்பு அந்தஸ்துடன் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக மாற்றுவதே மாநில மக்களுக்கு வழங்கும் நீதியாகும். அதுவே கூட்டாட்சித் தத்துவத்தின் உயிர் நாடியாகும்.

;