headlines

img

இளைய தலைமுறையின் கோபமும் பக்குவமும்! 

 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் மிக முக்கிய அம்சம் இளைய தலைமுறையினரின் மகத்தான பங்கேற்புதான்! அவர்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினர்; அதே சமயம் பக்குவமாகவும் முன்வைத்தனர்.  இந்துலேகா எனும் ஒரு இளம் பெண் முஸ்லீம் உடை அணிந்து கொண்டு கீழ்கண்ட வாசகத்தை உயர்த்தி பிடித்தார்: “திரு. மோடி அவர்களே! நான் இந்துலேகா! என் உடையை வைத்து அடையாளம் காணுங்களேன்!” கலவரம் செய்பவர்களை உடையை கொண்டு கண்டுபிடிக்கலாம் என கூறிய மோடிக்கு இதை விட பெரிய மூக்கறுப்பு இருக்க இயலுமா? காவல்துறைக்கு ரோஜா மலர் கொடுத்த மாணவியின் பதாகையில் கீழ்கண்டவாறு இருந்தது: “நான் கல்லூரியில் வரலாறு பாடம் படித்துக் கொண்டுள்ளேன் என எனது தந்தை நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு தெரியாது நான் வரலாற்றை படைத்துக் கொண்டிருக்கிறேன் என்று!” இன்னொரு பதாகை கூறியது: “பாசிசத்தை முடக்குங்கள்; இணைய தளத்தை அல்ல” இன்னொரு மாணவியின் பதாகை கூறியது: “நீங்கள் உங்களது பட்டப் படிப்புக்கான ஆவணங்களை காட்டினால் நான் எனது குடியுரிமை ஆவணங்களைக் காட்டுகிறேன்” மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான பொய்யை இது தோலுரித்துக் காட்டியது. இன்னொரு பதாகை: “இந்துவும் முஸ்லீமும் ராசி! நீ என்ன செய்வாய் நாஜி?” இன்னொரு மாணவர் ஏந்திய அர்த்தமுள்ள வாசகங்கள்: “இந்த கேடு கெட்ட சட்டத்தை நீ ஏன் எதிர்க்கவில்லை என எனது குழந்தைகள் கேள்வி கேட்கும் ஒரு எதிர்காலத்தில் என்னால் நுழைய முடியாது” இந்த போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு ஜெர்மானியர்கள் ஏந்திய வாசகங்கள்: “நான் ஜெர்மானியன்; உங்களது பேரக் குழந்தைகள் உங்களை கேள்வி கேட்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என தனது நாட்டில் உருவான பாசிசம் குறித்து நினைவுபடுத்தினர். அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்துடன் ஒரு பதாகை கூறியது: “இன்னுமா இந்த கேடுகெட்ட சட்டத்தை நீங்கள் எதிர்க்க வேண்டியுள்ளது? என்னால் நம்பமுடியவில்லை”  என குடியுரிமை சட்டம்  குறித்து அம்பேத்கர் கூறுவது போல வாசகங்கள் இருந்தன. இதுபோன்ற ஏராளமான பதாகைகளை இளைய தலைமுறையினர் ஏந்தியுள்ளனர். இது  அவர்களது செய்தி மட்டுமல்ல; இந்த தேசத்தின் ஒட்டுமொத்த செய்தி.

;