headlines

img

தொன்மையும், உண்மையும்

உலகின் மிகப் பழமையானது தமிழ்மொழி. தமிழை போற்றுவோம். உலகின் மிக மூத்த மொழியான தமிழ் பேசும் மாநிலத்தில் நாம் இருக்கி றோம் என்று சென்னை ஐஐடியில் நடந்த பட்ட மளிப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு வரும்போது மட்டும் தான்   பிரதமருக்கு தமிழின் தொன்மை தெரிகிறது. மத்திய ஆட்சியதிகாரத்தை கையில் வைத்துள்ள மோடியும் அவரது கட்சியும் தமிழ் மொழிக்கும், பண்பாட்டிற்கும் எந்தளவிற்கு ஊறு செய்ய முடியுமோ அந்தளவுக்கு செய்து வருகிறார்கள்.

தமிழின் பழமையையும், தொன்மையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் பல்வேறு இலக்கிய சான்றுகள் உள்ளன. ஆனால் அதற்கான தொல்பொருள் சான்றுகள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாய்வில் கிடைத்து வருகின்றன. தமிழை போற்றும் ஆட்சியாக மத்திய ஆட்சி இருந்திருந்தால் கீழடி ஆய்விற்கு அனைத்து வகையிலும் துணை நின்றிருக்க வேண்டும்.  ஆனால் என்ன செய்தார்கள். மத்திய தொல் பொருள் ஆய்வு துறையினால் துவங்கப்பட்ட ஆய்வில் மண்ணள்ளிப் போட அனைத்தும் செய் தார்கள். மிகச் சிறப்பாக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்திற்கு தூக்கி அடித்தார்கள். அதுவரை நடந்த ஆய்வு முடிவு களை எழுதக் கூட அவரை அனுமதிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரி யான ஸ்ரீராமன் என்பவர் கீழடியில் தொழில் எச்சங்கள் எதுவும் இல்லை என்று கூறி இனிமேல் ஆய்வு செய்ய எதுவுமில்லை என்று கூறியதால் அத்துடன் தொல் பொருள் ஆய்வுத்துறையின் ஆய்வு நிறுத்தப்பட்டது. இதுதான் தமிழின் தொன்மைக்கு மோடி அரசு செய்த மரியாதை.

கடும் வற்புறுத்தலுக்கு பிறகு தமிழக தொல் பொருள் ஆய்வுத்துறை மேற்கொண்டு வரும் ஆய்வு காரணமாக பல்வேறு தொல் பொருள்கள் கிடைத்து வருகின்றன. இதனால் உலகம் முழு வதும் தமிழின் பெருமை பேசப்படுகிறது. 

ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வும் முடக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே தமிழின் தொன்மையை மதிப்பதாக இருந்தால் இந்த ஆய்வுகளை தொடர
மோடி அரசு உத்தரவிடத் தயாரா? 

புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை இருட்டடிப்பு செய்து இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் திணிக்கப்படு கின்றன. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்ட வணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோ, தமிழை வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழி யாக செழிக்கச் செய்ய வேண்டும் என்ற ஜனநாய கப் பூர்வமான கோரிக்கையோ பாஜக பரிவாரத்தால் ஏற்கப்படவில்லை. இந்த லட்சணத்தில் தமிழின் தொன்மை குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது வெறுங் கையால் முழம் போடுவதே ஆகும். தமிழும், தமிழர்களும் தொன்மையின் அடையாளங்கள். அவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது. 

;