headlines

img

வர்ணமும்-வண்ணமும்

சிவப்பு என்றால் கம்யூனிஸ்ட்டுகள்; நீலம் என்றால் அம்பேத்கரிஸ்ட்டுகள், கறுப்பு என்றால் பெரியாரிஸ்ட்டுகள் என்பது பொதுவான அடையாளமாகிவிட்டது. துறவிகளின் நிறமாக இருந்த காவியை இந்துத்துவ வெறியர்கள் தங்க ளின் நிறமாக்கிக் கொண்டு அடுத்தவர்கள் மீது பூசும் முயற்சியில், அவமரியாதை செய்வதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

திருவள்ளுவர் சிலைக்கும் உருவப் படத் துக்கும் காவி வண்ணம் பூசிப்பார்த்து தங்களின் காவிச் சிமிழுக்குள் அவரை அடைக்கப் பார்த்த னர். வர்ண பேதமும் பிறவிபேதமும் பார்க்காத வள்ளுவரை காவிக்குள் இழுக்கும் கள்ள முயற்சிக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அதை கைவிட்டனர்.

தந்தை பெரியார் பிறந்த தினத்தை இருட்ட டிப்புச் செய்யலாம் என நரேந்திர மோடியை ‘தமிழ் வளர்த்த பெரியார்’ என்று செப்பிப் பார்த்தனர். தமிழ் மக்கள் அதனை செவிமடுக்கவில்லை. கருப்பு வண்ண பெரியார் சிலைகளில் காவி வண்ணம் பூசி இழிவுபடுத்தினர். அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதும் வாலை சுருட்டிக் கொண்டனர்.

இப்போது நீல நிற அம்பேத்கருக்கு காவி உடை மாட்டி நெற்றியில் விபூதி குங்குமம் வைத்து “காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்” என்று சுவரொட்டி அடித்து கும்பகோணம் நகரம் முழுவதும் இந்து மக்கள் கட்சி ஒட்டியிருக்கிறது. கடும் எதிர்ப்புக் கிளம்பியதுடன் கண்டன ஆர்ப் பாட்டங்களும் நடத்தப்பட்டதால் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் டி.குருமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

அம்பேத்கரின் நினைவு நாளை இருட்டடிப்புச் செய்யவே பாபர் மசூதியை இடிக்க அந்த நாளை தேர்வு செய்தது இந்துத்துவா கூட்டம். இப்போது குருமூர்த்தி, அவர் (அம்பேத்கர்) பௌத்த சம யத்தை தழுவியிருந்தார்; அந்த மதம், இந்து மதத்தைச் சார்ந்ததாகும்; அந்த பௌத்த மதத்தின் நிறமும் காவி ஆகும் என்று தனது செயலை நியாயப் படுத்தியே பேசியிருக்கிறார். இனி வரும்காலங்களில் இதே போன்று அவருக்கு போஸ்டர்கள் ஒட்டப் படும் என்றும் திமிராகக் கூறியிருக்கிறார்.

அண்ணல் அம்பேத்கர் அரசியல் சாசன வரைவுக்குழுவின் தலைவராக இருந்து தன்னு டைய பேருழைப்பை செலுத்தி உருவாக்கிய அர சியல் சட்டத்தையே அர்த்தமிழக்கச் செய்ய முயற்சிக்கிறது இந்துத்துவா கூட்டம். மதச்சார் பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம், பன்மைத்துவம் ஆகிய அரசியல் சட்ட விழுமியங்களை நிற மிழக்கச் செய்ய துடிப்பவர்கள் அம்பேத்கருக்கு காவி வண்ணம் பூச முயல்வது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.

இந்துத்துவா கூட்டத்தின் புனித நூல் மனு அநீதிதான். அதை மனதிற்குள் மறைத்துக் வைத்துக் கொண்டு அலைக்கிறார்கள். திருவள்ளு வர் துவங்கி அம்பேத்கர் வரை தங்களுக்கு எதிரான அனைவரையும் இழிவுபடுத்த அவர்கள் மேற்கொள்ளும் உத்திதான் இது. தமிழகம் இந்த இழி செயலை கொந்தளித்து கண்டித்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு எப்போதும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

;