headlines

img

நீதியை நிலைநாட்டிய பதான்கோட் தீர்ப்பு

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் கடந்தாண்டு ஜனவரி மாதம்  8 வயது சிறுமி ஆசிபா வின் வாயில் போதை மருந்தை திணித்து,  பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல் லப்பட்ட வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் குற்ற வாளிகள் என்று பதான்கோட் நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.  வெறுப்பு  அரசியலால் மீண்டும் மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சியை பிடித்துள்ள இன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்துள்ளது. இதன்  மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் துளிர் விட்டுள்ளது.  முக்கிய குற்றவாளியான சஞ்ஜிராம் கோவில் தர்மகர்த்தா. மற்றொருவரான தீபக் கஜூரியா காவல்துறை சிறப்பு அதிகாரி. சஞ்ஜிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி, “ ஆயுள் என்றால் அவர்கள் கடைசி மூச்சை விடும் வரை சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும்’’ என்று  கோடிட்டு கூறியிருக்கிறார். செல்வாக்குமிக்க நபர்களுக்கு எதிரான இந்த வழக்கில் எத்தகைய  மிரட்டலுக்கும் அஞ்சாமல் ஆதாரங்களை  திரட்டிய ஜம்மு- காஷ்மீர் மாநில காவல்துறையினர் பாராட்டுக்குரியவர்கள். அரசியல் மற்றும் இதர செல்வாக்கால் நீதிபதி களே விலைபேசப்படும் இன்றைய காலகட்டத் தில்  நீதியை நிலைநாட்டிய பதான்கோட் நீதிமன்ற நீதிபதி தேஜ்விந்தர்சிங் பாராட்டுக்குரியவர். 

கோவில், பக்தி, ஆன்மீகம் என முழங்கும் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சித்தனர். ஆனால் நாடோடி குடும்பத்தின்  சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடு மையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் யூசுப் தாரிகாமி தைரிய மாக செயல்பட்டு  அம்பலப்படுத்தினார். அதோடு நிற்காமல் மக்களை திரட்டி போராடியதால் வேறு வழியின்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். மாநி லத்தில் கூட்டணி அரசில் பாஜக இடம்பெற்றி ருந்ததால் வழக்கை நீர்த்துப்போக முயற்சிகள் நடந்தன. இதனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டு க்கு மாற்றியது.இதன் பின்னரும் சாட்சிகளை அழிக்க முயற்சிகள் நடந்தன.  கொடுமை என்னவென்றால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்ற பெயரில் பாஜகவினர் பேரணி நடத்தி யதுதான். அதில் அன்றைய கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள் சௌதரி லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா இருவரும் கலந்து கொண்டனர். நாடெங்கும் கண்டனங்கள் குவிந்ததால் இருவரும் வேறு வழியின்றி பதவி விலகினார்கள். 

இப்படி பல தடைகளைத் தாண்டி 17 மாதங்க ளில் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருப்பதை அறிந்து ஆசிபா வின் பெற்றோர் மட்டுமல்ல, இந்த நாட்டில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ள கோடிக்கணக் கான தாய்மார்களும் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டாலும்  அரசு தரப்பினர் அதை உறுதியுடன் எதிர்க்கவேண்டும்.

;