headlines

img

ஊட்டச்சத்து யாருக்கு?

பிரதமர் நரேந்திர மோடி வாயைத் திறந்தாலும் சுட்டியைத்(டுவிட்டர்)  தொட்டாலும் வளர்ச்சி, வளர்ச்சி என்றே பேசுகிறார்,  எழுதுகிறார். ஆனால்அந்த வளர்ச்சி  முன்னோக்கியதா அல்லதுபின்னோக்கியதா என்பதைப் பற்றி  அவரும்அவரது ஆட்சியும் அவர்களை இயக்குவிக்கும்ஆர்எஸ்எஸ் பரிவாரமும் சற்றும்யோசிப்பதில்லை. 

ஊட்டச்சத்து குடும்பத்தின் நலத்தை காப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் என்று தனது சுட்டுரையில்பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிடுகிற வளர்ச்சி எத்தகையது என்பதை நாடும் நாட்டுமக்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

இந்தியா பொருளாதாரத்தில் பின்னோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமருக்கு நெருக்கமான அம்பானியோ உலக பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்திற்குமுன்னேறியிருக்கிறார். இத்தகைய வளர்ச்சியை தான் பிரதமரும் அவரது ஆட்சியும் கட்சியும் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அவரது ஊட்டமும் நாட்டமும் மக்களுக்கல்லவே? 

ஏழை-எளிய மக்கள் பசி பட்டினியால் இந்தகொரோனா காலத்தில் மடிவதிலிருந்து காப்பாற்றுவதற்கு பிரதமர் சிறு அசைவைக் கூட ஏற்படுத்தவில்லை. பொருளாதார நிபுணர்கள் பலரும் மக்களின் கையில் பணத்தைக் கொடுத்தால்தான் அவர்களுக்கும் உதவியாக இருக்கும், பொருளாதார சுழற்சிக்கும் பயன்படும் என்று கூறியும் கூட சற்றும் பொருட்படுத்தாமலே இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஊட்டச்சத்து பற்றி மட்டுமின்றி வேறு எந்த நிகழ்வானாலும் வளர்ச்சி பற்றி பேசும் பிரதமர் நாட்டின் தற்போதைய கொரோனா பாதிப்பிலும் கூட உலக அளவில் மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு வளர்ந்துவிட்டதை பெருமையாகக் கூட இனி பேசினாலும் பேசலாம். இத்தகைய மோசமான வளர்ச்சியைத்தான் இவரது ஆட்சி மக்களுக்கு பரிசளித்துக் கொண்டிருக்கிறது.

நமது நாட்டின் 5வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 37.9 விழுக்காடு.ஆனால் இதர வளரும் நாடுகளின் சராசரியோ 25 விழுக்காடாகும். கர்ப்பிணிப் பெண்களில் 51.4விழுக்காடு இரத்தசோகை கொண்டவர்களாக உள்ளனர். நமது நாட்டின் ஊட்டச்சத்து அளவீடுமற்ற நாடுகளைப் போல் அல்லாமல் கார்போ ஹைட்ரேட் உணவு அடிப்படையிலேயே அமைந்துள்ளது. மற்ற நாடுகளிலோ கலோரி  அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த அளவீடுகளின் அடிப்படையில் பார்த்தாலும் கூட பர்கினோபாஸோ, ஹைட்டி, வங்கதேசம் போன்ற  நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளது. மோசமான பட்டினி நிலையில் உள்ள 80 நாடுகளில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது.  5வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 44 விழுக்காடு போதிய ஊட்டச்சத்துஇன்றியும் 72 விழுக்காடு குழந்தைகள் இரத்த சோகையாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையே உள்ளது. 

இந்த நிலையில்தான் பிரதமர் மோடி ஊட்டச்சத்து பற்றி மிக பிரமாதமாக நீட்டி முழங்கியிருக்கிறார். எழுதுவது, பேசுவதெல்லாம் பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் நடவடிக்கையோசொல்லும்படியாக இல்லையே.
 

;