headlines

img

ஆய்வகங்கள் போதாது...

கொரோனா வைரஸ் (கோவிட் - 19) பாதிப்பு கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் ஒருவிதமான பதற்றச்சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது வரையில் வெளியாகியுள்ள விவரங்களின்படி உலகம் முழுவதும் சுமார் 5,500 பேரின் உயிரை கொரோனா பாதிப்பு பறித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் பரபரப்பாக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.  எனினும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சில நாட்கள் கழித்தே இதன் தீவிரத் தன்மை தெரிய வருவதால் வேகமாக மரணத்திற்கு இட்டுச் செல்லும் அபாயம் கொண்டது என்ற பின்னணியில், உடனடியாக கொரோனா வைரஸ் பாதிப்புதானே என்பதை அறிந்து கொள் வதற்கான பரிசோதனை ஏற்பாடுகள் இந்தியா வில் பெரிய அளவிற்கு இல்லை என்ற உண்மை யை இந்துஸ்தான் டைம்ஸ் ஏட்டின் சிறப்புச் செய்தி ஒன்று வெளிக்கொண்டு வந்துள்ளது. சீனாவிலும் அதைத் தொடர்ந்து தென் கொரியாவிலும் அந்த அரசுகள் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க மிகத்தீவிரமான முன்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. குறிப்பாக சோசலிச சீனா, ஒட்டு மொத்த நாட்டையே பாதுகாப்பு வளையத்திற் குள் கொண்டுவந்து இனி ஒருவரின் உயிர் கூட போகக்கூடாது என்ற உறுதியோடு செயல்பட்டது.  ஆனால் சீனாவின் எச்சரிக்கைகளை எல்லாம் அலட்சியம் செய்ததன் விளைவை இன்றைக்கு அமெரிக்கா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு கொரோனா பாதிப்பு  தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இது மிகப்பெரிய பாதிப்பாக மாறி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன், இந்துஸ்தான் டைம்ஸ் ஏட்டின் செய்தியைச் சுட்டி க்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), சில கூடுதலான ஆய்வக ஏற்பாடுகளை செய்து விட்டோம் என்று கூறுகிற போதிலும் இந்திய மக்கள்தொகையை ஒப்பிடும் போது அது எந்த விதத்திலும் போதாது என குறிப்பிட்டிருக்கிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், ஏற்கெனவே உள்ள ஆய்வகங்களோடு மேலும் கூடுதலாக 62 ஆய்வகங்களை கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறி வதற்காக அமைத்திருப்பதாகவும் அதன் மூலம் கூடுதலான எண்ணிக்கையில் தினசரி இரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடியும் என்று கூறி யிருக்கிறது. ஒரு ஆய்வகத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 90 பேரின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய முடியும். அப்படியானால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிர மடையும் போது அத்தனை பேருக்கும் இரத்த பரிசோதனை நடத்துவது என்பதே சிரமமான காரியமாக மாறும். அந்த அளவிற்குத்தான் இந்தியாவில் முன் தடுப்பு பரிசோதனை ஆய்வகங்களின் ஏற்பாடு இருக்கிறது என்பதுதான் உண்மை. எனவே சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் அனுபவங்களை படிப்பினையாக எடுத்துக் கொண்டு மத்திய அரசு உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது அவசியம்.

;