headlines

img

தண்ணீர் மாபியாக்கள்  

 தமிழகத்தில் மணல் மாபியா போல தண்ணீர் மாபியாக்களும் தற்போது அதிகரித்து வருகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் மிகச்சரியாகவே குறிப்பிட்டிருக்கிறது.  ஏழையின் முதல் உணவே தண்ணீர்தான். ஆனால் அந்த தண்ணீரும் இன்று கானல் நீராக மாறியிருக்கிறது. சென்னை மாநகர் மக்களின் தேவைக்கு மட்டும் ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும். இதில் பெரும் பகுதி குடிநீரை தனியார் நிறுவனங்கள்தான் விற்பனை செய்து வருகின்றன. சென்னையில் லாபம் கொழிக்கும் ஒரே  தொழிலாக தண்ணீர் விற்பனை மாறியிருக் கிறது. அதனால் போட்டி போட்டுக்கொண்டு தண்ணீர் மாபியாக்களும் உருவாகி வருகின்ற னர். மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியது மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய கடமை களில் ஒன்று. ஆனால் அதனை தமிழக அரசிற்கு நீதிமன்றங்களாவது நினைவூட்ட வேண்டும்.  மத்திய அரசின் நுகர்வோர் நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி 15 முக்கிய நகரங்களில் குழாய் மூலம் வழங்கப் படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல என்று தெரிவித்திருக்கிறது. அந்த பட்டியலில் சென்னையும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பற்றி சென்னை மாநகராட்சி நிர்வாகம் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. நீரின் தரத்தைப் பராமரிப்பதும் பாது காப்பதும் மாநகராட்சி நிர்வாகங்கள், பஞ்சாயத்துகளின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை அவர்கள் முறையாகச் செய்திருந்தால் இன்று நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை, நீர் நிலைகள் மாசுபாடு, அவற்றின் அழிவு ஆகியவை ஏற்பட்டிருக்காது. அதைச் சாதகமாகக் கொண்டு மக்களின் அடிப்படை உரிமையை வியாபாரமாக்கும் தண்ணீர் மாஃபியாக்களும் தோன்றியிருக்க மாட்டார்கள். குடிநீருக்கான தேசிய தர வரம்பு ஐஎஸ்10500: 2012 என்பதாகும். ஆனால், எந்த உள்ளாட்சி அமைப்பும் இதைப் பின்பற்றுவதோ உறுதிப்படுத்து வதோ இல்லை. இதைப்பயன்படுத்தி தனியார் நிறுவனங்களின் குடிநீர் விற்பனை ஒரு மிகப்பெரிய தொழிலாக மாறி வருகிறது. நகர்ப்புறம் மட்டு மின்றி தற்போது கிராமப்பகுதிகளிலும் தண்ணீர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. உள்ளாட்சி அமைச்சர் இருக்கும் கோவை யின் ஒட்டுமொத்த குடிநீர் விநியோகத்தையும் சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் கையில் கொடுத்து விட்டு அரசு வேடிக்கைப் பார்ப்பதும் இதில் அடங்கும். தண்ணீர் அனைவருக்கும் குடிநீராவதே முதன்மையானது. அதைத் தவிர்த்து கார்ப்பரேட் களின் லாபவெறிக்காக அதனை திருப்பி விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்தி செய்ய 4 லட்சம்  லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. கார் ஏற்றுமதி யோடு நம் தண்ணீரையும் ஏற்றுமதி செய்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு மனிதன் உடலளவில் உயிர்ப்போடு வாழ்வது மட்டுமே இங்கு முக்கியமில்லை. அவன் தன்னளவில் ஆரோக்கியமான சுகாதாரமான வாழ்வை வாழ் வதற்கு அவனது அரசு வழிசெய்வதும் முக்கியம்.

;