headlines

img

கூட்டுக் களவாணிகள்

யெஸ் வங்கியின் அதிபயங்கரமான வீழ்ச்சி இந்திய வங்கித்துறையில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது  நாட்டில் உள்ள தனியார் வங்கிகளின் செயல்பாடு களைப் பற்றி அதிர்ச்சிகரமான கேள்விகளை எழுப்புவது மட்டுமல்ல; வங்கிகளை ஒழுங்காற்று செய்யும் இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு குறித்தும் அதில் அடைந்துள்ள தோல்வி குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது. அதனால்தான், யெஸ் வங்கியின் திவால் என்பது இந்திய நாட்டின் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான உதாரணம் என்று கடுமையான வார்த்தைகளால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சாடியிருக்கிறது.  யெஸ் வங்கியின் கடன் கணக்கு 5 ஆண்டுக் காலத்தில் மிகப்பெரும் உச்சத்தை எட்டி யிருக்கிறது. அந்தக் கணக்கே நமக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மார்ச் 2014ல் வெறும்  ரூ.55,633 கோடியாக இருந்த யெஸ் வங்கியின் கடன் கணக்கு மார்ச் 2019ல் ரூ.2,41,999 கோடி யாக அதிகரித்திருக்கிறது. மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்தப் பெரும்  கடன் தொகைகள் கைமாற்றி விடப்பட்டுள்ளன. கடன் வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் அக்கட்சிக்கும் சாதகமானவை. இதில் முக்கியமான ஒரு கார்ப்பரேட் கடனாளி அனில் அம்பானி என்பதும், அம்பானியின் நிறுவனங்களுக்கு மோடி அரசின் ஆதரவு உள்ளது என்பதும் யெஸ் வங்கியின் பணத்தை அனில் அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கூட்டுக் களவாணிகள்தான் சூறையாடியிருக் கிறார்கள் என்பதும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.  யெஸ் வங்கியில் மக்கள் சேமித்த பணத்தை இதுபோன்ற கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல் களுக்கு கடன் என்ற பெயரில் கைமாற்றிவிட்ட தில் அந்த வங்கியின் தலைவருக்கும் வங்கி நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதுதொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், வங்கியின் நிறுவனர் ராணா கபூர், டி.எச்.எப்.எல் நிறுவனத்திற்கு அதிகமான தொகையை கடன் கொடுப்பதற்கு கைமாறாக ரூ.600 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்றிருப்பதாக அமலாக்கப்பிரிவின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் டிஎச்எப்எல் நிறுவனம் மட்டுமல்ல, சுமார் ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு யெஸ் வங்கியின் சேமிப்புப் பணத்தை அனில் அம்பானி உள்பட  பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திருப்பி விட்டதற்காக எத்தனை ஆயிரம் கோடிகள் யார் யாருக்கு கைமாறியதோ என்ற அதிர்ச்சிகர மான கேள்விகள் காத்திருக்கின்றன.  இதில் குறிப்பாக ரிசர்வ் வங்கியின் தலையீடு ஏதும் இல்லை என்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. டெபாசிட்தாரர்களின் நலன்கள் இவர்களால் காவு கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது, திவாலாகிப்போன யெஸ் வங்கியின் 49சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி வாங்கிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி மூலமாக மோடி அரசு உத்தரவு போடுகிறது. ஸ்டேட் வங்கியை யும் திவாலாக்கும் முயற்சி இது. இதில் குற்றவாளிகள் யெஸ் வங்கியின் நிர்வாகிகள் மட்டுமல்ல, இதற்கு துணைபோன மோடி அரசும் தான்!

;