headlines

img

பிரதமரின் பேச்சில் திசை திருப்பப்படும் உண்மைகள்...

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உண்மைகளுக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத வகையில் பேசியுள்ளார். 

தேர்தல் பிரச்சாரம் மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பிரச்சாரத்தை அயோத்தியில் ராமர் கோவில் எழுப்பப்படுவதை கொண்டாட வேண்டிய நேரமிது என்று கூறியுள்ளார். பிரதமர் தன்னுடைய கூட்டங்கள் அனைத்திலும் ராமர்கோவில் கட்டுவது தங்களுடைய மகத்தான சாதனை என்ற பாணியில்தான் பேசி வருகிறார். இதன் மூலம் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர்நியாயப்படுத்துகிறார் என்றே பொருள்.குடியுரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பலர் குடியுரிமையை இழந்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் கூறினார்கள். 

ஆனால் அந்த சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டுஆகிவிட்ட நிலையில் யாரும் குடியுரிமையைஇழக்கவில்லை என்றும் பிரதமர் கூறியிருந்தார். சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதுஎங்கேயும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இதை நிறுத்தி வைத்துள்ளனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது  பலர் குடியுரிமையை இழப்பார்கள். இந்த சட்டத்திற்கு முன்பே பலரது குடியுரிமையை பறித்தவர்கள் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் யாருடைய குடியுரிமையை பறிக்கவில்லை என்கிறார்கள். பிறகுஏன் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள்.  இந்த கத்தி இப்போதைக்கு பரணில் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.

தாங்கள் இடஒதுக்கீட்டை பாதுகாத்து வருவதாகவும் பிரதமர் மோடி பீற்றிக் கொண்டுள்ளார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வெட்டிச்சுருக்கி பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றி வருவதுதான் இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் லட்சணமா? மேலும் அகில இந்திய தொகுப்பில் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கு முட்டுக்கட்டை போடுவதன்மூலம் சமூக நீதியை மறுப்பது யார் என்றும்நாடறியும்; பீகாரும் அறியும்.தன்னுடைய தேர்தல் வாக்குறுதி எதையும்நிறைவேற்றாத பிரதமர் மோடி அனைத்துக் கூட்டங்களிலும் பயங்கரவாத தாக்குதலை தம்முடைய அரசு சிறப்பாக முறியடித்துவிட்டதாகவும், அண்டை நாடுகளுடனான மோதலில் சாதனை படைத்துவிட்டதாகவும் புனைவுகளை தொடர்ந்து பேசி வருகிறார். 

மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்யாமல் குறுகிய நோக்கில் வெறியை விசிறி விடுவதாகவே அனைத்து தேர்தல்களிலும் மோடி தன்னுடையபிரச்சார வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பீகார் மக்கள் பாஜககூட்டணியை நிராகரிப்பார்கள் என்பதையே கள நிலவரம் காட்டுகிறது.
 

;