headlines

img

ஊரடங்கு நீட்டிப்பும் விஸ்வரூபமாகும் பிரச்சனைகளும்

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது. சமூக ஊரடங்கை மே 17ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதை  மக்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பது  குறித்த எந்த ஆலோசனையும் நடந்ததாகத் தெரியவில்லை. வேலைக்குச் செல்ல முடியாமல் மக்கள் தொடர்ந்து வீட்டிலேயே முடக்கப் பட்டிருக்கும் நிலையில் அவர்களது வாழ்வாதாரம் குறித்த கேள்வி மேலும் மேலும் விஸ்வரூபம் எடுக்கிறது.

தமிழக அரசும் கூட மாநில மக்களின் பிரச்சனையை கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை. பி.எம்.கேர்ஸ் என்ற பெயரில் மத்திய அரசு நிதி வசூல் செய்கிறது. ஆனால் அந்த நிதியிலிருந்து எந்தவொரு மாநிலத்திற்கும் இதுவரை நயா பைசாக் கூட வழங்கப்படவில்லை. பிரதமர் நடத்தும் காணொலி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் நிதித் தேவை குறித்து கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. கேரளம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இத்தகைய கோரிக் கைகளை முன்வைக்கின்றன. ஆனால்  மத்திய அரசு இதுகுறித்து கவலைப்படுவதாகவே தெரியவில்லை. இதுகுறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்தை ஒருங்கிணைத்து அழுத்தம் கொடுக்க அதிமுக அரசு மறுக்கிறது.

இப்போது ஏற்பட்டுள்ள - முன்னெப்போதும் இல்லாத அபாயகரமான நிலையையும் கூட  மத்திய - மாநில ஆளுங்கட்சிகள் தங்களது  சொந்த செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற் கான வாய்ப்பாகவே கருதுகின்றன. 

தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் 7 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுவதாக அமைச்சர்கள் தம்பட்டம் அடிக்கின்றனர். அம்மா உணவகம் என்பது அதிமுகவினரின் கூடாரமாகவே மாற்றப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சிகள் இதற்கு உதவ முன்வந்தால் கூட  மறுக்கப்படுகிறது. 7லட்சம் பேருக்கு உணவு தரப்படுகிறது என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால்கூட அது போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் அரிசி ரேசன் கார்டு வைத்துள்ள வர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப் படும் நிலையில் கூடுதலாக ரேசன் கார்டுதாரர் களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. வாடகை வீடுகளில் குடியிருப்போர் கடந்த மாதமே வாடகையை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த மாதம் இது  இன்னமும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. பல இடங்களில் வாடகைதாரர்கள் வெளி யேற்றப்படுவதாக செய்திகள் வருகின்றன. 

ஒவ்வொரு குடும்பத்திலும் வருவாய் இல்லாத நிலையில் வயிற்றுப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெரும் தலைவலி யாக மாறியுள்ளது. மத்திய அரசோ இவர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல உதவக்கூட மறுக்கிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலை யில் தரப்பட்ட தொகை மட்டும் போதுமானதல்ல. எனவே நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் கூடுதலான நிவார ணத்தை அறிவிக்கவும் ஊரடங்கு முடிவடைந்த பிறகு  சிறு-குறு தொழில்கள் இயங்குவதற்கான உதவியையும் செய்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். மாறாக கார்ப்பரேட் முதலாளிகளைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

 

;