headlines

img

குடிகெடுக்கும் முடிவு

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் வாழ வழியின்றி தவிக்கிறார்கள். இதுவரை உருப்படியான  நிவாரணம் எதையும் மத்திய அரசு வழங்கவில்லை. மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீட்டை செய்யவும் இல்லை.

தமிழக அரசைப் பொறுத்தவரை அறிவிக்கப்பட்ட நிவாரணம், தரப்பட்ட நிதி மற்றும் ரேசன் பொருட்கள் யானை பசிக்கு சோளப்பொரி என்ற அளவில் கூட அமைய வில்லை. அனைத்துப் பகுதி மக்களும் வேலை வாய்ப்பு இல்லாமல் வீடுகளில் புழுங்கிக் கொண்டி ருக்கும் நிலையில், அதுகுறித்து மாநில அதிமுக அரசு எந்தக் கவலையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. 

மூன்றாவது கட்டமாக மே 17ந்தேதி வரை  ஊரடங்கை நீட்டித்திருக்கும் நிலையில் பொதுப் போக்குவரத்து உட்பட எந்தத் தளர்வும் அறி விக்கப்படவில்லை. ஆனால் அவசர அவசர மாக டாஸ்மாக் கடைகள் மே 7ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்பு பல  குடும்பங்களில் கோடை இடியாக இறங்கியிருக்கிறது.

தமிழகத்தை நோய்த் தொற்றிலிருந்து பாது காக்கவும், ஊரடங்கினால் இடுப்பொடிந்து கிடக்கும் பொருளாதாரத்தை சீர்செய்யவும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். ஆனால் தவிர்க்கமுடியாத அத்தியாவசிய தேவையாக அதிமுக அரசு மதுக்கடை திறப்பை மட்டுமே  கருதுவது வேதனையானது. பல தொழிற் சாலைகள் திறக்கப்படவில்லை. சிறு-குறு தொழில்கள் அழியும் நிலையில் உள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை குறிப்பிட்ட நேரம்திறப்பதற்குகூடஏராளமான நிபந்தனைகள் தேநீர் கடைகள், உணவகங்கள் கூட திறக்கப்படாதநிலை. ஆனால் டாஸ்மாக் கடையை மட்டும் திறப்பதில் இவ்வளவு ஆர்வம் ஏன்?

தனிமனித இடைவெளி என்பது இந்த நோய்த்தொற்றை தடுக்க அவசியம் என்று மாநில அரசும் மத்திய அரசும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்படுவதால் தனிமனித இடைவெளி என்பது முற்றிலும் கேள்விக்குறியாகும். ஏற்கெனவே திறக்கப்பட்ட மாநிலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தப்படும் அளவுக்கு சென்றிருக்கிறது. 

மறுபுறத்தில் வருவாய் இல்லாமல் குடும் பங்கள் தள்ளாடும் நிலையில், மதுக்கடைகள் திறப்பால் குடும்ப கட்டமைப்பே ஆட்டம் காணும் அளவுக்கு விபரீத நிலைமை ஏற்படும். 

மதுக்கடை திறப்புக்கு மாநில ஆட்சி யாளர்கள் வித்தியாசமான வியாக்கியானங் களை தருகின்றனர். அடுத்த மாநிலத்திற்கு குடி காரர்கள் செல்வதை தடுக்கவே இங்கு திறப்ப தாகவும், அரசுக்கு வருவாய் தேட வேறு வழி யில்லை என்றும் கூறுகின்றன. டாஸ்மாக் கடைக்கு வரும் வருமானம் என்பது சொந்த மக்க ளின் வயிற்றுக்கு செல்ல வேண்டிய பணம் என்கிற குறைந்தபட்ச பரிவு கூட மாநில ஆட்சியாளர் களுக்கு இல்லை.

பொது முடக்கத்தால் ஓரளவு கட்டுப்படுத்தப் பட்ட நோய்த் தொற்றை ஒரே நாளில் பரப்பிவிட செய்யும் முயற்சியே டாஸ்மாக் கடை திறப்பு ஆகும். தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரி விக்கும் நிலையில் இந்த முடிவை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

;