headlines

img

கொத்தடிமையாக்கும் முயற்சி...

பாஜக தலைமையிலான மத்திய மோடி அரசுதமிழகத்தை  பல்வேறு வழிகளில் வஞ்சித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தின் பொருளாதாரத்தையே  சீர்குலைத்திடும்  வகையில் ரிசர்வ் வங்கியின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

முன்னுரிமை பிரிவுகளுக்குக் கடன் வழங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில் குறைந்த கடன் பெறும் மாவட்டங்களின் முன்னுரிமை பிரிவிற்கு அதிககடன் வழங்க முனைகிறது. இது வரவேற்கத் தக்கமுடிவுதான். ஆனால் அதற்காக ஏற்கனவே கடன்பெற்று வரும் பல மாவட்டங்களைக் கடன் பெறமுடியாத மாவட்டங்களாக மாற்றுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். ஒருவர் உடல் நலன்குன்றியிருந்தால் அவரை காப்பாற்ற முயற்சிஎடுக்கவேண்டும். அதுவே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்?  மாறாக  உடல்நலத்தோடு இருக்கும் மற்றவர்களை நோயாளிகளாக  மாற்றுவது எப்படிச் சரியான நடவடிக்கையாக  இருக்கும். அந்த வேலையைத்த்தான்தற்போது மத்திய அரசு செய்கிறது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களையும் அதிக கடன் பெற்றுவரும் முன்னுரிமை மாவட்டங்களின் பட்டியலில் இணைத்திருக்கிறது. அப்படியென்றால் இந்த மாவட்டங்களுக்கு இனி முன்னுரிமை அடிப்படையில் கடன் கிடையாது என்பதேபொருள்.  ஒரு மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிக கடன் பரிமாற்றம் இருக்கிறது என்றால், கடின உழைப்புடன் கூடிய முன்னேற்றத்திற்கான இயக்கமாகவே பார்க்க வேண்டும்.  தமிழக மக்களின் ஒட்டு மொத்த உணர்வையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் மிகச்சரியாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘’ரிசர்வ்வங்கியின் புதிய கொள்கை நியாயமற்றதாகவும், பிற்போக்குத்தனமாகவும், பாரபட்சமாகவும் இருக்கிறது’’ என்பதையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். 5 டிரில்லியன் பொருளாதாரம் என்றுவாய்ப்பந்தல் போடும் பிரதமர் மோடி, அதற்காக எந்த உருப்படியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மாறாக ஊசலாடிக் கொண்டிருக்கும்  பொருளாதாரத்தையும் புதைகுழியில் தள்ளும் வேலையைத்தான்  செய்கிறது.

ஏற்கனவே தமிழகத்திற்கு தரவேண்டியஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ. 12 ஆயிரத்து 250கோடியை  மோடி அரசு தர மறுக்கிறது. இத்தகையஇழப்பீடு வழங்குவதை 101வது அரசியலமைப்புதிருத்தச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி (மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குதல்) சட்டம் தெளிவாகஉறுதிப்படுத்துகிறது. ஆனாலும் மோடி அரசுசட்டத்தை அப்பட்டமாக மீறுகிறது.கொரோனாவால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தடை இல்லாத கடன் வழங்குவதன் மூலமே இழந்த பொருளாதாரத்தை மீண்டும் புதுப்பிக்க முடியும். கடன் வரவை தடுக்கும் நடவடிக்கைகளை மோடி அரசு உடனே ரத்து செய்திட வேண்டும். தமிழகம் பாஜகவை நிராகரித்தது என்பதற்காகத்  தமிழகத்தையே கொத்தடிமையாக மாற்ற மோடி அரசு முயன்றால் அது எதிர்விளைவுகளைத்தான் உருவாக்கும். அந்த முயற்சி ஒரு போதும் நிறைவேறாது.
 

;