headlines

img

சுங்கம் என்றொரு பங்கம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்துப் பகுதி மக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் பன் மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கெனவே வேலை இழந்து தவிக்கும் ஏழை-எளிய மக்கள் கடுமை யான விலைவாசி உயர்வாலும் இரட்டைத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 

பல இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. விலைவாசியை குறைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையை யும் மோடி அரசு எடுக்கவில்லை. சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந் துள்ள போதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப் படவில்லை என்பது மட்டுமல்ல, சமீபத்தில் கலால் வரியை உயர்த்தியதன் மூலம் விலையையும் உயர்த்தியது மத்திய அரசு. 

பொதுப் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ம்தேதி முதல் சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஓரளவு அனு மதிக்க முடிவு செய்யப்பட்டது. நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு செய்யப்படவில்லை.

இந்த இக்கட்டான நேரத்தில் விலைவாசியை குறைத்து மக்களுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சுங்கச் சாவடிகளை நாடு முழுவதும் மீண்டும் இயங்க அனுமதி அளித்துள்ளது. 

வாகனங்கள் எதுவும் ஓடாத நிலையில் சுங்கச் சாவடிகளை மூடி வைத்திருந்ததால் யாருக்கும் எந்தப் பலனும்இல்லை. சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீண்டும் இயங்க துவங்கிய வுடனேயே சுங்கச் சாவடியை திறந்தது மட்டு மின்றி கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பது சகித்துக் கொள்ள முடியாத அநியாய நடவடிக்கையா கும். என்ன செய்தாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று ஈவிரக்கமற்ற முறையில் மத்திய அரசும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் நடந்து கொள்கின்றன.

தமிழகத்தில் இயங்கும் 48 சுங்கச் சாவடிகளில் 26 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 12 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், வர்த்தக அமைப்புகளும், லாரி உரிமையாளர் அமைப்பு களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் சுங்கச் சாவடியை மீண்டும் திறந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட மத்திய அரசு மறுக்கிறது.

4 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பரா மரிப்புச் செலவாக மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படும். குறைந்தபட்சம் 6 மாதங்க ளுக்காவது சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் எதையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. சுங்கச்சாவடி என்பது இரவு - பகலாக நடந்து வரும் கொள்ளையே அன்றி வேறு இல்லை. ஒரு அரசாங்கமே இந்தக் கொள்ளைக்கு அனுமதி அளிப்பதும் துணை நிற்பதும் வெட்கக்கேடனாது.

;