headlines

img

இழுத்தடித்து ஒழிக்கும் உத்திதான் இது...

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிஅதிர்ச்சியளிக்கிறது. 

நீட் தேர்வு என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு நுழைவது தடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு சிறு நிவாரணமாக அரசுப்பள்ளியில் பயின்றமாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கவகை செய்து தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார்.இந்த உள்ஒதுக்கீட்டை கிடைக்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு ஏற்பவே ஆளுநர் செயல்படுகிறார் என்பது தெளிவு. இந்தாண்டு சேர்க்கையின்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது மிகப் பெரியகேள்விக்குறியாக உள்ளது. 

மறுபுறத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியது.இதற்கான சட்ட நடைமுறைகளை மூன்று மாதகாலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் பணித்தது. நீதிமன்ற விசாரணையின்போது மத்திய அரசும், அகில இந்திய மருத்துவக் கவுன்சிலும் முன்னுக்குபின் நிலைபாடுகளை எடுத்து குழப்பம்செய்தன. அந்தந்த மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை அந்தந்த மாநிலங்களில் நடைமுறைப்படுத்தலாம் என்ற தன்னுடைய விதியை மருத்துவக் கவுன்சில் மறுதலித்தது. இந்த இடஒதுக்கீட்டை தடுக்கும் எண்ணம் இல்லைஎன்று கூறிக்கொண்டே இதைக் கெடுப்பதற்கானஅனைத்து வாதங்களையும் மத்திய அரசு தரப்பில்முன் வைத்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், உயர்நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது என்றும் கூட மத்திய அரசுகூறியது. ஆனால் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற விசாரணையை தடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்தாண்டு அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுஉச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவை நிராகரித்து கைவிரித்துவிட்டது. நாடாளுமன்றத்தில் உரிய விவாதமின்றி அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதாரரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை அரசாணை மூலம் வழங்கிய மத்திய அரசு,நீண்டகாலமாக கோரப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மறுப்பது சமூக நீதிக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானது. இந்தாண்டுமட்டுமல்ல, எப்போதும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என்பதே மத்தியஅரசின் எண்ணம். காலப்போக்கில் சமூக நீதிஅடிப்படையிலான அனைத்து இடஒதுக்கீட்டையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற ஆர்எஸ்எஸ்அமைப்பின் கருத்தியலே இதற்கு காரணம் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  
 

;