headlines

img

இந்தியப் பெருமந்தம்

இந்திய நாட்டின் மக்களது வாங்கும் சக்தி கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது என்ற உண்மையை தேசிய புள்ளியியல் ஆணையம் (என்எஸ்சி) கண்டறிந்துவிட்டது; ஆனால், அந்த அறிக்கையை வெளியிடுவது இல்லை என்று மத்திய அரசின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஆணை யம் முடிவு செய்திருக்கிறது. இந்திய பொருளாதார வல்லுநர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூட, பாஜக ஆட்சியாளர்கள், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணா விட்டா லும் கூடபரவாயில்லை; நெருக்கடி இருக்கிறது என்று ஒப்புக் கொண்டாலே போதும் என்ற அளவிற்கு பேச நேர்ந்திருக்கிறது.

மோடியின் ஆட்சியில் இந்தியா வரலாறு காணாத பொருளாதார பெரும் மந்தத்தில் சிக்கி யிருக்கிறது. ஆலைகள் மூடப்பட்டு, தொழில்கள் அழிந்து, வேலைகள் பறிக்கப்பட்டு, கூலிகள் குறைக்கப்பட்டு பெருவாரியான மக்களின் கைகளில் பணப்புழக்கம் வீழ்ச்சியடைந்து, எதை யும் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். இதனால் உற்பத்தி பொருட்களுக்கான கிராக்கி வீழ்ந்திருக்கிறது. அதை வாங்குவதற்கான நுகர்வோர் செலவினம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதல்முறையாக வீழ்ந்திருக்கிறது என்பதைத் தான் தேசிய புள்ளியியல் ஆணையம் கண்டறிந்திருக்கிறது. 

இதுதொடர்பாக, கடந்த ஜனவரி 15 அன்று நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில், அதன் தலைவர் பிமல் குமார் ராய், இந்த ஆய்வ றிக்கையை வெளியிடுவதற்கான ஆலோ சனையை முன்மொழிந்திருக்கிறார். ஆனால் ஆணையத்திற்குள் இருக்கிற முதன்மை புள்ளியியல் அதிகாரியான பிரவீன் ஸ்ரீவஸ்தவா, ஆய்வறிக்கையை வெளியிட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். முரண்பாடு எழுந்த நிலையில், ஆய்வறிக்கையை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவலை தனது தோல்வியாக புள்ளியியல் ஆணைய தலைவர் பிமல் குமார் ராய் வேதனை யுடன் வெளியிட்ட தகவல் பிசினஸ் ஸ்டேண்டர்டு ஏட்டில் வெளியாகியிருக்கிறது. 2017- 18 ஆண்டை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் கிராமப்புற மக்களின் நுகர்வு செலவினம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது தெரியவந்தது.

2011- 12 இல் இந்திய கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒருவர், மாதம் ஒன்றுக்கு மேற்கொண்ட செல வினம், சராசரியாக ரூ.1501 ஆக இருந்தது; 2017 - 18 இல் இது 3.7 சதவீதம் வீழ்ந்து ரூ.1446 ஆக சரிந்தது என்று தெரியவந்தது. அதை விட இன்னும் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பது உள்பட இந்திய நுகர்வோரின் - அதாவது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவு உள்ளிட்ட அன்றாட வாழ்வியல் செலவினங்கள் மிகப் பெரிய அளவிற்கு வீழ்ந்துள்ளது என்பதைத் தான் இப்போது மோடி அரசாங்கம் மறைக்க முடிவு செய்திருக்கிறது.

புள்ளி விபரங்களை மோடி அரசு மறைத்து விடலாம்; ஆனால் பொருளாதார பெருமந்தம் என்கிற மிகப் பெரிய கறை மேலும் மேலும் அதிகரித்து வருவதை மறைத்துவிட முடியாது.

;