headlines

img

சிறுகதை - அந்தப்புரத்தில் ஒரு மகாராணி

ஓடுவதற்கான வலு முற்றிலும் அற்றுப்போனது! இளைப்பு கலந்த ஆழ் பெருமூச்சோடு வாய்வழியே எச்சில் திரவமும் ஆறாய் வடிகிறது. உடம்பெல்லாம் ஊரும் வியர்வைச் சுரப்பிகளைப் போல மனம் முழுக்க பெருக்கெடுத்த திகிலோடு அந்த இருளைக் கிழித்தபடி நிலவொளியின் உதவியோடு முடிந்த மட்டும் விரைந்து கொண்டிருக்கிறேன். பின்னிட்டுப் பார்க்கையில் தீப்பந்தங்கள் குழு சேர எனை விரட்டி வந்து கொண்டிருக்கின்றன. ‘பிடி..பிடி’ என்கிற மனித சத்தங்களோடு குதிரைகளின் குளம்பொலிகளும், கேடயங்களின் உரசல்களும் காதுகளில் மின்னலாய் புலப்பட தூரத்திலிருந்து சடிதியாய் பாய்ந்து வந்த ஈட்டிகளில் இரண்டு என்னையும் தாண்டிப்போய் நிலத்தில் சக்..சக்-கென குத்தியாடியது. அது நிமித்தம் தடுமாறிய நான் எனக்கெனவே விரித்தார் போலிருந்த மொட்டைக் கிணற்றின் மேல் அடியெடுத்து வைக்க ‘ஆ….ஆ…’-வென்ற அலறலோடு டமாரென உள்ளே விழுகிறேன். அடுத்த கணமே ஈட்டிகளும், அம்புகளும் சலார் சலாரென கிணற்றைக் குறி வைத்துப் பாய்கின்றன. சரீரத்தை ஆயுதங்கள் ஊடுருவியதில் குருதி ஊற்றெடுத்து நீரோடு கலக்கத் துவங்கியது. துரத்தி வந்த தீப்பந்தங்கள் மேலே வட்டமாய் சூழ்கின்றன. கண்களை இருள் கவ்விக் கொள்ள தத்தளிப்பதற்கான திராணியும் இன்றி மெல்ல மெல்ல மூழ்க ஆரம்பிக்கிறேன். “எந்திரிங்கப்பா… டைம் ஆச்சு… டீ வச்சிருக்கே. எந்திரிச்சு குடிங்க” செவிகளில் புலப்பட்ட இக்குரலினால் பரபரப்புடன் கண் விழித்தேன்… “அப்ப நா கெணத்துக்குள்ள விழுகலயா…!” அந்த நாளில் எனது முதல் வார்த்தை இப்படியாய் இருந்தது.

“என்னப்பா காலங் காத்தால மூஞ்சியக்கூட கழுவாம எந்திரிச்சவொடனே உளறிக்கிட்டு… கனவு ஏதும் கண்டீங்களா…” சலனமில்லாமல் கேட்டுவிட்டு உள் அறைக்குள் நடந்தாள்.  ‘ஆம்’ என நானாக தலையாட்டிவிட்டு ஃபேஸனில் முகம் கழுவ எழுந்தேன். இதுவரை விதவிதமாக எவ்வளவோ சொப்பனங்களைக் கண்டிருக்கிறேன். விடிய விடிய அமெரிக்க தேசம் நோக்கி விமானத்தில் பறப்பது போல், சிட்டுக் குருவியின் கூட்டிற்குள் விருந்தாளியாய் நுழைவது போல், வன விலங்குகளும் நானும் உரையாடுவது போல், அரசவையில் கவி பாடுவது போல் மற்றும் பார்த்த, நண்பர்களிடம் உறவுகளிடம் பேசிப் பழகிய நிகழ்வுகளே கூட கனவுகளாய் வந்து இன்பம், துன்பம், சோர்வு, உற்சாகம் என பற்பல உணர்வுகளை என்னுள் அலைபாய விட்டுச் சென்றிருக்கின்றன. ஆனால் இது சற்று வித்யாசமானதாக இருக்கிறது. உயிர் பயத்தை காட்டிவிட்டதாகச் சொல்வார்களே அப்படியிருக்கிறது… ஏன் என்னைத் துரத்த வேண்டும்? ஏன் கிணற்றில் விழுந்து மாள வேண்டும்?  இக் கேள்விக்கு என்னிடமே விடை இருக்கிறது! சிறு வயதிலே எங்கள் வீட்டிற்கு ஒரு ஜோசியக்காரர் வருவார். அப்பாவின் நண்பர். நன்கு வெளுத்த கரை வேட்டியும், கலர் சட்டையும் அணிந்திருப்பார். முன்புறம் வழுக்கையும் பின்புறம் கிப்பியாய் தொங்கிய தலை முடியும் வரைந்தார் போன்ற மீசையும் கொண்டிருப்பார். ஜோசியம் பார்த்தலென்பது அவருக்கு ‘பகுதி நேர வேலை’ மற்றபடி கடமைக்காகத் திறக்கப்படும் பெட்டிக் கடை ஒன்றும் வைத்திருந்தார்.  அடிக்கடி வீட்டிற்கு வருபவர் எனக்கும் உடன் பிறப்புக்களுக்கும் ஏற்கனவே அப்பா எழுதி வாங்கி ட்ரெங்குப் பெட்டிக்குள் வைத்திருக்கும் ஜாதக நோட்டுக்களை வாங்கி ஆராயும் முனைப்பில் கிடப்பார். குருகுலத்தில் கல்வி பயி லும் மாணாக்கர்களைப் போல அம்மாவும் அப்பா வும் பய பக்தியோடு முன்னே அமர்ந்து கொள்வர்.  முடிவில் டீ காபி உட்பட தட்டில் வைத்த வெற்றிலை சுருள் பாக்குகளுடன் தட்சணையை யும் வாங்கிக் கொண்டு கிளம்பி விடுவார்.  

அப்படி ஒரு முறை வந்த போது மாற்று கருப்பொருளாக எனது முன் ஜென்மம் குறித்து சில சம்பவங்களை அவர் சொன்னதாக கேள்விப்பட்டேன். அந்நாட்களில் பக்கத்து வீடு  எதிர்த்த வீடு, வருவோர் போவோர் என்று நிறைய  பேரிடம் அம்மா அக்கதையை ஒப்பித்திருக்கிறது. “எக்கா இவெ போன ஜென்மத்துல அரமணையில காவக்காரனா இருந்திருக்கானாம். அங்க அந்தப்புரம்னு ஏதோ இருக்குமாம்ல… அதுக்குள்ள அரசனுக்கு எக்கச்சக்கமான பொண்டாட்டிகளாம்… அதுல ஒருத்தி இவன விரும்பியிருக்கா… இவனுங் காதல் பண்ணியிருக்கியான். எப்பிடியோ ரெண்டும் ஒரு நாள் தப்பிச்சுப்போன நேரம் அரசனுக்குத் தெரிஞ்சு வெரட்டிப்போயி அவளப் புடிச்சிட்டானாம்… இவெ தப்பிச்சு ஓடுறேன்னு போயி கெணத்துல விழுந்து உயிர விட்ருக்கியான்…” விபரமறியா வயதில் கேட்ட சம்பவத்தை வளரும் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்பவாறு நானே மனத்திரையில் காட்சிகளாய் தீட்டிக் கொள்வேன். கிணறுகள், திரையில் வரும் அரசவை, அரண்மனை, அந்தப்புரம், காவலாளிகளின் காட்சிகளையெல்லாம் காணும் போது நானும் கற்பனை வெள்ளத்தில் நீந்த ஆரம்பித்துவிடுவேன். மங்கிய பிம்பத்தில் அந்தப்புர அழகி ஒருத்தி என்னைத் தழுவுகிறாள்… “கண்ணே கண்மணியே… உறுதியாக உன்னை காப்பாற்றுவேன்… ஓர் நாள் இவ்விடம் விட்டு உன்னை அழைத்துக் செல்வேன்… நாம் இன்பமுற்று வாழலாம்” என அவள் கூந்தலை வருடிக் கொடுக்கிறேன். பின் யாரோ துரத்த ஆரம்பிக்கிறார்கள்.  நாளடைவில் இவை கனவுகளாகவும் பிரசுரமாக ஆரம்பித்தன.

பின் நீண்ட வருடங்கள் காணாமலும் போயின. என்ன கருமாந்தரமோ தெரியவில்லை… திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனான இந்நாட்களில் நேற்றைய இரவில் அது நிமித்தமான சொப்பனம் ரொம்பவே என்னை கலங்கச் செய்துவிட்டது. ‘கனவுகள் வேறொரு உலகிலிருந்து வரு கின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும், அவை  வேறொரு உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன” என உளவியலின் உளப்ப குப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவிய உளநோய் மருத்துவரான ‘சிக்மண்ட் பிராய்ட்’ –ன் கூற்றுப் போலாகிவிட்டது என் நிலை! “அப்புடி என்னப்பா கனவு கண்டீங்க…?” பிள்ளைகளை பள்ளிப் பேருந்தில் அனுப்பிவிட்டு வந்தபின் மீண்டும் கேட்டாள். அமைதியாக இருந்தேன். “ஏங்கிட்ட சொல்லக்கூடாதா…” “அப்புடியெல்லா இல்ல… சொன்னா நீ ஏதும் சங்கடப் படுவியோன்னு…” “அடடடடாஆ… எதுக்குய்யா இந்த ஓவர் பில்டப்பு…. சொல்லுங்க சங்கட்டப்படுறதா வேணாமான்னு அப்புறம் யோசிக்கிறேன்… ம்..” பிறகென்ன! வீட்டின் ஓர் மூலையைக் குறி வைத்துப்பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் சொன்னேன். “ப்..பூ… நல்ல கனவு நல்ல கதை…. அந்த ஜோசியக்காரருக்கு கலைமாமணி விருதுதே குடுக்கனும்... அது எப்பிடிய்யா ஒரு பிக்சர நம்புறமாதிரியே கிரியேட் பண்ணிடறாங்க... இதுல சங்கடப்படுறதுக்கு இல்ல சிரிப்புத்தே வருது... சரி... முன் ஜென்மம், பின் ஜென்மம்... அந்த சேப்டருக்கு நான் வரல... நிறைய்யா பேச வேண்டியிருக்கும். இப்ப உங்க கனவுக்கு வருவோம்...” “ம்’’ “நீங்க அரண்மனைக்குள்ள ஒரு காவலர்… அந்தப்புரத்துல இருக்க எத்தனையோ பெண் கள்ல ஒருத்தி உங்கள விரும்புறா.. நீங்களும்தே… சரி. கனவுல நீங்க மேரேஞ் ஆனவரா?” “இல்ல” “அப்புறமென்ன… அந்த மகாராணியோட சேர்ந்து வாழலாமே…

எதுக்கு உங்கள விரட்டனும்… நீங்க கிணத்துக்குள்ள விழுகனும்”  “நீ என்ன லூசா… அரசனோட அந்தப்புர அழகி கள கூட்டிட்டு ஓடுனா சும்மா விடுவாங்களா?” “விடத்தா மாட்டாங்க… சமீபத்துல நெட்ல ஒரு கட்டுரை படிச்சேன்… நாடாண்ட மன்னர்களின் அந்தப்புர ரகசியங்கள்-ன்னு. அவெ அவெ ஒரு மனைவிய வச்சே ஒழுங்கா வாழாமக் கெடக்காங்கே.. ஆனா இந்த அரசர்கள் பாருங்க இஷ்டத்துக்கு பொண்டாட்டிகளக் கட்டிக்கிட்டு அந்தப்புரம்னு ஒரு இடத்துல அடச்சு வச்சு அவங்களோட வாழ்க்கைய வீணடிச்சுக்கிட்டு..” “ஏம்ப்பா அதுவும் ஒரு கௌரவம்தான… அரசனோட மனைவின்னு..” “நல்லா மண்ணாங்கட்டி கௌரவம்… ஒரு பெண் பிறந்து வளந்ததுக்கே அர்த்தமில்லாம ஆக்கிடறாங்களே… ம்.. அந்த கட்டுரையில நிறைய அரசர்கள் இடம் பெற்றிருந்தாங்க.. அதுல அந்தக் காலத்துல ராஜஸ்தான்ல இருக்க கிஷான்பூர ‘கிஷாந் சிங்’ அப்பிடிங்கிற மன்னர் ஒருத்தரு ஆட்சி செஞ்சாராம்.” “ம்” “அவரு நாப்பது பெண்கள கல்யாண முடிச்சு கூடவே வச்சிருந்தாராம். இதுல கொடுமை என்னன்னா.. அரண்மனைக்குப் பக்கத்திலயே குளிக்கிறதுக்கு குளம் ஒன்னு கட்டி அதுல மன்னர் குளிக்க வர்றப்ப அந்த நாப்பது பேரும் நிர்வாணமா அவர வரவேற்று கூடவே குளிக்கனுமாம்… அதுமட்டுமில்லாம வெளிச்சம் இல்லாத இடத்துல ராணிகளெல்லாரும் கையில விளக்கப் புடிச்சிக்கிட்டு டான்ஸ் ஆடனுமாம்… அதுல யாரோட விளக்கு கடைசி வரையில அணையாம இருக்கோ அவங்க மட்டுமே அந்த ராத்திரியில மன்னர்கூட இருக்க முடியுமாம்… எவ்வளவு கேவளமா இருக்கு பாருங்க… பெண்கள்னா அவ்வளவு கேவலமா போச்சா… இதே மாதிரி ராணி ஒருத்தி நிறைய்ய ஆண்கள மேரேஞ் பண்ணி விளக்க புடிச்சு ஆடவிட்டு கூட்டிட்டுப் போனா ஏத்துக்குவாங்களா?’’ “கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க” “அப்பறம் இன்னொரு சம்பவம்… சாத்கபூர்ல இருக்க நினைவுச்சின்னங்கள் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?” “ம்.. எங்கயோ படிச்ச மாதிரி ஞாபகம் இருக்கு…

பரவாயில்ல சொல்லு” “பதினேழாம் நூற்றாண்டுல இப்ப கர்நாடகாவுல இருக்க பிஜாப்பூர்லதே அந்த சம்பவம் நடந்துச்சாம்… அந்தக் காலத்துல சத்ரபதி சிவாஜின்னாலே எல்லாரும் நடுங்குவாங்களாம்… எப்பேர்பட்ட போர்னாலும் அவருதே ஜெயிப்பாராம்… அப்ப அப்சல்கான்-னு ஒரு அரசன் அவருகூட எதிர்த்து நிக்க துணிஞ்சிட்டானாம்… அந்தாளுக்கு அறுபது மனைவிகளாம். போருக்கு நாள் நெருங்க நெருங்க பதட்டமா ஆகிட்டானாம். அந்த அரச னுக்கு ஜோசியம் மேல அதிக நம்பிக்கையாம். அப்ப அந்த போர் குறிச்சு அவெ ஜோசியக்கார ருகிட்ட கேட்டப்ப தோல்விதா கிடக்கும்னு சொன்னாங்களாம். அத கேட்டு கலங்கிப் போன அரசன் ஒரு வேளை போர்ல நாம இறந்திட்டா மனைவிகள் பின் நாட்கள்ல யாரையும் திருமணம் செஞ்சுடுவாங்களோன்னு நினைச்சு அந்த அறுபது பேரையும் ஒரு இடத்துல ஒன்னா வரவச்சு கொடூரமா கொலை செஞ்சானாம்.. என்னா ஒரு வக்கிரப்புத்தி பாருங்க..” “ம்… ஞாபகம் வந்துருச்சு. நானும் நெட்ல படிச்சிருக்கேன். ச்.சீ அதெல்லா எவ்வளவு கொடும பாத்தியா …” “அவனாவது அறுவது பேரையும் ஒரேடியா கொன்னான்… ஆனா ஒவ்வொரு அரசர்களும் நூத்துக்கணக்குல மனைவிகள்ங்கிற பேருல பெண்கள அந்தப்புரத்துல வச்சு வாழ்நாள் முழுதும் கொன்றுக்காங்க.. ஏன் சாலமோன் மன்னனே ஆயிரம் மனைவிகள வச்சிருந்ததா படிச்சிருக்கமே… அந்த ஆயிரம் பேரும் அநுதினமும் எல்லா விதத்துலயும் சந்தோசமாவா இருந்துருப்பாங்க! அரசனோட மனைவிகள் அப்பிடிங்கிற ஒரு அந்தஸ்த மட்டும் வச்சுக்கிட்டு நாட்டுல இருக்கற மத்த பெண்களப் போல ஃபிரியா எங்கயும் போக முடியாம, வர முடியாம, விரும்புற உணவக்கூட சாப்பிட முடியாம, ஆக்கி போடுறத சாப்டுக்கிட்டு…

எல்லாத்துக்கும்மேல பெண்ணா பிறந்து வளர்ந்து கல்யாணம் ஆனதுக்கே அர்த்தமில்லாம ஆகிடறாங்க… அரசனா இருக்கவங்க அனுதினமும் ஒவ்வொருத்திகூடயும் சந்தோஷமா இருப்பாங்களாம்… பாவம் இந்த அந்தப்புரத்து மகாராணிங்க ஒவ்வொரு ராத்திரியும் ஏங்கிப்போயி கெடக்கனுமாம்… அவங்களுக்கும் வாழ்க்கையில எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்… எல்லாருமே விரும்பி அங்க வந்திருப்பாங்கன்னு நெனைக்கிறீங்களா… எத்தன பேர அழகப்பாத்து அரசர்கள் தூக்கிட்டு வந்திருக்க மாட்டாங்க… பாவம்ய்யா அந்த பெண்கள்… அவங்கள அந்தப்புர அழகிகள்ன்னு சொல்றதவிட அந்தப்புர அடிமைகள்ன்னு சொல்லியிருக்கலாம். கண்டிப்பா அவங்கள்லாம் விடுதலையாகியிருக்க வேண்டியவங்கதான். மன்னர்கள் நாட்டுக்காக எதிரிகள்கிட்ட போராடு னாங்க… மக்களுக்கு நிறைய நல்லதும் பண்ணி யிருக்காங்க.. ஓ.கே. ஆனா அந்தப்புரம்ங்கிற சேப்டர்தான எனக்கு முரன்பாடு” “எப்பா தெரியாத்தனமா ஒரு கனவு கண்டுட்டேன். அதுக்கு இப்ப என்ன பன்னலாம்மங்குற…” “என்னப் பொருத்த வரைக்கும் கனவா இருக்கட்டும் கதையா இருக்கட்டும். ஒரு நியாயம் வேணும்… இந்த கனவுக்கு காரணமே ஒங்க நினைவுகள்தான! அடுத்து ட்ரீம் வந்தா நீங்க கெணத்துக்குள்ள விழுகக் கூடாது…” சிரித்துக்கொண்டே உள் அறைக்குள் நடந்தாள்.  விபரமறியா வயதில் கேட்ட சம்பவத்தை வளரும் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு நானே மனத்திரையில் தீட்டிய காட்சிகளை திருத்தியமைக்க சில மாதங்கள் ஆனது… கனவிலும்தான்!

;