headlines

img

காதலைத் தேடி.. - வரத.ராஜமாணிக்கம்

பாண்டிக்கு காயத்ரியின் முகத்தில் இதுவென்று சொல்ல முடியாத ஒரு வசீகரம் தெரிந்தது. கர்ப்பகிரக அகல்விளக்கைப் போல காயத்ரி இருளின் ஒளியாய் சுடர் விடுகிறாள். இவள் இல்லறத் துணைவியாக கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கம் நெடுநாளாக பாண்டியை வாட்டி வதைத்தது. பஸ் ஸ்டாப்பில் பாண்டியை கடந்து சென்ற காயத்ரி கைப்பேசியில் நேரம் பார்த்து விட்டு பஸ் வரும் திசையை நோக்க ஆரம்பித்தாள். அவளது நடையிலும் உடையிலும் ஒரு ஒழுங்கும் நளினமும் இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் பஸ் வந்து விடும். இன்றாவது தன் எண்ணத்தை வெளிப்படுத்தி விட வேண்டும் என்ற பேராவலில் பாண்டிக்கு மூச்சு விட சிரமமாக இருந்தது. என்னவென்று சொல்வது? ஏற்கனவே மனதில் எழுதி வைத்திருந்த வார்த்தைகள் காணாமற் போயிருந்தன.

பாண்டி பஸ் வரும் திசைக்கு இடம் மாறி நின்றும் காயத்ரியின் பார்வை கிடைக்கவில்லை. பஸ் தேரடி முக்கில் திரும்புவது தெரிந்தது.அடுத்த சில நொடிகளில் பஸ் வந்து விடும். பாண்டிக்கு இதயத்துடிப்பு எகிறியது. அவனும் பஸ் ஏறுவது போல காயத்ரிக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டான். அவள் சூடியிருந்த மல்லிகை வாசம் மனதை பிசைந்தது. “காயத்ரி..” என கஷ்டப்பட்டு இவன் அழைக்கவும் பஸ் இரைச்சலுடன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. காயத்ரி பஸ் ஏற ஒரு அடி முன் வைத்தாள்.அப்பொழுது அவளை நோக்கி கையில் சிறு பாட்டிலுடன் ஒரு இளைஞன் வெறித்தனமாக ஓடி வந்தான். ஒரு நொடியில் நிலைமையை புரிந்து கொண்ட பாண்டி காயத்ரியின் கையைப் பிடித்து அவளைத் தனக்கு பின்புறமாக இழுத்துக் கொண்டான். அதே நேரத்தில் வந்தவன் வீசிய ஆசிட் பாண்டியின் முகம் முழுக்க தெறித்து பரபரவென பற்றி எரிந்தது. காயத்ரி “அய்யய்யோ..” என அலறியவாறே பாண்டியை இறுகப் பற்றினாள். பாண்டி பற்றி எரியும் முகத்துடன் காயத்ரியின் கண்களில் காதலைத் தேடியவாறு மயங்கி அவள் மீது சாய்ந்தான்.

;