headlines

img

பெயரை எழுதவோ பூ எழுத்தால்? - நவகவி

எழுதி எழுதிப் பயன் ஏது- உனை
எழுதாமல் போகிற போது?
         என் - தலை எழுத்தை.....
         மாற்றிய உன்.....
பெயரை எழுதவோ பூ எழுத்தால்?
பொன்னெழுத்தில் மணம் இல்லை என்பதால்!
                                                  (எழுதி)
மேகம் என்றால்.... திசைமாறும்....
வெண்ணிலவைத் தூது விட்டேன்.
சோகத்தினால்....சொரிந்த கண்ணீர்....
தடயத்தை தடத்தில் விட்டேன்.
         பெருமூச்சு உன்னச் சுடும் என்பதால் தென்றலை
         அதனுடன் சேர்த்து நான் இணைத்து விட்டேன்.
         ஒருமூச்சு போதாது ;உயிர்மூச்சுஆயிரம்
         உனக்கு வேண்டும் என ஆசைப்பட்டேன்!
                                                  (எழுதி)
ஐப்பசியில்.... மழை பொழியும்.... உன்
ஆசைமழை என்று பொழியும்?
கைப்பிடிக்குள்.... அடங்கவில்லை....
காதல்வலி என்று ஒழியும்?
         பூபெய்தேன் உன்வழியில்; பூவைக் கண்டு வந்த வண்டு 
         தேன் உனக்கு வேண்டும் என்று சேகரிக்கும்!
         பூப்பெய்தி விட்டவளே! ஆனாலும் உன்மனசு 
         பூப்பெய்தி என்னை விரும் பிட மறுக்கும்!
                                                  (எழுதி)
காலமெல்லாம்.... காத்திருந்தால்....
காலம் ஆகிவிடுவேன்!
நிறைவேறா..... ஆசையினால்.... உனை
நெருங்கி வந்து தொடர்வேன்!
         ஆவியே! தேவியே! ஆவியாய் நான் மாறி
         உன்னை அலைக்கழித்தல் நல்லதா சொல்?
         காவிநான் கட்டவா? உனைக்கட்ட வேண்டாமா?
         பதிலை இப்போதே சொல்லி விட்டுச் செல்!
                                               (எழுதி)

;