headlines

img

உற்பத்தியே செய்யாமல் ஏற்றுமதி எதற்காக?

கொரோனா இரண்டாவது அலை எழுந்துள்ளநிலையில் தடுப்பூசி பற்றாக்குறை என்ற பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. இதுதொடர்பாகஅதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவும் இந்தியாவும் அதைத் தொடர்ந்து ரஷ்யாவும் - ஆகிய மூன்று நாடுகள் மட்டும்தான் உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதிசெய்திருக்கின்றன; ஆனால் அதிகமாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்து மக்களின் உயிர்களைக் காக்க வாய்ப்புள்ள ஒரு பணக்கார நாடு கூட - ஒரு மேற்கத்திய நாடு கூட கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவில்லை. மாறாக அந்த நாடுகளின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தடுப்பூசிகளை பதுக்கிக்கொண்டிருக்கின்றன என்ற செய்திகள் வரத்துவங்கியுள்ளன.

கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை விட இவர்களுக்கு பல லட்சக்கணக்கான கோடி டாலர்களே முக்கியம். உலகில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களில் 50சதவீதத்திற்கும் அதிகமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அமெரிக்கா மட்டும் 14.7 கோடி தடுப்பூசி டோஸ்களை 2021 மார்ச் 30 வரையிலும் பெற்றிருக்கிறது. இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைவிட நான்கு மடங்கு அதிகம் உள்ள ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திற்கே செலுத்தக்கூடிய தடுப்பூசியைவிட 14 மடங்கு அதிகம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஆப்பிரிக்காவுக்கு இப்போது கிடைக்கப்பெற்றிருக்கிற தடுப்பூசி டோஸ்களுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவிற்கு கிடைக்கப்பெற்றிருப்பது 60 மடங்கு அதிகமாகும். பிற நாடுகளுக்கு இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவும் தடுப்பூசிகளை அளித்துள்ளன. இலவசமாகவோ குறைந்த விலையிலோ தடுப்பூசிகளை, மக்களின் உயிர்காப்பதற்காக அனுப்புவது தவறல்ல. ஆனால் தன் நாட்டு மக்களை எந்தவிதத்திலும் காப்பாற்றுவதற்கு தெம்பும் திராணியும் உள்ளசீனாவோ அல்லது ரஷ்யாவோ தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு அளிப்பதுடன் ஒப்பிடும்போது, இந்திய மக்களை துயரத்தின் பிடியில் தள்ளிவிட்டு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்த மோடி அரசு செய்து கொண்டிருப்பதற்குப் பெயர் உலக மக்களை பாதுகாப்பது என்பதல்ல; இந்திய மக்களை மரணத்தின் வாசலுக்கு தள்ளுவது என்பதே ஆகும்.

சீனா இதுவரை 23 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்துள்ளது; அதில் சரிபாதியை - 11.5 கோடி டோஸ்களை ஆப்பிரிக்கா உள்ளிட்ட பலநாடுகளுக்கு அளித்துள்ளது. அதேபோல ரஷ்யாவும் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை பெருமளவில் உற்பத்திசெய்து இலவசமாகவும், வணிக ரீதியாகவும் பிற நாடுகளுக்கு அளிக்கிறது.   ஆனால் இந்தியா இன்னும் உற்பத்தியின் துவக்கத்தில்தான் நிற்கிறது.இந்த நிலையில் ஏற்றுமதி ஒரு கேடா என்ற கேள்விஎழுந்திருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ‘தடுப்பூசி அரசியலுக்கு’ பலியாகாமல் மக்களைக் காப்பதில் கவனம் செலுத்தட்டும் மோடி அரசு.
 

;