headlines

img

குடிமக்களின் உரிமைகளை உயர்த்திப்பிடிக்கும் இரு தீர்ப்புரைகள் -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

இரண்டு உயர்நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இரு தீர்ப்புகள் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்துவ தற்கான அடிப்படை உரிமைகளை காலந் தாழ்த்தாமல் நேர்மையாக உயர்த்திப்பிடித்தி ருக்கின்றன. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வாயம், மகாராஷ்டிர மாநிலத்தில் பீட் நகரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களை அனுமதித்ததற்கு எதிராக கூடுதல் மாவட்ட நடுவர் பிறப்பித்திருந்த ஆணையைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதற்கு இரு நாட்களுக்கு முன்பு, கர்நாடக உயர்நீதிமன்றம், பெங்களூரு காவல்துறையி னர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப்போராட்டங்கள் நடத்துவதற்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144ஆவது பிரிவின்கீழ் பிறப்பித்திருந்த தடை உத்தரவை, சட்டவிரோதமானது என்று கூறி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.  

உயர்மட்ட நீதித்துறையில் சில பிரிவுக ளும், ஏன், உச்சநீதிமன்றமும்கூட அரசமைப் புச்சட்ட உரிமைகளை உயர்த்திப் பிடிப்ப தில் ஒதுங்கிநின்று கொண்டு, தோல்வி அடைந் துள்ள நிலையில், இந்த இரண்டு தீர்ப்பு களும் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

தேச விரோதிகள்,  தேசத் துரோகிகள் என்றழைக்கக் கூடாது

மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்கா பாத் அமர்வாயத்தில் நீதியரசர்கள் நாலாவதே, செவ்லிகார் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வாயம் அளித்துள்ள தீர்ப்பு, கிளர்ச்சி செய்வதற்கு குடிமக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகள் எப்படி அமைதியான முறையிலும், சட்டப்பூர்வமாகவும் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கு நல்லதொரு படிப்பினையாகும். எல்லாவற்றிலும் முதலாவதாக. நீதிமன்றமா னது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரா கக் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களை, “தேசத் துரோகிகள் என்றோ, தேச விரோதிகள் என்றோ அழைக்கக்கூடாது” என்றும், “ஏனெனில் அவர் கள் ஒரு சட்டத்தை எதிர்க்க விரும்புகிறார்கள்” என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பில் மேலும், “நாம் அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்களைப் பரிசீலனை செய்யும்போது, நம்முடைய அரசமைப்புச்சட்டம் மற்றும் சட்டங்கள் உரு வான வரலாறுகளையும் நினைவு கூர்வது அவசியம்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீதிமன்றம், ஒரு வரலாற்றுத் தொலை நோக்குப் பார்வையுடன் கிளர்ச்சி செய்வதற் கான சுதந்திரத்தை விளக்கியிருக்கிறது. “இந்தியா அஹிம்சைவழியில் அமைதியான முறையில் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்க ளின் வழியாகத்தான் சுதந்திரம் பெற்றது. அஹிம்சை என்னும் இந்தப் பாதை இன்று வரையிலும் நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டு மக்களில் பெரும்பாலான வர்கள் அஹிம்சைப் பாதையில் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது நம் அதிர்ஷ்டமாகும். இப்போது நம்முன் உள்ள பிரச்சனையிலும்கூட, மனுதாரர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் தங்கள் எதிர்ப்பி னைக் காட்டுவதற்கு அமைதியானமுறையில் கிளர்ச்சி செய்வதையே விரும்புகிறார்கள்.”   

அதிகார வர்க்கம் மனதில் கொள்ள வேண்டியது

“குடிமக்கள் விடுதலைப் போராட்டத்தின் விளைவாக எய்தியுள்ள ஒரு குறிப்பிட்ட சட்டமானது தங்கள் உரிமைகள் மீதான தாக்குதல் என்று நம்புகிறபோது, அது குடி மக்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்டுள்ள அரசமைப்புச்சட்டத்தின் ஷரத்துகளுக்கு எதிரானதாக இருக்கும்போது, அதனைப் பாதுகாக்கவேண்டியது தங்கள் கடமை என்று அவர்கள் கருதுகிறார்கள் என்பதை அதிகாரவர்க்கம் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் செய்வதற்கு அனுமதிக்கப்படாவிட்டால், அவர்கள் தங்கள் வல்லமையைக் காட்டவேண்டிய சாத்தி யப்பாடுகள் எப்போதும் அங்கே இருக்கின்றன. இதன் விளைவு வன்முறை, குழப்பம், ஒழுங்கின்மை மற்றும் இறுதியாக நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்படும்”.   

மகாராஷ்டிராவில் பீட் நகரில் கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்துவதற்கு,  கூடுதல் மாவட்ட நடுவரால் பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில், காவல்துறை  ஆய்வாளர் அனுமதி அளிக்க மறுத்ததை ஆட்சேபித்து பீட் நகரத்தைச் சேர்ந்த இப்தேகார் ஷேக் என்பவர் தொடுத்திருந்த மனுவை அனுமதித்து நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்திருக்கிறது. தீர்ப்பானது, அரசமைப்புச்சட்டத்தில் பொறிக் கப்பட்டுள்ள குடிமக்களின் அடிப்படை உரிமை களையும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள எந்தச் சட்டத்தையும் எதிர்த்திட அவர்களுக்கு இருக்கின்ற உரிமைகளையும் மிகவும் சிறப்பானமுறையில் வெளிப்படுத்தி இருக்கிறது.

இது ஒரு மரணஅடி

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக அமைதியான முறையில் நடைபெறும் கிளர்ச்சிப்போராட்டங்களை நசுக்குவதற்காக நாடு முழுதும் வகைதொகையின்றி குற்றவி யல் நடைமுறைச்சட்டத்தின் 144ஆவது பிரி வின்கீழான தடை உத்தரவு பயன்படுத்தப்பட்டு வருவதற்கு எதிரான ஒரு மரண அடியாகும். உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில், ஒட்டு மொத்த மாநிலத்திலும் கிளர்ச்சிப் போராட்டங்க ளை நசுக்குவதற்காக 144 தடை விதிக்கப் பட்டிருந்தது. பெங்களூருவில், காவல்துறையி னர் டிசம்பர் 18 அன்று இப்பிரிவின்கீழ் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இதன்மூலம், காவல்துறையினர் ஏற்கனவே டிசம்பர் 19 அன்று நகரத்தில் கிளர்ச்சிப் போராட்டங்க ளுக்கான பேரணிகள் நடத்துவதற்காக அளிக் கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தனர்.  கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடுவதற் காக திரண்டவர்களை, வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா உட்பட மக்கள் திரளை கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்திடுவோம். நீதிமன்றம், காவல்துறையினர் விதித்திருந்த 144 தடை உத்தரவை, சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. காவல்துறை யினர், இத்தகைய உத்தரவு பிறப்பிப்பதற் கான பொருண்மைகள் எதையும் தாக்கல் செய்ய வில்லை என்றும் “காவல்துறையினர் கிளர்ச்சிகளுக்கும், தொந்தரவுகளுக்கும் இடையேயிருக்கின்ற வித்தியாசங்க ளைப் பார்க்காமல் அவை இரண்டும் ஒன்றே என்பதுபோல் நடந்துகொண்டிருக்கின்றனர்,” என்றும் கூறியிருக்கிறது.

ஒரே இரவுக்குள் ரத்து ஏன்?

விசாரணையின்போது, அமர்வாயத்திற் குத் தலைமை வகித்த தலைமை நீதிபதி, நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு கிளர்ச்சிப் போராட்டமும் அமைதியைக் குலைத்திடும் என்று ஆட்சியாளர்கள் எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தார்கள் என்றும், மற்றும் அமைதியான முறையில் கூடுவதற்கு அனுமதி அளித்துவிட்டு பின் ஒரேயிரவுக்குள் அதனை ரத்து  செய்தது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பி இருந்தார். குடிமக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் விதத்தில் ஆட்சியாளர்கள் அனைத்து நிறு வனங்களையும் தங்களுக்கு உடந்தையாக, தங்களின் கைக்கூலிகளாக வசப்படுத்தியி ருக்கக்கூடிய சூழ்நிலையில், இந்த இரு தீர்ப்பு ரைகளும் புதிய காற்றை சுவாசிப்பது போன்று இருக்கின்றன. அரசாங்கத்தை எதிர்ப்பவர்க ளுக்கு எதிராக, அல்லது, சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராகக் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்காத நாளே இல்லை. இந்தியத் தண்ட னைச் சட்டத்தின் 124-ஏ பிரிவின் கீழான தேசத் துரோகக் குற்றப்பிரிவு, சட்டவிரோத நட வடிக்கைகள் தடைச்சட்டம் மற்றும் தேசப் பாது காப்புச் சட்டம் ஆகியவை மத்திய அரசாங்கம் மற்றும் பாஜக ஆளும் மாநில அரசாங்கங்க ளின் கைகளில், தங்களுக்கு எதிராகப் பேசுகிற வர்களைத் தண்டிப்பதற்கான ஆயுதங்களாக மாறி இருக்கின்றன. கடந்த சில வாரங்களாக, பல்வேறு மாநிலங்களிலும் எண்ணற்ற தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக் கின்றன.   

அதிர்ச்சியளிக்கும் வழக்கு

இவற்றில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வழக்கு என்பது இரு பெண்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்காகும். குடியு ரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு பள்ளிக் கூடத்தில் நாடகம் ஒன்றை நடத்தினார்கள் என்றுகூறி, பிடார் (Bidar) என்னும் ஊரில் பெண் தலைமை ஆசிரியர் மீதும், ஒன்பது வயது குழந்தையின் அன்னையின் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.  குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அல்லது மோடி-அமித் ஷாவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக பேசுகின்றவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் வழக்கமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. கருத்துவேறுபாடுகளைத் தெரிவிப்பவர்க ளுக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவை பயன் படுத்துவது அப்பட்டமான சட்டவிரோதமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து 124-ஏ பிரிவை ரத்து செய்திட வேண்டுமென்று கோரிக் கொண்டு வந்திருக்கிறது. அதே சமயத்தில், உச்சநீதிமன்றமும் தேசத்துரோகப் பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைத்திடுவதற்குத் தலையிட வேண்டும். ஏனெனில், ஏற்கனவே இதே உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச்சட்ட அமர் வாயமானது, கேதார்நாத் வழக்கில் அளித் துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளின்படி வன்முறையை நேரடியாகத் தூண்டுவது மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளின் மீது மட்டுமே இந்தப் பிரிவைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்திட முடியும்.

பிப்ரவரி 19, 2020, 
தமிழில் : ச.வீரமணி



 

;